ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன.
மறுநாள், அதாவது 10ம் தேதி வியாழக்கிழமை அடிலைட் மைதானத்தில் 2வது அரையிறுதி நடைபெறுகிறது.
இதில் குரூப் 2 சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும் குரூப் 1 சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்தும் விளையாடுகின்றன.
இங்கிலாந்த் அணி எப்படி?
நடப்பு டி20 தொடரில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடியது. இதில் நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான கம்பேக்கை கொடுத்தது.
இதுதவிர, ஆஸ்திரேலியா உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 125 ரன்களையும், ஜாஸ் பட்லர் 119 ரன்களையும் சேர்த்துள்ளனர். இது இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு.
டேவிட் மாலன் பேட்டிங்கில் கணிசமான ரன்களை சேர்க்கிறார். ஆனால் அவர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருவது அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அரையிறுதியில் அவர் விளையாடாத பட்சத்தில் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையக்கூடும்.
பந்துவீச்சில் சாம் கரண் இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார். மார்க் உட் 9 விக்கெட்களை இதுவரை சாய்த்துள்ளார். இதுதவிர பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பு செய்வார்.
இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.
இதில் 2 – 1 கணக்கில் இந்தியா தொடரையும் வென்று திரும்பியது. இதில் கவனிக்கப்பட வேண்டியது சூர்யகுமாரும் புவனேஸ்வர் குமாரும்தான். கடைசி டி20 ஆட்டத்தில் டேவிட் மாலன் அதிரடியால் இங்கிலாந்து 215 ரன்களை சேர்த்தது.
அதிரடி காட்டிய சூர்யகுமார்; 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன?
இந்தியா இந்த போட்டியை தோற்றிருந்தாலும் சூர்யகுமாரின் ஆட்டம் சற்று ஆறுதலை தந்தது. இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 55 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார் சூர்யகுமார்.
தற்போது அவர் நல்ல ஃபாமில் இருப்பது நிச்சயம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலை தரும். இதேபோல அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் புவனேஸ்வர் குமார். துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்டிங்கை திணறடித்தது கவனிக்கத்தக்கது.
ஜொலிக்கும் கோலி, சூர்யகுமார்; ஆனால்..
விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் இருவருமே அற்புதமான ஃபார்மில் வலம் வருகின்றனர். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இருவரும் தலா 3 அரைசதங்களை விளாசியுள்ளனர்.
நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 246 ரன்களுடன் கோலி முதலிடமும் 225 ரன்களுடன் சூர்யகுமார் 2ம் இடமும் வகிக்கினறனர். ஆசிய கோப்பை தொடரில் கோலி சதம் விளாசிய பிறகு அவர் பேட்டிங் திறன் அபாரமாக உள்ளது.
சூரிய குமார்
நடப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கோலி பெற்றுக்கொடுத்த வெற்றி பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது. கோலி – சூர்யகுமார் இருவருமே இங்கிலாந்தை அச்சுறுத்த காத்திருப்பார்கள். இருப்பினும் அவர்கள் இருவரை மட்டுமே இந்திய அணி சார்ந்திருக்க முடியாது.
இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்
“பேட்டிங்கை பொறுத்தவரை ரோஹித்தின் ஃபார்ம் கவலையை அளிக்கிறது. இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் அவருக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை ராகுலோ ரோஹித்தோ பவர் பிளேவுக்குள் விக்கெட்டை இழந்தால் கர்ரனை சமாளிக்க இடக்கை வீரரான ரிஷபை இறக்குவதும் ஒரு நல்ல ஆப்சனே! மிடில் ஓவர்களில் மார்க் வுட் தவிர நம்பகமான ஒரு பவுலர் இங்கிலாந்துக்கு இல்லை.
பலவீனமான இங்கிலாந்து டெத் பவுலிங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள பிராப்பர் பேட்ஸ்மேன் ஆன கோலி இறுதிவரை களத்தில் நிற்பது அவசியம்.
மார்க் வுட் Vs சூர்யகுமார் யாதவ் ஒரு முக்கியமான மோதலாக இருக்க வாய்ப்புள்ளது. பெரிய அணிகளுடனான போட்டிகளில் முதலில் பேட் செய்யும் போது இந்தியா தடுமாறுவது வாடிக்கையாக உள்ளது; அதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
டாப் ஆர்டர்தான் இந்த தொடரில் இங்கிலாந்தின் பலமாக உள்ளது. குறிப்பாக கேப்டன் பட்லரை விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம். ஆகவே பவர் பிளேவில் அர்ஸ்தீப் சிங் உடன் புவனேஷ்வர் குமாரும் பொறுப்புடன் வீச வேண்டிய தேவையுள்ளது” என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் தினேஷ் அகிரா.
இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தனது அணி வீரர்களை தேர்வு செய்ததில் தவறிழைத்தது. அதன் விளைவாக தொடரில் இருந்து விலகவும் நேரிட்டது. இந்த முறை ரோஹித் சர்மா, பெரிய மாற்றங்களின்றி ஒரே வீரர்களை கொண்டு போட்டிகளை எதிர்கொண்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதில் தீபக் ஹூடா களமிறக்கப்பட்டாலும் அவரிடம் இருந்து எந்த பங்களிப்பும் கிடைக்காததால் அடுத்த போட்டியே அவர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அக்சர் படேல் கொண்டு வரப்பட்டார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.
வீரர்களை தேர்வு செய்வதில் ரோஹித் அதிக கவனத்துடன் செயல்படுவது தெரிகிறது. பெரும்பாலும் இந்தியா சூப்பர் 12 சுற்றில் விளையாடிய அதே வீரர்களை கொண்டு அரையிறுதி ஆட்டத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
உத்தேச ஆடும் லெவன்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது சமி
நியூசிலாந்து – பாகிஸ்தான் ஆட்டம் எப்படி இருக்கும்?
நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் போட்டியிலேயே 200 ரன்களை குவித்ததோடு ஆஸ்திரேலியாவை வெறும் 111 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தாலும் இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் ரத்தானது. பேட்டிங்கில் க்ளென் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன், டெவோன் கான்வே ஆகியோர் கவனிக்கப்பட வேண்டியவர்கள். நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சும் பாகிஸ்தானுக்கு சவாலாக அமையக்கூடும்.
மறுபுறம் பாகிஸ்தான் தனது சொந்த ஆட்டத்திறனால் அரையிறுதிக்கு வரவில்லை. அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் அடைய பிற அணிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் மிரட்டிய பாபர் ஆசாம் இந்த தொடரில் சொற்ப ரன்களில் நடையை கட்டுவது, எந்த ஒரு பேட்ஸ்மேனிடமும் கன்சிஸ்டன்சி இல்லாதது உள்ளிட்ட பல பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான்.
பேட்டிங்கை சிறப்பாக செய்யும் பட்சத்தில் நியூசிலாந்துக்கு சவாலாக மாறலாம். இல்லை எனில், முதல் அரையிறுதி ஆட்டம் ஒன் சைடட் கேமாக மாறிவிடும்.