.
பிரதமரை அகற்றுவது நிறைவேற்று அதிகாரத்திற்கு அத்தியாவசியமானதல்ல.
பகுதி 1இல் 19வது திருத்தம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத் தீர்மானம் என்பது 22வது (22ஏ) திருத்த மசோதாவை விட விரும்பத்தக்கது என கட்டுரையாளர் வாதித்தார்.
பிரதமரை அகற்றுவது என்பது நிறைவேற்று அதிகாரமல்ல
22ஏ தொடர்பாக கட்டுரையாளர் ஏற்கெனவே தெரிவிக்கையில் பிரதமரைப் பதவியிலிருந்து அகற்றுவது என்பது நிறைவேற்று அதிகாரத்தின் பிரதான பகுதி என நீதிமன்றம் கருதியது மிகவும் தவறானது என்கிறார்.
ஜனாதிபதி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே. மக்களே நாடாளுமன்றத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அதிக நம்பிக்கையைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரதமராக நியமனம் பெற உரிமையுண்டு.
அந்த உறுப்பினர் யார் என்பதை ஜனாதிபதி மட்டுமே அடையாளம் காணவேண்டும். இது நிறைவேற்று அதிகாரத்தின் இன்றியமையாத அங்கம் அல்ல எனக் கட்டுரையாளர் மிகவும் கண்ணியத்துடன் சமர்ப்பிப்பது என்னவெனில் தன்னிச்சையான செயற்பாடுகளில் அதுவும் செயற்படு ஜனநாயகத்தில் உள்ள பொதுச் சட்ட விடயங்களில் மோசமான உதாரணத்தைக் கண்டு பிடிப்பது கடினமானது என்கிறார்.
வருந்தத்தக்க வகையில் இவ்வாறான தன்னிச்சைப்படி அதிகாரத்தைப் பறிக்க பொது வாக்கெடுப்பில் மக்களின் ஒப்புதல் தேவை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளமையாகும்.
அவ்வாறு நீக்கப்பட்டமையை உயர்நீதிமன்றத்தில் பரீட்சித்துப் பார்க்கலாம் அல்லது ‘புதிய’ பிரதமரை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க முடியம் என்பது பதிலாக அமையாது.
இவற்றிற்கிடையில் மேலும் கபட வகையில் கையாள்வதற்கான கதவுகளை ஏன் திறக்க வேண்டும்? பிரதமர் பதவியை யார் வகிக்க முடியும்? என்பதனை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகத் தெரிவித்த நிலையில் ஜனாதிபதி என்பவர் பிரதமர் பதவியை நீக்கம் செய்ய அனுமதிப்பது ஏன்?
உயர்நீதிமன்றம் தீர்மானித்ததன் பிரகாரம் பிரதமரை நீக்கம் செய்யும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தின் இன்றியமையாத பகுதியாக இருந்தால் பிரதமரின் நியமனமும் அத்தகைய அதிகாரத்தின் இன்றியமையாத பகுதியாக இருக்க வேண்டும்.
பிரதமரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் உள்ள அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தேர்தலின் போது காபந்து அரசாங்கம் அடுத்த அரசாங்கம் முதன் முறையாகக் கூடும் வரை தொடர்வதோடு சபாநாயகர், பிரதமர் இருவரும் அதன் முதல் கூட்டத்திலேயே நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்படுவதோடு பிரதமரின் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்துவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகவும் இருந்தால் மட்டுமே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியலமைப்புக் கூறுகிறது.
இவற்றிற்கு மேலாக நாடாளுமன்றமே எவர்மீது நம்பிக்கை உண்டு என்பதைத் தீர்மானிக்கவும் முடியும்.
பிரதமரே நாடாளுமன்றத்தின் உச்சபட்ச நம்பிக்கைக்குரிய உறுப்பினராக இருந்தால் ஜனாதிபதியிடமிருந்து நாடாளுமன்றத்திற்கு அவ்வாறாக நியமனம் செய்யும் அதிகாரத்திற்கு மாற்றுவது நிறைவேற்று அதிகாரத்தை அந்நியப்படுத்துவதாக இருக்காதா?
