• அரசியலமைப்பின் கடினத் தன்மையை மேம்படுத்தல்
• 22ஏ தொடர்பாக உயர்நீதிமன்றம்
இத் தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதியான இப் பத்தியில் 19ஏ திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்மானமானது ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதில் சில நெகிழ்வுத் தன்மையை அனுமதித்துள்ள அதேவேளை 21ஏ, 22ஏ திருத்தச் சட்டமூலங்கள் மீதான அதன் தீர்மானங்கள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையை மேலும் பலப்படுத்தியுள்ளதாகக் கட்டுரையாளர் கருதுகிறார்.
21ஏ, 22ஏ ஆகிய இரு தீர்மானங்களிலும் இலங்கை அரசாங்கத்தின் தோற்றத்தினை ஜனாதிபதி வடிவத்திற்கு 30வது சரத்தின் பிரகாரம் மாற்ற முனைந்திருப்பினும் அவை ( entrenched) வேருன்றவில்லை.
ஆகையால் வாக்கெடுப்பின்றித் திருத்தப்படலாம் என்ற பிரதான உண்மையை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
21ஏ மற்றும் 22ஏ தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் பின்நோக்கித் தள்ளிய படிகள்
20ஏ தொடர்பாக எஸ் ஜே பி ( Samagi Jana Balavegaya – SJB) இனது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றிலுமாக அகற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.
மூவரை உள்ளடக்கிய (நீதிபதிகள் ஜெயசூர்ய, ஜனக் டி சில்வா, ஒபயசேகர) அமர்வு 19ஏ தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஜனாதிபதி என்பவர் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரே இருப்பிடம் அல்ல என்ற தெளிவற்ற அறிக்கையுடன் 4(டி) இல் இலங்கையின் பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியால் பயன்படுத்தப்படுமென்பதுடன் சமரசம் செய்வது கடினம் எனத் தெரிவித்தது.
நீதிமன்றம் 4வது பிரிவின் மீறல் என்பது 3வது பிரிவையும் மீறுவதற்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்க இரண்டு சோதனைகளை மேற்கொண்டது.
தூதுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பிரகாரம் மக்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தில் வேறு நபர் அல்லது நிறுவனத்தை உட்கொண்டு வரும் எந்தவொரு மாற்றமும் மக்களின் ஒப்புதலுடன் இருத்தல் வேண்டும்.
அந்நியப்படுத்தும் பரிசோதனை என்பது அரசாங்கத்தின் ஒரு உறுப்பிற்குரிய அதிகாரத்தை மற்றொன்றிற்கு மாற்றுவது இணைப்பைத் துறப்பது அல்லது அகற்றுவது எனில் மக்களின் ஒப்புதல் தேவை.
பிரதிநிதித்துவம் தொடர்பான சோதனையில் உறுப்புரை 4(டி) பிரிவில் திருத்தங்களுக்கான முன்மொழிதலுக்கு விண்ணப்பிக்கும் போது நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையால் பயன்படுத்தப்படும் என உறுப்புரை 4( டி) இற்கு முன்மொழியப்பட்ட திருத்தத்திற்கு வாக்கெடுப்பு ஒப்புதல் தேவை என நீதிமன்றம் கூறியது.
பிரதிநிதித்துவ சோதனைக்கு முன்மொழியும்போது பிரதமரின ஆலோசனையின் அடிப்படையில் ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்பதற்கும், அவ்வாறான ஒப்புதல் தேவை என நீதிமன்றம் தெரிவித்தது.
ஜனாதிபதி என்பவர் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் மக்களால் அல்ல என்ற முன்மொழிவு சட்டப்பிரிவு 4(ந) ஐ மீறுவதாகவும் நீதிமன்றம் கூறியது.
இதன் பிரகாரம் அவதானிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குரிமை பயன்படுத்தப்படும் என்பதாகிறது. மேற் கூறிய மற்றும் பலவற்றிற்கான காரணம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு பொது வாக்கெடுப்பு மூலமான ஒப்புதல் அவசியமென நீதிமன்றம் முடிவு செய்தது.
இருப்பினும் ஜனாதிபதி முறையோடு; சம்பந்தப்படும் இரண்டு அரசியலமைப்பு விதிகள் மற்றும் அவர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் குறித்து நீதிமன்றம் கையாளவில்லை.
குடியரசுத் தலைவர் தொடர்பாக உள்ள பிரிவு 30 ஆரம்பத்தில் இவ்வாறு கூறியது.
இலங்கைக் குடியரசிற்கு ஜனாதிபதி ஒருவர் இருப்பார் எனவும், அவர் அரசின் தலைவராகவும், நிறைவேற்று மற்றும் அரசின் தலைவராகவும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருப்பார்.
