பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப்பகிர்வு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்ளடங்கலாக அனைவருக்குமான சமத்துவம் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகள் குறித்து மீளநினைவுறுத்தியிருக்கும் பிரிட்டன், இலங்கைக்கு உதவும் நோக்கிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணையை சமர்ப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையில் கனடா, ஜேர்மனி, மாலாவி, மொன்டெனிக்ரோ, வட மெசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய பிரேரணை வியாழக்கிழமை (6) 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 

மேற்படி புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்பதாக அப்பிரேரணையை முன்மொழிந்த இணையனுசரணை நாடுகளின் சார்பில் அவற்றுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டனின் பிரதிநிதி உரையாற்றினார்.

 

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பிரஸ்தாபித்த அவர், இருப்பினும் தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் பாரியளவிலான போராட்டங்கள் போன்றவற்றின் விளைவாக இலங்கையில் மாற்றமொன்று ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையிலும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமையை நினைவுகூர்ந்தார்.

 

அதேவேளை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப்பகிர்வு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்ளடங்கலாக அனைவருக்குமான சமத்துவம் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகள் குறித்து நினைவுறுத்திய அவர், அவற்றை முன்னிறுத்தி தாம் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணையின் 8 ஆம் மற்றும் 18 ஆம் பந்திகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை வாசித்துக்காண்பித்தார்.

 

மேலும் இலங்கையுடன் நீண்டகாலமாக நல்லுறவைப் பேணிவரும் நாடான பிரிட்டன், இலங்கைக்கு உதவும் நோக்கிலேயே இந்தப் புதிய பிரேரணையை முன்மொழிந்திருப்பதாகவும் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு உதவுவது அந்த நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

 

பிரிட்டன் பிரதிநிதியின் உரையைத் தொடர்ந்து பிரான்ஸ், பாகிஸ்தான், பிரேஸில், ஜப்பான், சீனா, இந்தியா, கொரியா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன் இப்புதிய பிரேரணை தொடர்பில் தமது நாடுகளின் நிலைப்பாடு என்னவென்றும் தெளிவுபடுத்தினர். அதன்படி சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் கருத்துக்கள் வருமாறு:

பிரான்ஸ்

 

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்பதுடன் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதும் இன்றியமையாததாகும். இவ்விடயத்தில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றுமென நம்புகின்றோம்.

 

பாகிஸ்தான்

இப்புதிய பிரேரணை வரைபு தொடர்பில் நடத்தப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களின்போது இலங்கையினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அதன்மூலம் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றது என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் 8 ஆம், 9ஆம், 10 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களை இணையனுசரணை நாடுகளால்கூட ஏற்றுக்கொள்ளமுடியாது.

அதேவேளை இப்பிரேரணையானது தமிழீழ விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களைக் கண்டிப்பதற்கும், அதற்குரிய பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்கும் தவறிவிட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பிரகடனம் உள்ளிட்ட அதன் கோட்பாடுகளுக்கு ஏற்புடையவையாக அமையவேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.

 

பிரேஸில்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது அரசியல்மயப்படுத்தப்பட்ட ரீதியில் செயற்படாமலிருப்பது அவசியம் என்பதுடன், இவ்வாறான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியுடன் மேற்கொள்வது முக்கியமானதாகும்.

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் நாம் முன்மொழிந்த சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம். இருப்பினும் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பு மற்றும் அனுசரணை குறித்து நாம் குறிப்பிட்ட விடயங்கள் இப்பிரேரணையில் இடம்பெறாமை கவலையளிக்கின்றது.

ஜப்பான்

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலங்கை முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். குறிப்பாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

 

சீனா

பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்தமை உள்ளடங்கலாக கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் பல்வேறு முன்னேற்றகரமான அடைவுகளை தம்வசப்படுத்தியிருக்கின்றது.

இலங்கையின் நீண்டகாலப்பங்காளி என்ற ரீதியில் அதன் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் நாம் உதவியிருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் தற்போது இணையனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை,

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அடையப்பட்ட முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்குத் தவறியிருக்கின்றது. பக்கச்சார்பற்றதன்மை, தேர்வுசெய்து செயற்படாத தன்மை ஆகிய கோட்பாடுகளின் பிரகாரமே ஐ.நா மனித உரிமைகள் பேரவை இயங்கவேண்டும்.

மாறாக ஏனைய நாடுகளுக்குள் தலையீடு செய்வதற்கும், அவற்றின்மீது அழுத்தம் பிரயோகிப்பதற்குமான ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்தக்கூடாது.

 

இந்தியா

 

கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் மீள்குடியேற்றம், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் நாம் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவந்திருக்கின்றோம். அதுமாத்திரமன்றி தற்போது இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தோம்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

அதேவேளை அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகிய கடப்பாடுகளையும் அரசாங்கம் விரைந்து நிறைவேற்றவேண்டும்.

கௌரவம் மற்றும் சமாதானம் என்பன ஓர் நாணயத்தின் இரு பக்கங்களாகும். தமிழ் மக்களின் நலன் உள்ளடங்கலாக அனைத்து இலங்கை மக்களினதும் சுபீட்சம் தொடர்பில் இந்தியா அக்கறை கொண்டிருக்கின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version