பிரிட்டன் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனக், கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்தப் பதவிக்கு வர விரும்பினார்.
ஆனால் அவர் டோரி உறுப்பினர்களின் பெருவாரியான ஆதரவை பெறுவதில் தவறினார். அதனால், லிஸ் டிரஸ் கடந்த செப்டம்பர் மாதம் டெளனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் பிரதமராக காலடி எடுத்து வைத்தார்.
இருப்பினும் பதவிக்கு வந்த 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் பதவி விலகினார்.
அதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இரண்டாவது முறையாக கன்சர்வேடிவ் கட்சிக் குழு தலைவராக ஆவதற்கான தனது முயற்சியை தொடங்கினார்.
இதேபோல, களத்தில் இருந்த பென்னி மோர்டான்ட் தலைமை பதவிக்கான போட்டியில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கடைசி நேரத்துக்கு முன்பாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த தலைவர்களுடன் போட்டிக்களத்தில் நின்ற ரிஷி சூனக், கன்சர்வேடிவ் தலைவராக போட்டியின்றி தேர்வானார்.
ஆனால் ரிஷி சூனக் யார்?
கடந்த கோடை காலத்தில் பிரதமர் பதவிக்கான போட்டியில் முதலாவது முறையாக களம் கண்ட ரிஷி சூனக் முதன்மையாக ஒரு பிரச்னையில் கவனம் செலுத்தினார்:
பிரிட்டனின் மோசம் அடைந்து வரும் பொருளாதாரம் – அதை சீர்படுத்துவதற்கு தீர்வு என்பதே அந்தத் திட்டம்.
அந்த போட்டியின் போது சூனக் பிபிசியிடம் பேசுகையில், “பொய்யான வாக்குறுதியில் வெற்றி பெறுவதை விட” டோரி தலைமைப் போட்டியில் தோல்வியடைவேன் என்று கூறியிருந்தார்.
அந்த நேரத்தில் லிஸ் டிரஸ் வரிக் குறைப்பு அறிவிப்புகளை வாக்குறுதிகளாக வழங்கினார். அதற்கான எதிர்வினையாக ரிஷி சூனக்கின் கருத்து தோன்றியது, அந்த நேரத்தில் சூனக்கை “பயமுறுத்தக்கூடியவர்” என்று குற்றம்சாட்டினார் லிஸ் டிரஸ்.
ஆனால் லிஸ் டிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் கிட்டத்தட்ட அனைத்து முன்மொழியப்பட்ட வரிக் குறைப்புகளும் திரும்பப் பெறப்பட்டன.
இருந்தபோதும், சமீபத்திய கொந்தளிப்பு குறித்து கருத்து தெரிவிக்காத சூனக், “ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை” சரிசெய்வதற்கும் தனது கட்சியை ஒன்றிணைப்பதற்கும் தான் நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் களம் நிற்கிறேன்” என்றார்.
இதைத்தொடர்ந்து தற்போதைய நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் ரிஷி சூனக்கை ஆதரித்தார், “எங்கள் நீண்ட கால வளத்துக்கான தேர்வை ரிஷி சூனக் செய்வார்” என்று அவர் குறிப்பிட்டார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் ரிஷி சூனக் ‘உதவி செய்ய சாப்பிடுங்கள்’ என்று பிரிட்டிஷ் பொதுமக்களை ஊக்குவித்தார், இது விருந்தோம்பல் நிறுவனங்களுக்கு உதவும் பிரசாரமாகும்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரிஷி சூனக் நிதியமைச்சர் ஆனார். அதற்கு சில நாட்களிலேயே பிரிட்டனில் கொரைனா பாதிப்பு தீவிரம் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு ரிஷி சூனக் வசம் வந்தது.
மில்லினியல் ஆண்டில் பிறந்த, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக அறியப்படும் ரிஷி சூனக், முதலாவது பொது முடக்க காலத்தில் தனது 40வது பிறந்தநாளை எதிர்கொண்டிருந்தார்.
ரிஷி எதிர்கொண்ட சவால்கள்
2020ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஆபத்தில் உள்ள மக்களுக்கு உதவ “எதை வேண்டுமானாலும்” செய்வதாக அவர் உறுதியளித்தார் –
மேலும் £350 பில்லியன் மதிப்புள்ள திட்டத்தை அவர் வெளியிட்டார் – அவரது தனிப்பட்ட கருத்துக்கணிப்பு மதிப்பீடுகள் பரவலான கவனத்தை ஈர்த்தன.
ஆனால் பிரிட்டன் தொடர்ந்து மோசமான பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்டு வந்தது. மேலும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெளனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறியதற்காக காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்ட நடவடிக்கையை ரிஷி சூனக் சமாளிக்க வேண்டி இருந்தது.
