மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பெர்க் நகருக்கு கொண்டு வரப்பட்டு புனித கில்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்தார்.

அவரது உடல் கார் மூலம் ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டு வரப்பட்டு அங்கு உள்ள புனித கில்ஸ் தேவாலயத்தில் மகாராணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தேவாலயத்தை சுற்றி உள்ள க‌ட்ட‌டங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் உடலைச் சுற்றி ஸ்கொட்லாந்து அரச வழிமுறைப்படி வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டு, அரண்மனை மெய்க்காப்பாளர்களும், வில்லாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பிட்ட இடைவெளி விட்டு, பாதுகாப்பு வளையம் போடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த‌ அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஸ்கொட்லாந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்று, லண்டன் நோக்கி மகாராணியின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு நாளை முதல் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மகாராணியின் உடல் 4 நாட்கள் வைக்கப்படும்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மகாராணியின் உடலுக்கு பல இலட்சம் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version