நீதிமன்றம் எதனைத் தீர்மானித்ததோ அது அப்படியே இருக்கும். அவ்வாறெனில் இவை நியாயமற்றதாக தெரிகிறதல்லவா?
பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் கபட சூழ்ச்சிகளுக்கான கதவைத் திறக்கிறது
பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதன் மூலம் உருவாக்கப்படும் குழப்பமானது 2018ம் ஆண்டு 52 நாட்கள் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியின்போது நாடு எதிர்நோக்கியது போன்ற சூழ்ச்சிகளுக்கு இவை வழி வகுக்கலாம்.
நாடாளுமன்றத்தின் அதிக நம்பிக்கையைப் பெற்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைத் திட்டமிட்டே நீக்கியதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஸ ‘புதிய’ பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவத் தூண்டப்பட்டனர். ஆனால் ‘புதிய’ பிரதமரால் பெரும்பான்மைப் பலத்தைப் பெற முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிட்டார்.
பலர் அடிப்படை உரிமை தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் விசாரணையைத் தொடர அனுமதித்ததோடு கலைப்பு நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பித்தது.
பின்னர் நாடாளுமன்றம் கூடியது. ‘புதிய‘ பிரதமரும் அவரது அரசாங்கமும் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற சபையில் தோற்கடிக்கப்பட்டனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் ‘புதிய’ பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ‘பிடியாணை’ ( Quo warrento) உத்தரவுக்காக விண்ணப்பித்ததன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்தது.
இருப்பினும் கபட சூழ்ச்சிகள் தொடர்ந்தன. அதாவது உயர்நீதிமன்றம் கூறிய கலைப்பைத் தள்ளுபடி செய்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கியது. இருப்பினும் இடைக்கால உத்தரவின் செயற்பாட்டிற்குத் தடை விதிக்க மறுத்தது.
இதன் பின்னரே ‘புதிய’ பிரதமர் ராஜினாமா செய்தார். எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி சிறிசேன மறுத்தார்.
பதிலாக சஜீத் பிரேமதாஸவை நியமிக்கத் தயாராக இருப்பதாகச் சுட்டிக் காட்டினார். ஈற்றில் சிறிசேன தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டியதாயிற்று.
எமது வரலாற்றில் இவ்வாறான அசிங்கமான நிகழ்வுகளின் பின்னணியிதான் ஒரு பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தினைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தங்கள்: இறுக்கமும், நெகிழ்வும்
ஒவ்வொரு எழுதப்பட்ட அரசியல் அமைப்பும் அதனைத் திருத்த அல்லது புதிய அரசியமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை வகுத்துள்ளது.
சாதாரண சட்டங்களை உருவாக்கும்போது பின்பற்றப்படும் நடைமுறையை விட இத்தகைய நடைமுறை மிகவும் கடுமையானது என்பது பொதுவிதி. பெரும்பாலான நாடுகளில் சாதாரண சட்டங்கள் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்படுகின்றன.
ஆனால் அரசியலமைப்பு மாற்றங்கள் விசேட பெரும்பான்மை பொதுவாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.
இலங்கையின் சுதந்திரகால அரசியலமைப்பு மற்றும் 1972ம் ஆண்டின் அரசியலமைப்பு ஆகியன மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பரிந்துரைத்தது.
1978ம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருத்தங்களை மேற்கொள்ளும் வேளையிலுள்ள பொது விதியாக இருந்த போதிலும் 83வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள சில ‘இறுக்கமாக வேருன்றிய’ (entrenched) விதிகளைப் பாதிக்கும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் மக்கள் வாக்கெடுப்பு மூலமான ஒப்புதலும் தேவை. இவ்வாறாக இறுக்கமான வேருன்றிய ஏற்பாடுகளில் ஒன்றான பிரிவு 3 பின்வருமாறு கூறுகிறது.
