ஒரு சில நாட்களில் தலைநகர் ‘கியவ்’ ரஷ்ய படைகள் வசம்.
– உக்ரெய்ன் தலைநகர் சுற்றி வழைக்கப்பட்டது.
– உக்ரெய்ன் ஜனாதிபதி ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றார்.
– உக்ரெய்ன் நாடு அமெரிக்காவிடம் ஆகாய பாதுகாப்புக் கோரிய போதிலும் அமெரிக்கா நிராகரித்தது.
– பல லட்சம் அகதிகள் போலந்து, ருமேனியா, மல்டோவா நாடுகளை நோக்கி நகர்வு
இன்று உலகின் கவனம் ரஷ்ய – உக்ரெய்ன் போரை நோக்கித் திரும்பியுள்ளது.
இப் போரின் தாக்கம் காரணமாக பல நாடுகளில் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. உலகிலே அதிகளவு கோதுமை, எரிவாயு, பெற்றோலியம் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது.
போர் காரணமாக எரிவாயு, எரிபொருள், கோதுமை போன்றன ஐரோப்பிய நாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைப் போட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தற்போது ரஷ்ய இறக்குமதிகள் தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து மிகவும் மௌனமாக இருப்பதோடு, தமது ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் அங்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக எவ்வித ஆதாரங்களுமில்லாமல் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
உக்ரெய்ன் நாடு சுயாதீனமுள்ளது எனவும், அந்த நாடு தனது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் உரிமை உள்ளது எனவும், நேட்டோவில் இணையும் உரிமையை ரஷ்யா தடுக்க முடியாது எனவும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உசுப்பேத்திய அரசியல் தற்போது அந் நாட்டின் கட்டுமானங்கள் நிர்மூலமாகி, பல லட்சம் மக்களை அண்டை நாடுகளுக்குள் அகதிகளாக தள்ளியுள்ள நிலையில் நேட்டோவில் இணைவது உக்ரெய்னின் இறைமை எனக் கூறிய நாடுகள் இன்று கைவிரித்துள்ளன.
உக்ரெய்ன் ஜனாதிபதி Zelensky
உக்ரெய்ன் ஜனாதிபதி தனது நாட்டு மக்களை விமானக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்ற தனது நாட்டிற்குள் விமானங்கள் வராதவாறு தடுக்கும்படி பலதடவை ‘நேட்டோ’ நாடுகளைக் கெஞ்சிக் கேட்டும் இந்த நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து வியாபாரத்தை நடத்தும் அவலம் தொடர்கிறது.
ரஷ்ய நாடு உக்ரெய்ன் நாட்டின் எல்லைக்குள் படைகளை அனுப்பியது சர்வதேச சட்டங்களுக்கு மாறானது என ஐ நா பொதுச்சபை தீர்மானம் இயற்றியும் எதுவும் சாத்தியமாகவில்லை.
இதற்குக் காரணம் என்ன? ரஷ்யாவின் பூகோள அரசியல் நலன்களுக்கு எதிராக உக்ரெய்ன் நாடு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சூழ்ச்சிகளை நம்பிச் செயற்பட்டதே காரணமாகும்.
உக்ரெய்ன் பிரச்சனையை நாம் வெறுமனே போர்ச் சம்பவங்களோடு மட்டும் நோக்க முடியாது. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.
உக்ரெய்ன் நாடு ரஷ்யாவின் பகுதி என ரஷ்யர்கள் இன்னமும் நம்புகின்றனர். சோவியத் குடியரசு 90 களில் சிதைந்த வேளையில் உக்ரேனியர்கள் தமக்கும் சுதந்திரம் கோரி ரஷ்யாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்தனர்.
இப் பிளவுகளின் பின்னணியில் செயற்பட்ட பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவின் எல்லையிலுள்ள அந்த நாட்டை எதிரியாக்கி எந்த நேரமும் ரஷ்ய – உக்ரேனிய உறவுகளைக் கொதி நிலையில் வைத்திருக்க பல திட்டங்களை நிறைவேற்றினர்.
உக்ரெய்ன் நாட்டு அரசியலில் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனிய தேசியவாத சக்திகள் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்தனர்.
