Site icon ilakkiyainfo

3 முறை இந்தியா வந்த ராணி எலிசபெத்… மரபை மீறி காமராஜருக்கு ராணியே உணவு பரிமாறிய வரலாறு…

முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தபோது, அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்தார்.

புதுடெல்லி, உலக அளவில் அதிகாரம் மற்றும் செல்வாக்கு உள்ளவராக திகழ்ந்த ராணி எலிசபெத் முதல்முறையாக 1961-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார். மேலும் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கும் வந்தார்.

ஆக்ராவில் தாஜ்மஹால் அழகை ரசித்தார். ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட ராணி எலிசபெத் தம்பதிகள் கவுரவிக்கப்பட்டார்கள்.

அப்போது சென்னையில் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜரையும் சந்தித்தார்.

அவரது எளிமையும், மக்கள் சேவையும் ராணியை மிகவும் கவர்ந்தது. சென்னையில் காமராஜர் முன்னிலையிலேயே தனது மகன் ஆண்ட்ரூவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

காமராஜர் இங்கிலாந்து சென்றபோது ராணியின் அரண்மனையில் விருந்து கொடுக்கப்பட்டது.

அந்த விருந்து நிகழ்ச்சியில் மரபை மீறி ராணி எலிசபெத்தே காமராஜருக்கு உணவு பரிமாறி இருக்கிறார்.

வழக்கமாக எந்த தலைவருக்கும் ராணி நேரடியாக உணவு பரிமாறுவது கிடையாது.

இதுதான் மரபு. ஆனால் காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததால் மரபை மீறி விருந்து கொடுத்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2-வது முறையாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1983-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

அப்போது அன்னை தெரசாவை சந்தித்தார். 3-வதாக ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது 1997-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

அப்போது சென்னை வந்த ராணி தரமணியில் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் கமல்ஹாசனின் மருதநாயகம் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version