குடியரசின் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதோடு 6 ஆண்டுகள் பதவியிலிருப்பார். 19ஏ திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
ஜனாதிபதி என்பவர் அரசுத் தலைவராகவும், நிறைவேற்று அதிகாரத்தின் தலைவராகவும் மாத்திரமின்றி அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கவேண்டும் என்பதே இலங்கையின் அரசாங்கத்தின் வடிவத்தினை ‘ஜனாதிபதியாக’ ஆக்குகிறது.
1972ம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி அரசின் தலைவராகவும், நிர்வாகத்தின் தலைவராகவும் இருந்தார்.
ஆனால் அரசாங்கத்தின் தலைவராக இருக்கவில்லை. அத்துடன் அவர் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
எனவே 1978ம் ஆண்டின் அரசியலமைப்பை இலங்கை ஏற்றுக்கொண்டபோது அம் மாற்றங்கள் பிரிவு 30(1) விதி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் பிரிவு30(1) வேருன்றியதாக (entrenched) இருக்கவில்லை. பிரிவு 83 இல் வாக்கெடுப்பைத் தூண்டும் விதிகளின் பட்டியலில் இது இருக்கவில்லை.
வேருன்றிய விதிகளின் பட்டியலிலும் (entrenched provisions) 30(1) ஒதுக்கி விடப்பட்டது. பிரிவு 30(2) இலுள்ள ‘(வ) குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என்ற விதியும் வேருன்றிய விதிகளின் பட்டியலிலிருந்து தவிர்க்கப்பட்டது.
இங்குள்ள முக்கிய அம்சம் எதுவெனில் ‘ஜனாதிபதி 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்’ என்ற பிரிவின் 30(2) இன் இரண்டாம் பகுதி மட்டுமே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் அளவிற்கு வேருன்றியுள்ள நிலையில் நீடிப்புத் தேவையாயின் வாக்கெடுப்பு அவசியம் என்றாகிறது.
இக் குறைபாடுகள் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டதாகக் கருத வேண்டும். பிரிவு 4 என்பது வேருன்றிய ஏற்பாடு அல்ல எனத் தெரிவிப்பதன் மூலம் அது பலப்படுத்தப்படுகிறது.
22ஏ தொடர்பாக உயர்நீதிமன்றம் கையாளும்போது 21ஏ மீதான தீர்மானத்தில் அதன் நியாயத்தைப் பின்பற்றியது.
அதன் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை நியமிப்பதற்கும் அவர்களை நீக்குவதற்கும் பிரதமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்பது பொது வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெறப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றமானது ஜனாதிபதி 14 நாட்களுக்குள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின்படி சுயாதீன ஆணைக்குழுக்கான நியமனங்களை வழங்காவிடில் அவ் நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் கருதப்படும் என்ற உத்தேச விதிமுறைக்கும் இதே போன்று மக்கள் அங்கீகாரம் தேவை என நீதிமன்றம் தீர்மானித்தது.
இக் கட்டுரைத் தொடரின் பகுதி 1இல் தெரிவித்தபடி பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருத்தல் வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது.
இங்கு கட்டுரையாளர் மிகவும் கண்ணியத்துடன் தெரிவிப்பது என்னவெனில் 21ஏ தொடர்பான வழக்கில் நீதிமன்றம் மிகவும் பாரதூரமான தவறை இழைத்துள்ளதாக கருதுகிறார்.
அதாவது 21ஏ வழக்கில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், அவர் பிரதமரின் ஆலோசனைப்படி செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பதில் நீதிமன்றம் கடுமையான தவறிழைத்துள்ளதாக கட்டுரையாளர் கருதுகிறார்.
பிரிவு 30(1) மற்றும் 30(2) பிரிவின் விதிகள் ஆகியவற்றில் ஜனாதிபதி மக்களால் தேர்தெடுக்கப்படுவார் என்ற விதியை சட்டப் பிரிவு 4 இல் வேருன்றச் செய்யாத நிலையில் சட்டவாக்கத்தினர் பிரிவு 30(1)இனையும் ஜனாதிபதி மக்களால் தேர்தெடுக்கப்படுவதையும் மேலே குறிப்பிட்ட அளவிற்கு வேருன்ற வைக்கவில்லை.
மேலே விவாதிக்கப்பட்ட அளவிற்கு 30வது பிரிவை வேருன்றச் செய்யாத நிலையில் 22ஏ தொடர்பான முடிவில் தவறிழைக்கப்பட்டுள்ளது.
19ஏ தொடர்பாக உயர்நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தை மிகவும் தெளிவாகவே கட்டுரையாளர் ஆதரிக்கிறார். அத்துடன் 21ஏ, 22ஏ வழக்குகளில் நீதிமன்றம் தனது தீர்மானங்களையும் அதில் பிரிவு 30 வேருன்றிய பகுதியாக ஆக்கப்படாமல் இருப்பதால் ஏற்படும் தாக்கங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தும் என நம்புகிறார்.