கடந்த ஏப்ரலில் சில பழமைவாத விமர்சகர்கள், போராடும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தின் அளவை கோடீஸ்வர அமைச்சர் புரிந்து கொண்டாரா என்று கேள்வி எழுப்பினர்.
அந்த மாதத்தில், ரிஷி சூனக் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிதிகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டன, அவருடைய மனைவி அக்ஷதா மூர்த்தியின் வரி விவகாரங்கள் சர்ச்சை ஆக்கப்பட்டன.
பின்னர் அவர் தனது கணவர் மீதான அரசியல் அழுத்தத்தைத் தணிக்க, தமது வெளிநாட்டு வருமானத்திற்கு உள்நாட்டு வரியை செலுத்தத் தொடங்குவதாக அறிவித்தார்.
தொழிலாளர் கட்சி இந்த நிதி முறைகள் குறித்து பல கேள்விகளை முன்வைத்தது.
2020ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் கேமன் தீவுகளில் உள்ள வரி புகலிட அறக்கட்டளைகளின் பயனாளியாக அவர் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ரிஷி சூனக்குக்கு தொடர்பு இருப்பதாக இன்டிபென்டன்ட் நாளிதழ் கூறியது. அந்த தகவல்களை ஏற்கப்போவதில்லை என்று ரிஷி சூனக்கின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ரிஷி சூனக்: சில அடிப்படை தகவல்கள்
வயது: 42
பிறந்த இடம்: செளதாம்டன்
வீடு: லண்டன் மற்றும் யார்க்ஷையர்
கல்வி: வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்ஃபொர்டு பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்
குடும்பம்: தொழிலதிபர் அக்ஷதா மூர்த்தியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற தொகுதி: ரிச்மொண்ட் (யார்க்ஷையர்)
குடும்பப் பின்னணி
ரிஷி சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள். இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
அவரது தந்தை தற்போதைய கென்யாவில் பிறந்து வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் தங்கனிகாவில் (பின்னர் தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது) பிறந்தார்.
இவரது தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து 1960களில் தங்கள் குடும்பங்களுடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.
ரிஷி சூனக், 1980இல் செளத்தாம்டனில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பொது மருத்துவராக இருந்தார்.
இவரது தாயார் சொந்தமாக மருந்தகத்தை நடத்தி வந்தார்.வின்செஸ்டர் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு சென்றார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் போது, இந்திய கோடீஸ்வரரும், ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியைச் சந்தித்தார் ரிஷி சூனக். பிறகு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பிரதமர் பதவிக்கான தமது முந்தைய தலைமை பிரசாரத்தின் போது, காலநிலை மாற்றத்தின் பின்னணியை குறிப்பிடும்போது, அவர் தனது மகள்களை அடிக்கடி குறிப்பிட்டார்.
பிபிசி தொலைக்காட்சி விவாதத்தின் போது பருவநிலை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூனக், “எனது வீட்டில் நிபுணர்களாக இருக்கும் எனது இரண்டு இளம் மகள்களிடமிருந்து ஆலோசனை பெற்றேன்” என்றார்.
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை, சூனக் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனத்தின் நிதி ஆய்வாளராக இருந்தார். பின்னர் இரண்டு ஹெட்ஜ் முதலீட்டு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருந்தார்.
பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் ரிஷி சூனக், தமது சொத்து மதிப்பு என்ன என்பதை பகிரங்கமாக இதுவரை தெரிவிக்கவில்லை.
அரசியல் பயணம்
2015 முதல் அவர் யார்க்ஷயரில் உள்ள ரிச்மண்டின் கன்சர்வேடிவ் எம்.பி.யாக இருந்து வருகிறார், மேலும் தெரீசா மே அரசாங்கத்தில் இளைய அமைச்சராக இருந்தார். தெரீசா மேவுக்குப் பிறகு பிரதமரான போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ரிஷி சூனக், நிதியமைச்சராக இருந்தார்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதியமைச்சராக பதவி உயர்வு பெற்ற ரிஷி, போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளராக இருந்தார்,
ஆனால் பொருளாதார சீர்படுத்தும் நடவடிக்கையில் தமது சொந்த அணுகுமுறையை நம்பிய அவர், பிரதமரின் அணுகுமுறைக்கும் தமது அணுகுமுறைக்கும் இடையிலான “அடிப்படை” வேறானது என்று கூறி தமது பதவியை ராஜிநாமா செய்தார்.
போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகு நடந்த பிரதமர் பதவிக்கான போட்டியில் டோரி தலைமைப் பிரசாரத்தின் போது அவரது பிரெக்சிட் சொல்லாட்சி வெளிப்பட்டது, ஆனால் இந்த முறை அது சூனக்கிற்கு எதிராகத் திரும்பியது.