குறிப்பாக, சோவியத் சோசலிசக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட வேளையில் உக்ரெய்னின் ஒரு பிரிவினர் ஹிட்லர் தலைமையிலான நாக்ஸிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தனர்.
இந்த அமைப்பின் கோட்பாடுகளை இன்னமும் நம்பும் சில நாக்ஸி அமைப்புகள் தற்போதும் செயற்படுகின்றன.
இவர்கள் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மிகவும் திட்டமிட்டே புரிந்தனர்.
சோவியத் ரஷ்யாவை உருவாக்குவதில் பிரதான பங்கு வகித்த பிரஸ்னேவ், குருஷ்ஷேவ் போன்றவர்கள் உக்ரெய்ன் நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
இவர்கள் உக்ரெய்ன் நாட்டினை தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதில் அதிகம் கவனம் செலுத்தினர்.
தற்போதைய போரின்போது ரஷ்யப் படைகள் சுற்றி வழைத்திருக்கும் பகுதிகளை அவதானித்தால் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பகுதிகள் கைப்பற்றப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வாறான தொழில் வளம் மிக்கதும், வாழ்க்கைத் தரம் உயர்ந்த நாடாகவும் உக்ரெய்ன் உள்ளது. இந்த நாட்டினைத் தமது சந்தையாக மாற்ற ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டிருந்தன.
ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் செல்வம் பெருகும் என்ற நம்பாசை அங்கு காணப்பட்ட மத்திய தர வர்க்கம், தேசியவாதிகள் மத்தியிலே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான விவாதங்கள் அன்றைய அரசியலில் பிரதான விவாதமாக மாறியது.
ரஷ்யாவிற்கு எதிராகச் செயற்படும் தீவிர தேசியவாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை மறைமுகமாக ஆதரித்தனர். இதனால் நாட்டின் பொருளதாரத்தில் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் குறித்த விவாதங்கள் அங்கு பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தின.
2014ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி
இவ்வாறான நெருக்கடிகளின் பின்னணியில் 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி நிகழ்வுகள் பெரும் அச்சத்தை ஊட்டும் வகையில் மாற்றமடைந்தன.
பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையே பெரும் நெருக்கடி ஏற்கெனவே ஏற்பட்டிருந்தது.
பிரதமருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தினருக்குமிடையே ஏற்பட்டிருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜனாதிபதி ‘விக்டர் யனுகோவிச்’ தாமதித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வருகை நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் குறித்துப் பரிசீலனை செய்யவேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் தேசியவாதிகள் தயாராக இல்லை.
தேசியவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இதனால் பொலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டுப் பலர் மரணமாகினர்.
இதனால் குழப்ப நிலை அதிகரித்தமையால் போலந்து வெளிநாட்டமைச்சர், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைமையில் சந்தித்து குழப்பங்களைத் தடுக்க ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர்.
2014ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி நிகழ்வுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், மோதல்கள், படுகொலைகள் என்பனவற்றின் பெறுபேறாக அவற்றைத் தடுக்க எடுக்கும் முயற்சி என்ற பெயரில்தான் ஒப்பந்தம் தயாரானது. சகலரும் ஒப்பமிட்டனர்.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 48 மணி நேரங்களுக்குள் குழப்ப நிலமைகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி புதிய விசேட சட்டம் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர்.
இந் நிகழ்வே அங்கு ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கான முதல் நிகழ்ச்சியாக அமைந்தது.
2014ம் ஆண்டு பெப்ரவரி; 21 – 22 ம் திகதிகளில் ஐரோப்பிய சந்தையில் இணைவதற்கு ஆதரவான சக்திகள் படிப்படியாக அரச கட்டிடங்களை முற்றுகையிட்டனர்.
22ம் திகதி மாலை பாராளுமன்றத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுப் புதிய தலைவர் தெரிவானார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில் அவரது அரசியல் தீர்மானங்கள் வெளியாகின.
அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதி தாமாக பதவி விலகவேண்டுமெனவும், அவர் அரசியல் அமைப்பு அதிகாரங்களைச் செயற்படுத்த முடியாது எனவும் தீர்மானம் இயற்றினர்.
