மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் குறித்து விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தாலும், படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலைப் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக திரையுலகினர் கூறுகின்றனர்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 2,000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது.

மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு எவ்வளவு என்பது இதுவரை வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. இருந்தபோதும், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தப் படத்திற்கான முன்பதிவு துவங்கியபோதே, பெரும்பாலான திரையரங்குகலில் சுமார் ஒரு வாரத்திற்கான முன்பதிவுகள் நிறைவடைந்தன. படம் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்திருக்கும் நிலையில், மிகப் பெரிய வெற்றியை நோக்கி இந்தப் படம் நகர்ந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிவப்புக் கோடு

கடந்த நான்கு நாட்களில் உலக அளவில் இந்தப் படத்தின் வசூல் 247 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு திரைப்படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் நிலையில், அடுத்து வரும் திங்கட்கிழமையன்று திரையரங்குகளில் பாதி இடங்களை நிரம்பும். ஆனால், அக்டோபர் 3ஆம் தேதி திங்கட்கிழமையன்று பொன்னியின் செல்வன் ஓடிய திரையரங்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீத இடங்கள் நிறைந்தன. திங்கட்கிழமை மட்டும் 16 – 17 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்தியிலும் இந்தப் படத்தின் வசூல் பத்து கோடி ரூபாயைக் கடந்திருக்கிறது. இதுதவிர, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, இதற்கு முன்பாக 2.0, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனையைப் படைத்திருக்கின்றன. குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் மட்டும் சுமார் 140 கோடியாக இருந்தது. இதில் தயாரிப்பாளர்களுக்கு சுமார் 80 கோடி ரூபாய் பங்கு கிடைத்தது.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தைப் பொருத்தவரை, இதுவரை தமிழ்நாட்டில் எந்தத் திரைப்படமும் வசூலிக்காத அளவுக்கு சுமார் 170 கோடி ரூபாயை வசூலித்தது. உலகம் முழுவதிலும் வைத்துப் பார்க்கும்போது பல தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வசூலைப் பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டு வசூலைப் பொறுத்தவரை, விக்ரம் திரைப்படமே இப்போதுவரை முதலிடத்தில் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்தச் சாதனையை முறியடிக்குமா என்பதை அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.

இது தவிர, இந்தப் படத்தின் ஓடிடி உரிமைகள் அமெசான் பிரைம் வீடியோவிற்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. சுமார் 125 கோடி ரூபாய்க்கு இந்த உரிமை விற்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version