‘இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடம் உள்ளது. அது மட்டுமல்லாமல் அது பிரிக்க முடியாதது. இறையாண்மை என்பது அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் உரிமைகளை உள்ளடக்குகிறது.’
சட்டவாக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை போன்றன எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பிரிவு 4 குறிப்பிடுகிறது. இக் கலந்துரையாடலுக்குப் பொருத்தமான பிரிவு 4(டி) என்பதாகும். அதன் விபரம் பின்வருமாறு
‘இலங்கையின் பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரால் பயன்படுத்தப்படும்’.
இதில் காணப்படும் சுவாரஸ்யம் என்னவெனில் அரசியலமைப்பு சீர் திருத்தத்திற்கான தேர்வுக் குழுவின் அறிக்கை மற்றும் 1978 இன் அரசியலமைப்பு மசோதா ஆகிய இரண்டிலும் பிரிவு 4 என்பது உறுதி செய்யப்பட வேண்டிய விதிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் குழுநிலையில் அது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம் இறையாண்மையைச் செயல்படுத்தும் முறைமையை மாற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு விட்டுவிடுவதற்கான சிந்தனைமிக்க முடிவைக் குறிப்பதாகும்.
ஓர் அரசியலமைப்பு மிகவும் நெகிழ்வானதாக இருக்கக்கூடாது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறிருப்பின் திருத்துவதற்கு எளிதாக அமைந்துவிடும் அல்லது திருத்துவது மிகவும் கடினமாக அமைந்துவிடும்.
மிகவும் நெகிழ்வான அரசியலமைப்பு அரசியலில் கபட சூழ்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகளை வழங்கும்.
இதன் விளைவாக சிறுபான்மையினர், இனக் குழுமங்கள் மற்றும் பிறர் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
மிகவும் கடினமான அரசியலமைப்பு பொதுவான கருத்தை மாற்றுவதற்கு உதவப் போவதில்லை.
அத்துடன் அவை விரக்தி நிலமைகளைத் தோற்றுவிக்க உதவும். இவை மேலும் அரசியலமைப்பு மாற்றங்களை நோக்கிய வழக்குகளை வலுப்படுத்தும்.
ஒரு அரசியலமைப்பு நீதித்துறை விளக்கத்தின் மூலம் அதிகளவான அல்லது மிகவும் நெகிழ்வான அல்லது கடுமையானதாக மாற்றப்படலாம். எனவே அரசியலமைப்புச் சிக்கல்களைக் கையாளும் நீதிபதிகளின் முன்னால் மிகவும் கடினமான பணி உள்ளது.
17ஏ மற்றும் 19ஏ
உயர்நீதிமன்றம் நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கிறது. 1978ம் ஆண்டின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பது மற்றும் ஜனாதிபதி பதவியை ஓர் சம்பிரதாய பதவியாக மாற்றுவது ஆகியவை தீவிர விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன.
2001ம் ஆண்டின் 17ஏ திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுக்கு உட்பட்டு சில முக்கிய பதவிகளுக்கான நியமனங்களைச் செய்வதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த அரசியலமைப்புச் சபை முற்பட்டது.
உயர்நீதிமன்றத்தினால் வரவேற்கப்பட்ட இத் தீர்மானத்தில் இதுவரை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விருப்புரிமையை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் அக் கட்டுப்பாடுகள் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைப்பதாக அமையாது எனத் தெரிவித்திருந்தது.
2015ம் ஆண்டின் 19ஏ திருத்தச் சட்டமூலத்தின் மீதான தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட(பிரதம நீதிபதி சிறீ பவன் மற்றும் நீதிபதி எக்க நாயக்க ) தீர்ப்புகளால் மேலும் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டது.
