40-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனையை இந்தாண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது வடகொரியா. அடுத்த போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறாரா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த மாதம் 6-ம் தேதி வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனையை நடத்தியது. அப்போது அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா ஏவுகணை சோதனை, கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலடி தருவதற்காகவே சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தது வட கொரியா.

ஆனால் தற்போது எந்த காரணமும் இன்றி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் குறுகிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது வடகொரியா. இது கிழக்கு கடலோரத்தில் உள்ள டாக்ஸோன் பகுதியில் இருந்து விண்ணை நோக்கி பாய்ந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஏவுகணை சோதனை ஆத்திரம் மூட்டுவதாக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவதாக தென்கொரியா கூறியது.

இந்த ஆண்டு மட்டும் தற்போது வரை வடகொரியா 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா ஏவுகணை பரிசோதனை

அணு ஆயுத வலிமை கொண்ட நாடாக மாறுமா?

கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் காரணமாக சீனாவில் இருந்து உணவுகள் இறக்குமதி குறைந்த நிலையில், வடகொரியா பெரும் உணவு பற்றாக்குறையை சந்தித்தது.

மேலும் அந்நாட்டு மக்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் சத்தான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டனர்.

அதற்காக தீவிர நடவடிக்கைகளை ஏதும் எடுக்காமல், 2025-ம் ஆண்டு வரை மக்கள் குறைவான உணவு சாப்பிட வேண்டும் என்று வடகொரிய மக்களுக்கு உத்தரவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அதிபர் கிம் ஜாங் உன்.

இவ்வாறு பசியால் மக்கள் வாடிய நிலையிலும் தொடர்ந்து ஏவுகணை சோதனையை கைவிடாமல் நடத்தியது வடகொரியாவின் மீது பெரும் விமர்சனத்தை கிளப்பியது.


வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

அணு ஆயுத சக்தி மிகுந்த நாடாக உருவாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

அதனால் தான் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையிலும் தொடர்ந்து அணு சோதனையை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வகையில் அணு சோதனை நடத்தி வருவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

பொருளாதார தடை விதிக்கப்படுமா?

அணு ஆயுத சோதனை நடத்த வேண்டாம் என்று உலக நாடுகள் அனைத்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

ஆனால், ஏவுகணை சோதனை தொடர்ந்து நடத்தி வரும் வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நாவிடம் பல நாடுகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த அணு சோதனைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பொருளாதார நெருக்கடி

மேலும், ஐநா.வின் அணு ஆயுதப் பிரிவு தலைவர் ரபேல் குரோசி, `வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது கவலை அளிக்கிறது.

இது, வடகொரியா ஆயுத தளவாடங்களை போருக்கு தயார்நிலையில் வைப்பதை காட்டுகிறது. ஐநா இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது,’ என்று தெரிவித்தார்.

இந்நிலை தொடர்ந்தால் பொருளாதார தடையை விதிக்கும் சூழல் உருவாகும் எங்கின்றனர் இந்தப் பிரச்னையை உற்று நோக்குவோர்.

போர் நடக்கும் சூழல் உருவாகுமா?

1950 ஆம் ஆண்டு நடந்த கொரியா போரின்போது, வட கொரியா தென்கொரியா என இரு நாடுகளாக பிரிந்தது.

அதன் பிறகு தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலும் பகை நிலவி வருகிறது. தென்கொரியாவை வீழ்த்த வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.

இதனால் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவமும் இணைந்து வடகொரியாவை எதிர்க்க படைகளை தயார் செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் மட்டும் வடகொரியா 23 ஏவுகணைகளை தென்கொரியா எல்லை நோக்கி வீசியிருக்கிறது.

அவற்றில் ஒரு ஏவுகணை இரு நாடுகளுக்கும் இடையில், அதாவது தென்கொரியாவின் சோக்சோ நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கும் கடல் எல்லையில் விழுந்துள்ளது.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளையும் கிழக்கு கடற்பகுதியில் வீசிய வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் மூன்று ஏவுகணைகளை அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி வீசியது.

இவ்வாறு தொடர்ந்து இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி வரும் நிலையில் போர் உண்டாகுமா? என்ற அச்சம் அண்டை நாடுகளுக்கும் ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து வடகொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி செய்து வரும் நிலையில், அதற்கு வடகொரியா பிடி கொடுக்கவில்லை .

எனினும், வடகொரியா மற்றும் தென் கொரியா நாடுகள் இடையே போர் தொடங்குவதற்கு முன்பாக அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை கொண்டுவர ஐ.நா நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version