சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பது போல, எரிக் சொல்ஹெய்மை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொண்டு வந்திருக்கிறார் என்றால், அது ஒன்றில் பொருளாதார உதவிகளை திரட்டிக் கொள்ளும் நோக்கம் இருக்கலாம் அல்லது மீண்டும் தமிழர் தரப்புடன் பேச்சு முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்

இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், எரிக் சொல்ஹெய்ம் கடந்த வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம், பின்னர் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராகவும் பணியாற்றியவர்.

அதையடுத்து, ஐ.நா.சுற்றாடல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

திடீரென அவருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலநிலை தொடர்பான சர்வதேச ஆலோசகராகவும் நியமித்திருக்கிறார்.

2001ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நோர்வேக்கு விடுத்த அழைப்பின் பேரில், எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டார்.

அவரது அந்த அனுசரணை முயற்சியினால் தான், தமிமீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் போர்நிறுத்த புரிந்துணர்வு உடன்பாடு 2002 இல் கைச்சாத்திடப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போரிட்டுக் களைத்துப் போயிருந்த நிலையில், பொருளாதார நெருக்குவாரங்களுக்குள் சிக்கிப் போயிருந்த நிலையில், நோர்வேயின் உதவியுடன் அந்த அமைதி முயற்சிகளை ஆரம்பிக்க முன்வந்தது.

தொடர்ந்து போரிடுவதற்கு பொருளாதாரம் இடமளிக்காத நிலையில், படையினர் மத்தியில் போர் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், போருக்கு எதிரான மனோநிலை உருவாகத் தொடங்கியிருந்த நிலையில், ஒரு தற்காலிக ஓய்வை அல்லது இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதை, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உணர்ந்திருந்தார்.

அதற்காகவே அவர் நோர்வேயின் ஊடாக விடுதலைப் புலிகளை பேச்சுக்கு அழைத்தார். அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் கூட ஒரு ஓய்வு தேவைப்பட்டது. தொடர் போர் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது.

அவ்வாறான நிலையில் ஒரு இடைவெளியைப் பெற்றுக் கொண்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப் புலிகளும் திட்டமிட்டனர்.

இரண்டு தரப்புகளுமே தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு திட்டத்துடன் தான், போர்நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சுக்களை முன்னெடுத்தன.

அதற்காக விடுதலைப் புலிகள் அமைதி முயற்சிகளை போலியாக முன்னெடுத்தனர் என்று கூறமுடியாது. அமைதியான முறையில் தீர்வை எட்டுவதற்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருந்தனர்.

ஆனால் பாரம்பரியமான நம்பிக்கையீனங்களும், அவ்வப்போது உருவாக்கப்பட்ட நெருக்கடிகளும். இரண்டு தரப்புளையும் ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்கி வர இடமளிக்கவில்லை.

இரண்டு தரப்புகளினதும் கருத்துக்களை மாறி மாறி பரிமாறிக் கொள்ளுகின்ற தரப்பாகத் தான் எரிக் சொல்ஹெய்மும் நோர்வே அரசாங்கமும் செயற்பட்டது.

அவர்கள் ஏற்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து விலகி, நடுநிலையாளராக செயற்படத் தயங்கினர். அது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக மாறியது. அது விடுதலைப் புலிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அரசாங்கம் மற்றும் அதன் பின்னால் இருந்த படைத்தரப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள், அவற்றினால் இயக்கப்பட்ட துணை ஆயுதப்படைகளால் அமைதியைக் குலைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது, அதனை அம்பலப்படுத்தி, தங்களின் பக்கத்து நியாயத்தை சர்வதேசத்திடம், எரிக் சொல்ஹெய்ம் முன்வைக்கத் தவறி விட்டார் என்ற ஏமாற்றம் விடுதலைப் புலிகளிடம் மாத்திரமன்றி, தமிழ் மக்களிடமும் இருந்தது.

அதேவேளை, எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் அனுதாபியாக இருக்கிறார், அவர்களுக்காக செயற்படுகிறார், என்ற கடுப்பு சிங்கள தேசியவாத சக்திகளிடமும் காணப்பட்டது.

அதனால் தான், அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில், எரிக் சொல்ஹெய்மின் படத்தை, விடுதலைப் புலிகளின் வரிப்புலிச் சீருடையுடன் வடிவமைத்த்திருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியேற்ற பின்னர், ஒரு கட்டத்தில் நோர்வேயும், அதன் சமாதானத் தூதுவரும் நாட்டுக்குள் தேவையில்லை, என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அரசாங்கம் நடந்து கொண்டது.

ரணில் விக்கிரமசிங்க எரிக் சொல்ஹெய்மைக் கொண்டு வந்து, அமைதி முயற்சிகளை முன்னெடுத்தாரோ இல்லையோ, விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கான வேலைகளுக்கு – அவரது அனுசரணை முயற்சிகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணாவின் பிளவு முக்கியமானதொரு பின்னடைவு. புலிகள் இயக்கத்தில் அதிருப்தியடைந்திருந்த கருணாவை தந்திரமாக பாதுகாத்து, அவரிடம் இருந்து இராணுவ உத்திகளையும், தகவல்களையும் திரட்டிக் கொண்டு, கருணாவின் விசுவாசிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்பி விட்டது வரை, எரிக் சொல்ஹெய்மின் அமைதி முயற்சிகளின் போது தான் இடம்பெற்றது.

எரிக் சொல்ஹெய்ம் அமைதி முயற்சிகளை முன்னெடுத்த அந்தக் காலகட்டத்தில் புலிகளின் ஆயுத பலம் அதிகரித்தது. ஆனால் அவர்களைச் சுற்றிவர புலனாய்வு வலையமைப்பு, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், பின்னப்பட்டது.

அந்த வலையமைப்புக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டதால் தான், பின்நாட்களில், பெருந்தோல்வியைச் சந்திக்க நேரிட்டது,

எரிக் சொல்ஹெய்மின் அமைதி முயற்சிகளையிட்டு சிங்கள மக்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனாலும், அவர் ஏற்படுத்திக் கொடுத்த இடைவெளியால் தான், இராணுவத்தினரால் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது.

அந்த வகையில் பார்த்தால், எரிக் சொல்ஹெய்ம், தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டவரெனக் கூற முடியாது.

அதேவேளை, நோர்வேயும் சொல்ஹெய்மும் அளித்த வாய்ப்புகளை விடுதலைப் புலிகள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

அது போர் மூளுவதை தவிர்த்திருக்கலாம் என்பதன் அடிப்படையிலானதே தவிர, பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அடிப்படையில், அமைதியான தீர்வு ஒன்றை எட்டத் தவறியதன் அடிப்படையிலானதல்ல.

ஏனென்றால், அவ்வாறான வாய்ப்புகளை அரசாங்கம் விட்டுக் கொடுக்கவில்லை. பரஸ்பர நம்பிக்கையை சொல்ஹெய்ம் கட்டியெழுப்பியிருந்தால், அவர், நடுநிலையாக இரண்டு தரப்புகளினதும் தவறுகளை சுட்டிக்காட்டி சரிப்படுத்தியிருந்தால், நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கான உத்தரவாதத்தை சர்வதேச பங்களிப்புடன் ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தால், போர் மூளும் நிலை ஏற்பட்டிருக்காது.

அந்த வகையில் எரிக் சொல்ஹெய்மின் செயற்பாடுகள், அரசாங்கம் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு, புலிகளைப் போரில் தோற்கடிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு சாதகமானதாகவே அமைந்திருந்தது.

அவ்வப்போது சில மேடைகளில் எரிக் சொல்ஹெய்ம் தமிழர் விவகாரத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்த போதும், விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டவே அவர் முனைந்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் தான், மீண்டும் ரணில் விக்கிரமசிங்க, நோர்வேயில் இருந்து எரிக் சொல்ஹெய்மை அழைத்து, ஆலோசகராகப் பதவியும் கொடுத்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு காலநிலை ஆலோசகராகச் செயற்படுவதற்கு உள்நாட்டில் எவரும் கிடைக்காமல் போனது ஆச்சரியம்.

அதற்காக அவர் தோல்வியுற்ற ஒரு சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராகச் செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மை தேர்வு செய்தமை ஆச்சரியம் தான்.

ரணில் விக்கிரமசிங்க, நரித்தனமான அரசியலை முன்னெடுப்பவர்.

‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பது போல, சொல்ஹெய்மை அவர் கொண்டு வந்திருக்கிறார் என்றால், அது ஒன்றில் பொருளாதார உதவிகளை திரட்டிக் கொள்ளும் நோக்கம் இருக்கலாம்.

அல்லது மீண்டும் தமிழர் தரப்புடன் ஏதேனும் ஒரு பேச்சு முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம்.

அண்மையில் இரண்டு முறை அவர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக கூறியிருந்தார். அதற்கு அவர் குறுகிய கால அவகாசத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களையே ஆரம்பிக்காமல் தீர்வு பற்றி ரணில் விக்ரமசிங்க பேசுகிறார் என்று பலர் ஆச்சரியப்பட்டதுண்டு.

ஒருவேளை அவ்வாறான முயற்சிகளுக்கு சொல்ஹெய்மை ரணில் கொண்டு வரத் திட்டமிடக் கூடும். கடந்த முறை அவருக்கு, விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கு சர்வதேச உதவியும் ஆதரவும் தேவைப்பட்டது.

இந்த முறை அவருக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியழுப்புவதற்கு சர்வதேச உதவி தேவைப்படுகிறது.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்பது இன்று சர்வதேச அளவில் வலியுறுத்தப்படும் ஒன்றாக இருப்பதால், எரிக் சொல்ஹெய்மை கொண்டு தமிழர் தரப்பை வளைத்துப் போட ரணில் முற்படக் கூடும். ஆனால், எரிக் சொல்ஹெய்மிடம், இந்தமுறை தமிழர் தரப்பு அவ்வளவு இலகுவாக பிடிகொடுக்கும் போலத் தெரியவில்லை.

 

என்.கண்ணன்

Share.
Leave A Reply

Exit mobile version