இத் தீர்மானத்தின் அடிப்;படை என்னவெனில் சர்வஜன வாக்ககெடுப்பைத் தவிர்க்கவேண்டிய அத்தியாவசிய தேவை எதுவெனில் ஜனாதிபதி நிர்வாகத்தின் தலைவராகத் தொடர்ந்து செயற்படவேண்டும்.
அவரது நிர்வாகச் செயற்பாடுகளின் இறுதிச் ‘செயற்பாடு அல்லது முடிவு’ அவரது முடிவு என தக்க வைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
நீதிமன்றம் தெரிவிக்கும் ‘செயற்பாடு அல்லது முடிவு’ என்ற சொற்றொடரில் ‘அல்லது’ என்ற வார்த்தையின் பயன்பாடு வலியுறுத்தப்பட வேண்டும்.
எனவே முடிவு செய்வது அவரது முடிவாக இல்லாதிருப்பினும் இறுதிச் செயல் ஜனாதிபதியின் செயற்பாடாக இருத்தல் போதுமானது என்பதாகும்.
42வது பிரிவு தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது குடியரசு அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை பொறுப்பேற்கிறது.
அத்துடன் கூட்டுப் பொறுப்பு மற்றும் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கக்கூடியது என அப் பிரிவு தெரிவிப்பதோடு நிறைவேற்று அதிகாரத்தின் ஒரே குவிப்பு ஜனாதிபதி அல்ல என்பதை உறுதியாக நிறுவுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவை 2002ம் ஆண்டின் அரசியலமைப்பின் 19வது திருத்தத்திலும், ஏழுபேர் கொண்ட அமர்வு இதனை வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதியுடன் மட்டும் அல்லது தனி மனிதராக அடையாளப்படுத்தக் கூடாது.
அத்துடன் அவை மக்கள் சக்தியின் அடையாளமாகவே சகல சமயங்களிலும் அடையாளம் காணப்பட வேண்டும் என அந்த வழக்கில் நீதிமன்றம் தெரிவித்தது.
13வது திருத்தச் சட்டத்தில் நீதியரசர் வனசுந்தரவின் உத்தரவானது ஜனாதிபதியை அங்கமாகக் கொண்டுள்ள அமைச்சரவையானது அரசாங்கப் பொறிமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
நிறைவேற்று அதிகாரப் பகிர்வு மற்றும் அதனை மீறும் எந்தவொரு முயற்சியும் அமைச்சரவை என்ற அடைப்பானாக ( Valve) உட்புபோக்கி ( conduit) இல்லாமல் நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவது போன்றதாகும்.
இவ்வாறான விதத்தில் நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவது அரசியலமைப்பின் அடிப்படைப் பொறிமுறை. அதன் வடிவமைப்பு என்பவற்றிற்கு முரணானது.
பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்ற விதிகளுக்கு வாக்கெடுப்பு அவசியம் என்பதை நீமன்றம் கண்டுகொள்ளவில்லை என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தீர்ப்பின் சாராம்சத்துடன் ஒத்துப் போகிறது. குடியரசுத் தலைவர் இங்கு நியமன அதிகாரியாக செயற்படுகிறார். அமைச்சர்களை நியமிப்பது பிரதமரின் முடிவாக இருந்த போதிலும் அது ஜனாதிபதியின் செயலாகவே தொடர்கிறது.
மறுபுறத்தில் பிரதமர் தனது அமைச்சர்களுக்கென ஒதுக்கிய பகுதிகள் மற்றும் செயற்பாடுகளைத் தீர்மானிப்பவராக இருப்பதும், எவ் வேளையிலும் அப் பணியை மாற்றலாம் என வழங்கிய சரத்துகள் ஜனாதிபதி அவற்றில் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார் என்பதால் பொது வாக்கெடுப்பு தேவைப்படும்.
இதனால் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கேனும் திருத்த நடைமுறையிலுள்ள கடினத் தன்மையைத் தளர்த்தியது எனலாம்.
(தொடரும் )