அரசியல் யாப்பு இறுக்கநிலை
21ஏ மற்றும் 22ஏ தொடர்பான தீர்மானங்கள் அரசியலமைப்பின் இறுக்கமான போக்கினை மேம்படுத்தியுள்ளது.
19ஏ சம்பந்தமான தீர்மானம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் திருத்தத்தை மேற்கொள்ள சில நெகிழ்வினை அனுமதித்தது.
எந்தவொரு திருத்தத்தையும் மக்களின் இறையாண்மையுடன் ஒப்பிடலாம் என வாதிடுவது இலகுவானது.
ஆனால் வாக்கெடுப்பிற்குத் திருத்தங்களைச் சமர்ப்பிக்கும் வேளையில் அதிகளவு நிதிச் செலவும், பெரும் கால விரயமும் ஏற்படுகிறது. அரசாங்கத்தை எந்தக் கட்சி நடத்தினாலும் அரசியல் அடிப்படையில் மிகவும் செலவு நிறைந்தது.
சமீபத்தைய ‘அறகலய’ நிகழ்வுகளின்போது அரசியலமைப்பு நடைமுறையைக் கடந்து புறக்கணித்துச் செல்லும் அவசியம் குறித்து பல குழுக்களால் தெரிவிக்கப்பட்டது.
இராணுவ சர்வாதிகாரத்தைச் சட்டபூர்வமாக மாற்றுவதற்கு அதாவது பாகிஸ்தானிலும், வேறு பல இடங்களிலும் சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தப்படும் ‘ தேவைக் கோட்பாடு’ ( Doctrine of necessity) என்பதைப் பயன்படுத்தவும் சில பிரிவினர் பரிந்துரைத்தனர்.
இருப்பினும் சட்டப் பிரிவைச் சார்ந்த பெரும்பாலோர் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றுவது அரசியலமைப்பு வழியிலான நலன்களுக்கு உகந்தது என அறிவுறுத்தினர்.
இங்கு ரணசிங்க, இப்ரா லெப்பை என்போர் லஞ்ச ஆணையாளருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மகாராணியின் பிரிவி கவுன்சிலின் கட்டளையின் பிரகாரம் சுதந்திர அரசியலமைப்பின் பிரிவு 29(2) என்பது மாற்ற முடியாதது என்ற நம்பிக்கைக்கு எவ்வாறு வழிவகுத்தது? என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுவே 1972ம் ஆண்டின் அரசியலமைப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ள நடைமுறை தவிர்க்கப்பட்டது.
அவ்வாறு 1972 இல் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு ஆளும் கூட்டணியால் திணிக்கப்பட்ட ஒன்றாகும்.
பிரித்தானிய முடியாட்சியிலிருந்து முற்றிலுமாக முறித்துக்கொண்டு நாடாளுமன்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியதுடன் அரச கொள்கைகளின் பிரகடனத்தை இணைத்ததும் சந்தேகத்திற்கு இடமில்லாது பாராட்டத் தக்கனவாகும்.
ஆயினும் 1972 இன் அரசியல் யாப்பு பெரும்பான்மை வாதத்திற்கு வழி வகுத்தது. இதன் மூலம் சட்டப்படியான ஆட்சி, அரசியலமைப்பின் மேலாதிக்கம் என்ற கோட்பாடுகள் பின்தள்ளப்பட்டன.
அரசியலமைப்பினை மிகவும் நெகிழ்வுள்ளதாக அல்லது மிகவும் கடினமானதாக மாற்றும் இறுக்கமான நீதித்துறை விளக்கங்கள் ஆகிய இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.
2015 இல் நீதியரசர். எஸ். சிறீஸ்கந்தராஜா அவர்களது நினைவுப் பேருரையை வழங்கிய பேராசிரியர். என். செல்வகுமாரன் அரசியலமைப்பு கட்டமைப்புகளின் இறுக்கத்திற்கும், அரசியலமைப்பு விளக்கத்தின் நெகிழ்வுத் தன்மைக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
ஒரு அரசியலமைப்பு என்பது சட்டப்படியான ஆட்சியை உயர்த்திப் பிடிப்பதும், அடிப்படை உரிமைகள் மற்றும் மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதுமாகும்.
இதில் உண்மையான மற்றும் செயற்பாட்டு ஜனநாயகத்தை, ஜனநாயக ஆட்சியை நிலைக்கச் செய்யவும், மேம்படுத்தவும் நீதித்துறை மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
முற்றும்.
ஜனாதிபதி சட்டத்தரணி : டாக்டர். ஜயம்பதி விக்ரமரத்ன
தமிழில் : வி. சிவலிங்கம்