லிபியாவில் தொடரும் தற்போதைய நெருக்கடியானது, அந்நாட்டின் மனிதாபிமான பிரச்சினையையும், அரசியல்-இராணுவ உறுதியற்ற தன்மையையும் தோற்றுவித்துள்ளது.
லிபியாவில் நிகழ்ந்த 2011ஆம் ஆண்டின் அரபு வசந்த ஆர்ப்பாட்டங்களில் தொடங்கிய உள்நாட்டுப் போர், வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளை தொடர்ந்து கடாபியின் கோர மரணத்திற்கும் வழிவகுத்தது.
எண்ணெய் வளம் மிக்க நாடான லிபியாவில் நடந்துவரும் போட்டி அரசுகளுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், மக்கள் பெரும் கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அரசுகளின் மோதல்
தலைநகர் திரிப்போலியை மையமாகக் கொண்டு பிரதமர் அப்துல் ஹமீத் பெய்பா தலைமையில் ஓர் அரசு இயங்கிவருகிறது.
அதேபோல சிர்ட் எனும் கடற்கரை நகரை மையமாகக் கொண்டு ஃபாதி பகாஷா தலைமையில் அரசு ஒன்றும் நடத்தப்படுகிறது. ஃபாதி பகாஷா தன்னை பிரதமராக அறிவித்துச் செயல்பட்டுவருகிறார்.
இருவருமே தனித்தனியே போராளிக் குழுக்களை வைத்திருக்கின்றனர். ஃபாதி பகாஷா தலைமையிலான குழுக்கள் கடந்த சில வாரங்களாகத் திரிப்போலியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் வன்முறைச் சம்பவங்கள் வெடித்திருக்கின்றன.
லிபியாவின் சீரழிவுக்கு முதன்மைக் காரணமே கடாபி தான். 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு கடாபி, மேற்கத்திய கோரிக்கைகளுக்கு அமைய லிபியாவின் அணுஆயுத திட்டத்தை கண்காணிப்புக்கு உட்படுத்தி, லிபியாவில் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் நுழைய அனுமதி அளித்தார்.
ஆயினும் கடாபி, முழுமையாக பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு சரணடையவில்லை என்பதே அமெரிக்காவின் அன்றைய பிரச்சினை.
கடாபியின் ஆட்சிக்கு எதிராக, 2011இல் நேட்டோ அமைப்பின் ஆதரவுடன் பெரும் போர் நடந்தது. அதில் அவர் இறுதியாக கொல்லப்பட்டார்.
இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது.
அமெரிக்கா கொண்டு வருவதாகச் சொன்ன ஜனநாயகமும் சுதந்திரமும் அதன் பொருளாதார நலன்கள் நோக்கியதே.
2011இல் அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்ததாகும்.
வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60சதவீத எண்ணை வளத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர்.
தற்போதைய தரவுகளின்படி, லிபியாவில் 60பில்லியன் பீப்பாய் எண்ணை வளமுள்ளது.
உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு வளத்தில் 3.34சதவீத லிபியாவில் இருக்கிறது.
அமெரிக்க இராணுவ பலமும் தொழில்நுட்ப வல்லமையால் லிபியாவில் தனது பொம்மை அரசை நிறுவி எண்ணெய் வளத்தை தாராளமாக சுரண்டியது.
கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் உள்நாட்டுப் போர், கலவரம், வன்முறைச் சம்பவங்கள் காரணமாக லிபியா அமைதி இழந்து தவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஓரளவு அமைதி நிலவியது போல புலப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் இராணுவத் தளபதி ஹைதாம் தஜோரி தலைமையிலான திரிப்போலி புரட்சியாளர்களின் படையணி எனும் போராளிக் குழுவுக்கும், அப்தெல்-கனி அல்-கிக்லி தலைமையிலான குழுவுக்கும் இடையில் தலைநகர் திரிப்போலியில் தொடர்ந்து கடும் மோதல்கள் நடந்தன.
