சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை, மஞ்சள் தூள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சித்திரவாடியில் உள்ள மயானத்தில் 10 நாள்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி பூஜை செய்து தலையை மட்டும் தனியாக எடுத்துச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு 12 வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார்.

அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த கிருத்திகா அக்டோபர் 5-ம் தேதி வீட்டின் எதிரே சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது தெருவிளக்கை மாற்றுவதற்காக வந்த கலைச்செல்வன் என்பவர் மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.

மின்கம்பம் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்ததால் அதன் அடிப்பகுதி முறிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கிருத்திகாவின் மீது விழுந்தது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கிருத்திகா சிகிச்சைகாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறுமி மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஒருவாரத்துக்கு மேல் சிகிச்சையில் இருந்த சிறுமி கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து 15-ம் தேதி சிறுமியின் உடல் சித்திரவாடியில் உள்ள மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த 24-ம் தேதி மயானம் வழியாக சென்ற கிராமத்தினர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை, மஞ்சள் தூள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர்.

அப்போது மயானத்தில் புதைக்கப்பட்ட இருந்த சிறுமியின் உடலில் தலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடலை கைப்பற்றிய போலீஸார் மறு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் தலையை எடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

 

அமாவாசை அன்று சூரிய கிரகணம் நேரத்தில் தலையை மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு நரபலி மாந்திரீகம் செய்ய தலைச்சன் பிள்ளை தலை வைத்து மந்திரம் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாந்தீரம் உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் நபர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version