மறு நாள் 23ம் திகதி ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தற்காலிகமாக பாராளுமன்றத் தலைவர் பதில் ஜனாதிபதி என்ற பெயரில் பொறுப்பேற்றார். இம் மாற்றத்தை ஆதரிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இம் மாற்றங்களை உடனடியாகவே அங்கீகரித்தது.
இச் சம்பவங்களை வரிசையாக அவதானித்தால் உக்ரெய்னில் எவ்வாறு தேசியவாதிகளும்;, நாக்ஸிஸ்டுகளும் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்தார்கள் என்பதும், ஜனநாயகம் பற்றி அதிகளவு பீத்திக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் இவ் ஜனநாயகப் படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட விபரங்களையும் காணலாம்.
பெப்ரவரி 23ம் திகதி இடம்பெற்ற மாற்றங்கள் காரணமாக ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் ரஷ்யாவில் அடைக்கலம் பெற்றார்.
அதன் பின்னர் பதில் ஜனாதிபதி பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தை ஏவும் பிரகடனத்தை 2014ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி வெளியிட்டார்.
இதன் விளைவாக அப் பிரதேசங்;களில் போராட்டங்களை நடத்திய ரஷ்யர்கள் ஏப்ரல் 27ம் திகதி தமது பிரதேசத்தினைத் சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தினர்.
உக்ரேய்ன் அரசு தாமாகவே போர் நிலமைகளை உருவாக்கியதோடு, நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும் அவர்களே வாய்ப்பை ஏற்படுத்தினர்.
உக்ரேனிய படைகள் அப் பிரதேசத்தில் நுழைந்து சுமார் 30 ஆர்ப்பாட்டக்காரர்களை தொழிற்சங்க கட்டிடத்திற்குள் வைத்து தீயிட்டுக் கொழுத்தினர். 2014ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி நிராயுதபாணியினான மக்கள் பேரணியாகத் தாம் மாபெரும் தேசபக்தி யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
அங்குள்ள உள்ளுர் பொலீஸ் நிலையம் முன்பதாக சென்ற மக்களை தீவிர வலதுசாரி பட்டாளத்தினர் சுட்டுக் கொன்றனர்.
இங்கு உக்ரேனிய ராணுவம் மட்டுமல்ல, வலதுசாரி தீவிரவாத நாக்ஸிச சக்திகளும் இப் போரில் இணைந்திருப்பதை உணர்த்தியது. பொலீசாரும், பொது மக்களும் இச் சம்பவத்தில் உயிரிழந்தார்கள்.
இச் சம்பவங்கள் குறித்து மனித உரிமை இயக்கங்கள் குரல் எழுப்பினார்களே தவிர அதன் பின்னால் எதுவுமில்லை.
அங்கு ஐரோப்பிய எதிர்ப்புக் கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டன.
உக்ரெயினின் தென் பிராந்தியங்களில் அந் நாட்டின் ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உக்ரெயின் அரசு அலட்சியப்படுத்தியது.
ரஷ்ய மொழி நூல்கள், தொலைக்காட்சி சேவைகள் முற்றாகத் தடுக்கப்பட்டன. ரஷ்யா ஆதரவு எழுத்துக்கள், கருத்துக்கள் போன்றன ரஷ்ய ஆதரவு எனக் கூறிக் கடும் தண்டனை வழங்கப்பட்டது.
ரஷ்யத் தலைவர் புட்டினைக் கொல்லும்படி அமெரிக்க செனட்டர்கள்
அமெரிக்க அரசுத் தலைவர்கள் தற்போது மிகவும் அச்சமடைந்துள்ளதோடு அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது என்பது உலகளவில் தெரிந்துள்ளது.
மூன்றாவது உலகப் போரை தமது பிராந்தியத்தில் நடத்த ஐரோப்பியர்கள் தயாராக இல்லை. அமெரிக்கப் பொருளாதாரம் சரிந்து தற்போது சீனப் பொருளாதாரம் வளர்ந்துள்ள நிலையில் மூன்றாவது உலகப் போர் நடக்குமானால் அதில் சீனா, ரஷ்ய அணியுடன் ஆசிய நாடுகள் இணைந்து கொள்ளும் என்பதையும் இந்த நாடுகள் புரிந்துள்ளன.
அதன் காரணமாக அமெரிக்க வலதுசாரி செனட்டர்கள் யூலியஸ் சீசரைக் கொல்ல ஒரு ‘புருட்டஸ்’ போல் ஒரு ரஷ்யர் அந்த நாட்டில் இல்லையா? எனத் தேடுகின்றனர்.
இந்த ஆட்சியாளர்கள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போதிக்கும் அதேவேளை கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ரோ, லிபியத் தலைவர் கேணல் கடாபி எனக் கொலை செய்யவும் தயாராக இருக்கும் நிலையே இன்றைய அரசியலாகும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தனித்துவமான பலத்தினைத் தற்போது உணர்ந்து வருகின்றன.
உலகப் பொருளாதார வளர்ச்சி தற்போது கிழக்கு நோக்கித் திரும்பியிருக்கிறது. ஒரு காலத்தில் கிழக்கின் மூல வளங்களைச் சுரண்டி அந்த நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக ஒடுக்கி வைத்திருந்த காலங்கள் மாறிவிட்டன.
இந்தியா மிகவும் சுயமாகவே தனது வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அளவிற்குப் பலமாக வளர்ந்துள்ளது.
ஐ நா சபையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த பல தீர்மானங்களில் இந்தியா வாக்களிக்கவில்லை. அதே போலவே சீனா, ரஷ்யா ஆகியனவும் பலமாக வளர்ந்துள்ள நிலையில் எதிர் காலத்தில் புதிய கூட்டிற்கான ஆரம்பமாகவே ரஷ்ய – உக்ரெய்ன் போரின் விளைவுகள் அடையாளப்படுத்துகின்றன.
உக்ரெய்ன் எதிர்காலம் என்ன?
இஸ்ரேல் நாடு தனக்கு அண்மையிலுள்ள நாடுகளை மிகவும் பயமுறுத்தி வருகிறது. தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எந்த நாடு இருப்பினும் அந்த நாட்டை தானே முதலில் தாக்குகிறது.
உதாரணமாக, தனது பாதுகாப்பைக் காரணம் காட்டியே பல தசாப்தங்களாக பாலஸ்தீனர்கள் மீது தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
அதே போலவே ஈரான் நாடு அணு ஆயுதங்கள் தயாரிக்க இடமளிக்க முடியாது என கூறி வருகிறது. இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக என்ற பெயரில் நடத்தும் சகல அடாவடிகளுக்கும் அமெரிக்கா ஆதரவளிக்கிறது.
1994ம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உக்ரெய்ன் ஜனாதிபதி விலாடிமிர் ஷெலன்ஸ்கி தனது நாடு அணு ஆயுதங்களை இன்னொரு நாட்டிடம் கையளிக்க விரும்பவதாகவும், அதற்குப் பதிலாக தனது நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
அமெரிக்கர்கள் ஈராக் நாட்டில் ஜனநாயகத்தைக் நிலை நாட்டுவதாகக் கூறி சுமார் 25 ஆண்டுகள் தங்கி அந்த நாட்டின் வளங்களைச் சூறையாடினார்கள்.
அங்கு ஜனநாயகம் துளியேனும் இல்லை. அறிஞர்களின் கருத்துப்படி ரஷ்யாவின் போர் தந்திரங்களை அவதானிக்கையில் தலைநகரான ‘கியவ்’ இல் தேசியவாதிகள் கெரில்லா யுத்தமொன்றை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேற்கு நாடுகள் அதற்கான விதத்தில் ஆயுதங்களைக் கையளித்து வருவதாகத் தெரிகிறது.
அதனால் ரஷ்யர்கள் உக்ரெயினின் எல்லைகளை முதலில் கைப்பற்றி அதனூடாக முக்கிய பிரதேசங்களின் நகரங்களைப் பலப்படுத்தி மத்திய அரசு பலம் குறைந்ததாகவும், மாநிலங்களில் பலம் வாய்ந்த அரசியல் கட்டுமானங்களை உருவாக்க எண்ணுவதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறான அமைப்புத் தோற்றுவிக்கப்படுமாயின் தேசியவாதிகளின் கனவும் கலைவதோடு, வெளிநாட்டுக் கொள்கை என்பது பிரதேசங்களின் சம்மதத்துடன் மேற்கொள்ளும் பொறிமுறையாக மாற்றமடைய வாய்ப்பு உண்டு எனக் கருதப்படுகிறது.
அதாவது ஒருவகை சமஷ்டி வடிவத்திலான அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படலாம். எனவே ரஷ்ய – உக்ரெய்ன் மோதல்களை நாம் நேட்டோ பிரச்சனையினூடாகப் பார்க்காமல் அதன் வரலாற்றுப் பின்னணியோடு அணுகுவது அவசியமாகிறது.
இப் பின்னணியில் மேற்கு நாடுகளின் அணுகுமுறைகளை ஆதரித்து இதே ஊடகத்தில் கட்டுரை வரையப்பட்டு வருகிறது. எனவே அவை பற்றிய சில அம்சங்களைக் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன்.
உதாரணமாக, சோவியத் சோசலிசக் குடியரசு கலைக்கப்பட்ட வேளையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சோவியத் குடியரசிலிருந்து விலகிய நாடுகளை ‘நேட்டோ’ அமைப்பில் இணைப்பதில்லை என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதை அந் நாடுகள் மீறியுள்ளன என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் அவை பற்றி அக் கட்டுரை தெரிவிக்கையில் முன்னாள் சோவியத் குடியரசுத் தலைவர் ‘குர்பச்சேவ்’ அவ்வாறு நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே எழவில்லை என அவர் 2014இல் குறிப்பிட்டார் என நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் அக் குறிப்பு பற்றிய விபரங்களை அக் கட்டுரை வெளியிட்டிருக்க வேண்டும். பதிலாக இல்லாத ஒரு உறுதி மொழியை ரஷ்யா மீள ஒப்புவித்து மண்டையைக் கழுவுகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அக் கட்டுரையைப் படிக்கும்போது அமெரிக்கா எப்போதுமே எழுத்து மூலமான ஒப்பந்தங்களைக் கௌரவிக்கும் ஒரு நாடு எனவும், எழுத்து மூலமான ஒப்பந்தம் இல்லாத நிலையில் அரசுகள் மக்கள் ஆணையோடு நேட்டோவில் இணைய விண்ணப்பிக்கும்போது அதனை நேட்டோ தடுக்க முடியாது என்ற கருத்து நியாயமாக முன்வைக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..
அமெரிக்காவின் நியாய அநியாயங்களை சிறு பிள்ளையும் அறியும். அமெரிக்கா அருகிலுள்ள கியூபா இன்று வரை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அல்லது அதன் தலைவரை எத்தனை தடவைகள் முயற்சித்தார்கள்.
மத்திய கிழக்கில் ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் அரசுகள் கவிழக்கப்பட்ட விபரங்கள் உலகம் அறியாததல்ல.
இங்கு இன்னொரு வியப்பான நியாயம் எதுவெனில் நேட்டோ விரிவாக்கம் தொடர்பாக அன்றிருந்த அமெரிக்க வெளியறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் அவ்வாறான உறுதியை வழங்கியுள்ளார்.
அதாவது அவர் ‘கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நேட்டோ நகராது’ என்ற வாய்மொழி வாக்குறுதியை அளித்ததாக ஏற்றுள்ள அக் கட்டுரை அவை எழுத்து மூலமாக இல்லை என சப்பைக்கட்டுப் போடுகிறது.
இதன் மூலம் அமெரிக்கர்களின் வாய்மூல வாக்குறுதிகள் பெறுமதியற்றவை என்பது தெளிவாகிறது. இங்கு ஒப்பந்தம் உள்ளதா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை.
ஆனால் நேட்டோ விஸ்தரிப்புத் தொடர்பாக அங்கு பேசப்பட்டிருக்கிறது. உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா அதனை மதிக்குமா? இல்லையா? என்பதை வாசகர் தீர்மானிக்கலாம்.
இப் போர் உலக அளவில் புதிய ஒழுங்கை நோக்கிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. பொருளாதார மற்றும் ராணுவ பலமுள்ள நாடுகள் சிறிய நாடுகளை ஓடுக்கி தமது வலையத்திற்குள் வைப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.
இதுவரை காலமும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவற்றை மிகவும் வெளிப்படையாக மேற்கொண்டன.
இதனால் சில சிறிய நாடுகள் அமெரிக்க பாதுகாப்பை நோக்கிச் சென்றன. ஆனால் மிகவும் பலவீனமான உக்ரெய்ன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வாக்குறுதிகளை நம்பி ‘நேட்டோ’ ராணுவ அணியில் இணைவதாகக் கூறி ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய எண்ணியதால் ஏற்படக்கூடிய விழைவு என்ன? என்பது மிகவும் தெளிவாகவே உணர வைக்கப்பட்டுள்ளது.
இதுவே இலங்கை அரசு சீனாவை நோக்கி நகருமானால் இதே பிரச்சனைகள் எழ அதிக வாய்ப்பு உண்டு.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பத்திரிகையாளர் ‘நீங்கள் விலாடிமிர் ஷெலன்ஸ்கியின் இடத்தில் இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்திருப்பிர்கள்?’ என வினவிய போது ‘நிச்சயமாக அவ்வாறான தற்கொலை முடிவுக்கு நாட்டை எடுத்துச் சென்றிருக்க மாட்டேன்’ எனத் தெரிவித்தார்.
இதுவே நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய விவேகமான முடிவாகும். இன்றுள்ள பூகோள அரசியல் போட்டியில் சிறிய நாடுகள் மிகவும் விவேகமாக அணிசேரா அணியில் இணைவதாகக் கூறித் தப்பிக்கின்றன.
ஆனால் தற்போதைய இலங்கை ஆட்சித் தலைவர்கள் சீனாவுடன் கொண்டாட்டம் நடத்தலாம் எனக் கனவு காணுவதும், பௌத்த சிங்கள அரசை சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கலாம் எனக் கனாக் காண்பதும் ‘ஷெலென்ஸ்கி’ இன் இன்றைய உக்ரெய்ன் நிலமைகளையே உருவாக்கும்.
அமெரிக்கா தம்மைக் காப்பாற்றும் எனக் கனவு கண்ட ‘ஷெலென்ஸ்கி’ தற்போது நேட்டோவை மட்டுமல்ல, நாட்டை அண்டை நாடுகளுக்கு எதிராக தூண்டும் ராணுவக் கட்டமைப்பையும் இல்லாதொழித்திருக்கிறது.
இங்கு ரஷ்யாவின் செயல் நியாயமானதா? என்பதை விட சிறிய நாடான உக்ரெய்ன் தனது எதிர்காலத்தை மிகவும் கவனமாக முடிவு செய்திருக்க வேண்டும். அங்கு வாழும் ரஷ்ய மக்களின் நியாயமான அபிலாஷைகளை நியாயமான விதத்தில் அணுகித் தீர்த்திருக்க வேண்டும்.
இலங்கை ஆட்சியாளர்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அந் நாட்டில் வாழும் தேசிய சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்தது மட்டுமல்ல, ராணுவ ஒடுக்கு முறைகளையும் உபயோகித்தனர்.
இன்று முழு நாடுமே பொருளாதாரச் சீரழிவில் சிக்கியுள்ளது. இதுவே உக்ரெய்ன் இன்றைய ஆட்சியாளர்களின் செயற்பாட்டின் முடிவாகவும் இன்று மாறியுள்ளது.
தேசியவாதத்தை உக்கிரப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றலாம். ஆனால் அங்கு ஜனநாயகத்தைத் தோற்றுவிக்க முடியாது.
அமைதியை ஏற்படுத்த முடியாது. இலங்கையில் சிங்கள பௌத்த இனவாதம் நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்தது. உக்ரேனிய தேசியவாதத்தின் முடிவும் அதே கதையாக முடிந்துள்ளது.
முற்றும்.
வி.சிவலிங்கம்
தொடரின் மற்றைய பகுதிகள்…கீழே
ரஷ்யா, உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? (பகுதி 2)- வி. சிவலிங்கம்
ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்