பிற பகுதிகளிலும் இக்கலவரம் பரவியது. அத்துடன் திரிப்போலியில் உள்ள மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசப்படுவதாகவும், காயமடைந்தவர்களை மீட்கச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் தடுக்கப்படுவதாகவும் லிபியா சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இது போர்க்குற்றம் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறிருக்க, 1951இல் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய லிபியாவில் மன்னராட்சி ஏற்படுத்தப்பட்டது.
இரத்தம் சிந்தாத இராணுவ புரட்சி மூலம் மன்னர் இட்ரிஸை 1969இல் பதவியிலிருந்து அகற்றிய கடாபி நாட்டின் அதிபரானார். அப்போது அவருக்கு 27 வயது.
கடாபி பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே லிபியாவிலிருந்து பிரித்தானிய, அமெரிக்க இராணுவ தளங்களை அகற்றினார்.
எண்ணெய் நிறுவனங்ளுடன் புதிய ஒப்பந்தங்களை செய்ததன் மூலம் லிபியாவின் எண்ணெய் வருமானத்தை அதிகரித்துக் கொண்டார்.
எண்ணெய் கம்பனிகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனாலும் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்ததனாலும் லிபிய மக்களின் தலா வருமானம் பெருமளவு அதிகரிப்பை கண்டது.
பீடோயின் பழங்குடியின பெற்றோருக்கு, பிறந்த கடாபி, தனது பழங்குடியின பின்னணியை விளம்பரப்படுத்துவதில் எப்போதும் பெருமைப்பட்டார்.
தனது விருந்தாளிகளை, நாடோடி கொட்டகையிலேயே வரவேற்பார். அதேபோல, வெளிநாட்டுப் பயணங்களில், அந்த கொட்டகையை கொண்டு சென்று, அதை காட்சிப்பொருளாக வைத்துவிடுவார்.
கடாபியின் ஆட்சியை லிபியாவின் பொற்கால ஆட்சி என்று மக்கள் கூறுவர். கடாபியின் ஆட்சியில் லிபியாவில் வழங்கப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது,
வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது
லிபிய நாட்டில் திருமணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் 60ஆயிரம் திணார் வழங்கப்படும்.
அக்காலத்தில் லிபியாவில் ஆரம்பக் கல்வி மட்டுமல்ல, உயர் கல்வியும் இலவசம். வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பினாலும், அத்தனை செலவுகளையும் அரசே ஏற்கும்.
அத்துடன் கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிபிய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25சதவீதத்தினர் மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83சதவீதமாக உயர்ந்தது.
தேசிய விடுதலைக்கு ஆதரவு
உலகளவில் கிளர்ச்சிகளுக்கும் சுதந்திர போராட்டங்களுக்கும்ஆதரவு அளித்ததன் மூலம் கடாபி அமெரிக்காவுடன் பகைமையை தேடிக்கொண்டார்.
அயர்லாந்து குடியரசு இராணுவம், வெனிசுவலா கிளர்ச்சிக்காரர் ஆகியோருக்கு கடாபி ஆதரவு வழங்கினார்.
அதேநேரம், லிபியா உலக வங்கிகளிடம் இருந்து கடாபியின் ஆட்சியில் கடன் வாங்கியது கிடையாது.
உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆற்றை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமையும் கடாபிக்கு உண்டு
உயர் கல்வி கற்று பட்டதாரியாகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அன்றைய காலத்தில் லிபிய அரசு வழங்கி வந்தது.
லிபிய நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இட்டு வந்தது அந்த அரசு. பிரசவத்தின் போது தாய்க்கு 5500 அமெரிக்க டொலர்களை வழங்கியது.
ஆட்சி கவிழ்ப்பின் விளைவு
2011 அக்டோபர் 20இல் கடாபியின் பிறந்த ஊரான சிரடே நகரை கைப்பற்றிய அமெரிக்க ஆதரவு படைகள் அவரை கொன்றுவிட்டதாக அறிவித்தனர்.
இதன் விளைவின் அறுவடையாக வட ஆபிரிக்க பிராந்தியத்திலும், அரபுலக நாடுகளிலும், லிபிய உள்நாட்டுப் போரின் தாக்கம் மிக வலுவாக உள்ளது.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா-