Site icon ilakkiyainfo

மீண்டெழ முயலும் ராஜபக்ஷ வம்சம்!!

“விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்களின் ஆதரவு இல்லாமல் தனியே, பொதுஜன பெரமுனவினரின் துணையுடன், மஹிந்த ராஜபக்ஷவினால் மீண்டெழ முடியுமா?”

இலங்கையில் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட தலைவர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ஷ, தமது வாழ்நாளில் இரண்டாவது முறையாக மீள் எழுச்சிக்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவர் முதல்முறையாக மீள் எழுச்சிக்கான பயணத்தை தொடங்கினார்.

2022 மே 9ஆம் திகதி அரசியல் புரட்சியின் போது ஆட்சியைப் பறிகொடுத்த அவர், கடந்த காரம் களுத்துறையில் மீள் எழுச்சிக்கான அரசியலை இரண்டாவதுமுறையாக ஆரம்பித்திருக்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் இரண்டு முறை சறுக்கி விழுந்திருக்கிறார். இரண்டு முறையும் அவருக்கு கடுமையாக காயம் பட்டபோதும், அவர் மீண்டெழுகின்ற முயற்சிகளை கைவிடவில்லை.

2015 ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், தன் சகபாடியான மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியைத் தழுவிய பின்னர், தங்காலை கார்ல்டன் இல்லத்தில் தஞ்சமடைந்தார் மஹிந்த.

கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து, 2015 பெப்ரவரி 18ஆம் திகதி நுகேகொடவில் நடந்த ஒரு கூட்டத்தில் அவரது அரசியல் மீள் பிரவேசத்துக்கு அழைப்பு விடப்பட்டது.

‘மஹிந்தவை மீண்டும் கொண்டு வருவோம்’ என தொனிப்பொருளில் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் அவர் மேடையில் ஏறவில்லை. மேடைக்கு அருகே வாகனத்துக்குள் இருந்து கூட்டத்தைப் பார்த்து விட்டுச் சென்றிருந்தார்.

அவரை அவ்வளவு விரைவாக அரசியலுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன போன்றவர்கள் தான்.

மஹிந்த ராஜபக்ஷவின் நெருக்கிய பங்காளிகள் பலரும், அவருக்குப் பின்னால் வரத்தயங்கிக் கொண்டிருந்த போது, மைத்திரி- ரணில் அரசாங்கம் பலம் பெற்றிருந்த போது, இவர்கள் தான் துணிந்து நுகேகொடவில், கூட்டம் போட்டு மஹிந்தவை மீளவும் அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.

அதற்குப் பின்னர் தான் அனுராதபுரவில் பாரிய பேரணி ஒன்று நடத்தப்பட்டு, மஹிந்த மேடையேறியதுடன், பொதுஜன பெரமுனவும் உருவாக்கப்பட்டது.

அந்தக் கட்சியை நிறுவி, குறுகிய காலகட்டத்துக்குள் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு அதனைக் கட்டியெழுப்பியவர் பஷில் ராஜபக்ஷ.

ஆனால் அவருக்கு முன்னோடியாக நின்று, மஹிந்தவை மீளவும் அரசியலுக்கு கொண்டு வந்து சேர்த்து மேடையேற்றி, கிராமம் கிராமமாக பிரசாரம் செய்தது, விமல் வீரவன்சவும் அவரது கூட்டாளிகளும் தான்.

ஆனால் இந்தமுறை களுத்துறைக் கூட்டத்தில் பீனிக்ஸ் பறவை போல சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுவோம் என பொதுஜன பெரமுனவினர் சபதம் செய்த போது, தினேஸ் குணவர்த்தன மாத்திரம் மஹிந்தவுக்குப் பக்கத்தில் இருந்தார்.

அவருடன் இருந்த விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் அடங்கிய ஒரு அணி, மொட்டு அணியில் இருந்து வெளியேறி, தனித்துச் செயற்படுகிறது.

அவர்கள், ராஜபக்ஷவினரின் மீள்வருகையை அதாவது மஹிந்தவின் மீள் வருகையை எதிர்க்காது போனாலும், பஷிலின் மீள்வருகையை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்களின் ஆதரவு இல்லாமல் தனியே, பொதுஜன பெரமுனவினரின் துணையுடன், மஹிந்த ராஜபக்ஷவினால் அல்லது ராஜபக்ஷவினரால் மீண்டெழ முடியுமா என்பது தான் முக்கியமான சவால்.

2015இல், மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவார் என்று யாரும் நம்பவில்லை. தேர்தல் அரசியலில் வகுக்கப்பட்ட வியூகம் தான் அவரை அப்போது தோற்கடித்தது.

அது ஒன்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மிகப்பெரிய தோல்வியும் கிடையாது.

அதனால் அவருக்கு அனுதாப அலை ஒன்று காணப்பட்டது. அது அவரை மீளவும் அரசியலில் நிலை பெறுவதற்கு வழிவகுத்தது.

ஆனால், இரண்டாவது முறை அவர், பதவியில் இருந்து அகற்றப்பட்ட போது, நிலைமை அவ்வாறானதாக இருக்கவில்லை.

மக்களின் எதிர்ப்பை அரசாங்கம் சந்தித்த போது, அதனை தனது கட்சியில் உள்ள குண்டர்களைக் கொண்டு அடக்க முயன்ற போது ஏற்பட்ட வன்முறைகளின் தொடர்ச்சியாகத் தான், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து மே 9ஆம் திகதி விலக நேரிட்டது.

2015இல் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பாக தங்காலையில் ஹெலிகொப்டரில் போய் இறங்கிய போது கார்ல்டன் இல்லத்தில் அவரை வரவேற்று ஆறுதல் கூறுவதற்கு பெருங் கூட்டமே காத்திருந்தது.

2022இல் அவர், தலைமறைவாகித் தப்பியோடி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குள் ஒளிந்திருந்து விட்டு திரும்பி வந்த போது, அவரைத் தேடிச் சென்று நலன் விசாரிக்க சொந்தக் கட்சியினர் கூட செல்லவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து அவர் மீண்டும் களுத்துறையில் அரசியல் மேடைக்கு வந்திருக்கிறார்.

அவரைக் காண்பதற்கு மக்கள் யாரும் முண்டியடிக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் தங்களின் ஆதரவாளர்களின் அனுதாபத்தை தேடுவதற்காக, றோகித அபேகுணவர்த்தன கண்ணீரை வரவழைக்கும் கதைகளை கூற வேண்டியிருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல் மேடைக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு சில விடயங்கள் மறந்து போய் விட்டன.

அவர் கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதியாக இருக்கிறார் என்ற நினைப்பில் பேசத் தொடங்கி விட்டார்.

அவரது உதவியாளர் குறுக்கிட்டு ஜனாதிபதியாக இருப்பது கோட்டா அல்ல, ரணில் விக்ரமசிங்க என்று நினைவுபடுத்திய பின்னர் தான், தனது தவறை திருத்திக் கொண்டு, அப்போது ரணிலை எதிர்த்தோம் இப்போது அவர் எங்களுடைய ஆள் என்று குறிப்பிட்டார்.

மஹிந்த இப்போது முன்னரை விட உடலளவில் மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் தளர்ந்து போய் இருக்கிறார்.

இருப்பினும், இறுதிக்காலம் வரை அரசியல் செய்யும் ஆசை அவரை விட்டுப் போகவுமில்லை, அவரை வைத்து அரசியல் செய்யும் முடிவில் இருந்து அவரது கட்சியினரால் விலகியிருக்கவும் முடியவில்லை.

2015இல் மஹிந்தவை மீண்டும் கொண்டு வருவோம், அவரால் தான் நாட்டைப் பாதுகாக்க முடியும் என்று நுகேகொட கூட்டத்தில் முழங்கியவர்கள், எவராலும் இப்போது அப்படிக் கூற முடியவில்லை.

ஏனென்றால், நாட்டை நாசப்படுத்தியவர்கள் என்ற பெயருடன், ராஜபக்ஷவினர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நாட்டின் மோசமான வீழ்ச்சிக்கு, ராஜபக்ஷவினரே காரணம். அவர்களே மக்களை இந்த நிலைக்கு கொண்டு சென்றார்கள். அவர்களே, வரலாறு காணாத அழிவுகளுக்கு காரணம் என்று எல்லா இன மக்களும் வெறுக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சாம்பல் மேட்டில் இருந்து அவர்கள் தங்களின் அரசியல் மீள் எழுச்சிக்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற போது, சாதாரண மக்கள் அடித்து வீழ்த்தப்பட்ட தங்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றுக்கு இரண்டு முறை வீழ்த்தப்பட்ட பின்னரும் அரசியலில் குளிர்காயும் ஆர்வம் அவர்களுக்கு குறையவில்லை.

ஆனால் சாதாரண மக்கள் இன்னொரு முறை மீண்டும் ஏமாந்து போவதற்கோ அல்லது அடிபட்டு வீழ்வதற்தோ தயாராக இருப்பார்களா என்று தெரியவில்லை.

-சத்ரியன்-

Exit mobile version