“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன”

கொழும்பில் எட்டு உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் பின்னர்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான மோசமான விமர்சனங்கள், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்தது. ரணில் சர்வாதிகாரியாக மாறுகிறார் என்ற விமர்சனங்களும் வெளியாகத் தொடங்கின.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதன் பின்னணியில்,  இந்த விவகாரத்தில் அவர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தியவர்கள், பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பாக உள்ள, பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன ஆகியோர் தான் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் இருவரும், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறாமல், குறித்த வர்த்தமானி பிரகடன வரைவைத் தயாரித்துள்ளனர்.

பொதுவாக அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே, வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

ஆனால் சட்டமா அதிபர் அல்லது அவரது செயலகத்தின் ஆலோசனையை கோராமல், அதற்கு வெளியே உள்ள சட்ட நிபுணர்களின் ஆலோசனையுடன் இந்த வரைவு தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, ஜனாதிபதி ரணிலிடம் அந்த வரைவு கையளிக்கப்பட்ட போது, அவர் எந்த யோசனையுமின்றி அதில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த வர்த்தமானி வரைவைச் சமர்ப்பித்தவர்கள்,  சக அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் என்ற நம்பிக்கையும், அரச நிறுவனங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைனக்கமையவே, வர்த்தமானி அறிவிப்புகளை தயார் செய்வது வழக்கம் என்ற நம்பிக்கையிலும், லண்டன் செல்லும் அவசரத்திலும், ஜனாதிபதி ரணில், அந்தப் பிரகடனத்தை ஆராயாமல் கையெழுத்திட்டிருந்தார்.

அவர் லண்டனுக்குச் சென்ற பின்னர் தான் அதன் பின்னாலுள்ள சிக்கல்கள் தெரியவந்தது. ‘அரசாங்க இரகசியச் சட்டம்’ என்ற பொருத்தமற்ற சட்டத்தை பயன்படுத்தி அந்த வர்த்தமானி வெளியிட்டப்பட்டது, அதன் சட்டபூர்வ தன்மையை கேள்விக்குட்படுத்தியது.

அடுத்து, இந்தப் பிரகடனம் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தோற்றுவித்திருந்தது.

இந்தநிலையில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க சட்டமா அதிபரிடம் விசாரித்த போது தான், அதுபற்றி அவரிடம் ஆலோசிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

அந்த வர்த்தமானி அறிவிப்பை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் போது- அரசாங்கத்தின் சார்பில் தம்மால், வாதிட முடியாது என்றும் சட்டமா அதிபர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர்பாதுகாப்பு வலய பிரகடனத்தை விலக்கிக் கொள்ளுமாறு அவர் கூறிய நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆணையுடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் பல சர்ச்சைகளுக்கு காரணமாகியிருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தும் சக்திகள், அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றன என்பது தான் அதில் முக்கியமானது.

அந்த சக்திகள் வலுவானவை என்பதுடன் ராஜபக்ஷ விசுவாசிகளைக் கொண்டது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

தற்போதைய அரசாங்கத்தை பொதுஜன பெரமுன தான் இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணம் இந்த சம்பவம்.

ரிரான் அலஸ் அரசியல் பேரங்களை முன்னெடுப்பவர். அவரது கடந்தகால வரலாறு அவ்வாறானது தான்.

ஆரம்பத்தில் மங்கள சமரவீரவுடன் சேர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தேடினார். பின்னர் மஹிந்தவுடன் முரண்பட்டுக் கொண்டு, சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2010இல் பாராளுமன்றம் சென்றார்.

பின்னர் மஹிந்த தரப்புடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு, 2020 இல் பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்து இப்போது அமைச்சராக இருக்கிறார்.

ராஜபக்ஷவினருக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்த போது, விமல் வீரவன்ச, உள்ளிட்ட 10 கட்சிகளுடன் ஒரு தரப்பாக இவரும், அரசாங்கத்தை விட்டு விலகி எதிர்க்குரல் எழுப்பினார்.

எனினும், ரணில் ஆட்சிக்கு வந்தவுடன், அதனுடன் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்று விட்டார். இவர் ராஜபக்ஷவினருக்காக வேலை செய்பவராக இருந்தால் அது ஆச்சரியமில்லை.

அடுத்து,வர்த்தமானி வெளியிடக் காரணமாக இருந்தவர், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன.

கோட்டாபய ராஜபக்ஷ, ‘கஜபா’ ரெஜிமென்ட்டில் இருந்த காலத்திலேயே இவருடன் நட்பு இருந்தது.

அவர் பாதுகாப்புச் செயலாளராகியதன் பின்னர், களமுனையில் இருந்து உடனுக்குடன் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்த சில இராணுவ அதிகாரிகளில் ஜெனரல் கமல் குணரத்னவும் ஒருவர்.