தனது வரிக் குறைப்புத் திட்டத்தின் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்ததற்காக, சூனக்கை “பயமுறுத்தும் போக்கு கொண்டவர்” என்று லிஸ் டிரஸ்குற்றம்சாட்டினார்.
தெரீசா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மூன்று முறையும் ரிஷி அதற்கு ஆதரவாக வாக்களித்தார்.
போரிஸ் ஜான்சனின் ஆதரவுடன் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் உள்ளூர் அரசாங்க அமைச்சராக இருந்த அவர் நிதித்துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் சாஜித் ஜாவித், பிரதமருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அந்த பதவிக்கு வந்தார் ரிஷி சூனக்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தமது பதவியை ராஜிநாமா செய்தார். அந்த நடவடிக்கை டோரி தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்த போரிஸ் ஜான்சனின் வீழ்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.
தலைமைத்துவக் கூட்டத்தில், ஜான்சனுக்கு விசுவாசமாக இருப்பதாக சூனக் வலியுறுத்தினார். ஆனால் அவரது அரசாங்கம் தீவிரமான நெறிமுறை கேள்விகளின் “தவறான பக்கத்தில்” இருந்ததால் ராஜிநாமா செய்ததாக சூனக் அறிவித்தார்.
‘அடையாளம் முக்கியம்’
சாஜித் ஜாவிதைப் போலவே, சூனக் பிரிட்டனில் பிறந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர். ஆனால் பிற இடங்களை பூர்வீகமாகக் கொண்டவர். அந்த அடையாளம் தனக்கு முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.
“எனது பெற்றோர்கள் இங்கு புலம்பெயர்ந்துள்ளனர். எனவே நீங்கள் இந்த தலைமுறையினரை இங்கு பெற்றுள்ளீர்கள், அவர்களின் பெற்றோர் இங்கு பிறக்கவில்லை, அவர்கள் இந்த நாட்டிற்கு வாழ்க்கையை உருவாக்க வந்துள்ளனர்” என்று அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“கலாசார வளர்ப்பைப் பொறுத்தவரை, நான் வார இறுதியில் கோவிலில் இருப்பேன் – நான் ஒரு இந்து – ஆனால் நான் [செளதாம்ப்டன் கால்பந்து கிளப்] கால்பந்து விளையாட்டிலும் இருப்பேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் தாம் வளர்ந்து வரும் இனவெறியை தாங்கிக்கொள்ளாத அதிர்ஷ்டசாலி என்று கூறினார். பிறகு ஒரு சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
“நான் என் இளைய சகோதரன் மற்றும் தங்கையுடன் வெளியே இருந்தேன். அநேகமாக மிகவும் இளமையாக இருக்கலாம், நான் ஒரு நடுத்தர வயதுடையவனாக இருந்திருக்கலாம், நாங்கள் ஒரு துரித உணவு உணவகத்தில் இருந்தோம். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அங்கே பலரும் அமர்ந்திருந்தனர். வெகு அருகாமையில், அதை முதன்முறையாக அனுபவித்தேன். மிகவும் விரும்பத்தகாத விஷயங்களை பேசுவதைக் கேட்டேன்.
அந்த வார்த்தை என்னை குத்தியது. எனக்கு அது இன்னும் ஞாபகத்தில்இருக்கிறது. அது என் நினைவில் இருந்து மறையவில்லை. இப்படியாக நீங்கள் பல வழிகளில் அவமானப்படுத்தப்படலாம்,” என்கிறார் ரிஷி சூனக்.
ரிஷி சூனக் பிரிட்டிஷ் ஆசியாவின் முதல் பிரதமராகவும், 42 வயதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இளைய பிரதமராகும் வரலாறைப் படைக்கவிருக்கிறார்.
நாளை அதிகாரபூர்வமாக பிரதமராக பதவியேற்கும் முன் அவர் மூன்றாம் சார்ல்ஸ் அரசரால் பதவியேற்புக்கு அழைப்பு விடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், புதிய பொறுப்பில் அவர் பிரிட்டன் வாழ்க்கை செலவின நெருக்கடியை எதிர்கொள்ளலாம். பல வாரங்களாக கன்சர்வேடிவ் கட்சிக்குள் நிலவும் தலைமை மாற்றம், நிச்சயமற்ற தன்மை போன்றவற்றுக்குப் பிறகு கன்சர்வேடிவ் கட்சி, ஒரு பிளவுபட்ட கட்சியாக தோன்றலாம்.
இதையடுத்தே, ஸ்காட்டிஷ் தேசிய கட்சியைப் போலவே பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் நாட்டில்பொதுத் தேர்தலுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.