போரில் இடம்பெற்ற பல மீறல்கள் இவர்கள் இருவரின் கட்டளையில் இடம்பெற்றதான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டா வெற்றி பெற்ற பின்னர், மேஜர் ஜெனரலாக இருந்த கமல் குணரத்னவுக்கு ஜெனரலாகப் பதவி உயர்வையும் கொடுத்து பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்தார்.

கோட்டா பதவி விலகிய பின்னர், ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவும், பாதுகாப்புச் செயலாராக கோட்டாவின் விசுவாசியான ஜெனரல் கமல் குணரத்னவையே நியமித்தார்.

இது ஆரம்பத்திலேயே ஆச்சரியத்தைக் கொடுத்த ஒரு விடயம். ஏனென்றால், விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்கவை, ஜெனரல் கமல் குணரத்ன கடுமையாக விமர்சித்து வந்த ஒருவர்.

விடுதலைப் புலிகளுடன் ரணில் அரசாங்கம் பேச்சு நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு முட்டுக்கட்டை போடும் ஒரு சம்பவத்துக்கு காரணமாக இருந்தவர் ஜெனரல் கமல் குணரத்ன.

அப்போது, அவர் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் 55 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரி.

போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பின்னர், தங்கள் வசமிருந்த நாகர்கோவில் சந்தியில் இருந்த இராணுவ நிலையை பின்நோக்கி நகர்த்த வேண்டும் என இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்.

நாகர்கோவில் சந்தியில் இருந்த அந்த நிலையை விட்டு பின்நகர கேணல் கமல் குணரத்ன மறுப்புத் தெரிவித்தார். இந்த விவகாரம் மாவட்ட நிலையில் இருந்து, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்துக்குச் சென்றது.

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர், அப்போதைய அமைச்சர் மிலிந்த மொரகொட, இராணுவத் தளபதி சாந்த கொட்டேகொட உள்ளிட்டவர்கள், அங்கு சென்று நிலைமையைப் பார்வையிட்டனர்.

அப்போது கேணல் கமல் குணரத்னவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்த அமைச்சர் மிலிந்த மொறகொட, அமைதிப் பேச்சுக்களின் எதிர்காலம் கருதி விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இராணுவத் தளதியின் மூலம் அதற்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்த முடியும் என்று எதிர்பார்த்து கேணல் கமல் குணரத்ன ஏமாந்து போனார்.

அவரும், அமைச்சர் கூறியதே சரி என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். இதனை ஒரு வெட்கக்கேடான சம்பவமாக-தலைகுனிவான நிகழ்வாக நந்திக்கடலுக்கான பாதை நூலில் பதிவு செய்திருக்கிறார் ஜெனரல் கமல் குணரத்ன.

அதற்கு சில நாட்களுக்குப் பின்னர், நாகர்கோவில் களமுனையில் இருந்து கேணல் கமல் குணரத்ன, இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

தனக்கு ஏற்பட்ட ஒரு அவமானமாக இதனை அவர் கருதி வந்தார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது இடம்பெற்ற அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, நல்லாட்சி அரசாங்கத்திலும், கமல் குணரத்ன ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்.

இது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவருக்கும் இடையிலான இடைவெளியை தோற்றுவித்திருந்த போதும், அவரை பாதுகாப்புச் செயலாளராக நியமித்தமை ஆச்சரியம்.

இந்தநிலையில் தான் ரிரான் அலஸும், ஜெனரல் கமல் குணரத்னவும் உயர் பாதுகாப்பு வலய விவகாரத்தில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள்.

இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் சரி செய்து விட்டதாக கருத முடியாது,

வெளியில் இந்தப் பிரச்சினையை அமுக்கி விட்டது.

ஆனால், உள்ளுக்குள், அரசாங்கத்துக்குள், ரணிலை தவறாக வழிநடத்தும் சக்திகளின், ஆதிக்கம் அதிகரித்துள்ளதை இது காண்பித்துள்ளது.

இதற்குப் பின்னரும், பாதுகாப்புச் செயலாளருக்கு  எதிராகவோ, அமைச்சர் ரிரான் அலஸ் மீதோ ஜனாதிபதி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அவ்வாறு அவரால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது.  அவ்வாறு நடவடிக்கை எடுக்க முயன்றால் ராஜபக்ஷ விசுவாசிகள் ரணிலுக்கு எதிராகத் திரும்புவார்கள்.

இந்தச் சம்பவம் கத்தி மீது நடந்து கொண்டிருக்கிறார் என்பதை ரணிலுக்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியிருக்கிறது.

-சத்ரியன்

Share.
Leave A Reply

Exit mobile version