முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என். குல்கர்னி சாலை விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலை என் காவல்துறை விசாரித்து வருகிறது.

மைசூரில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என். குல்கர்னி நவம்பர் 4-ம் தேதி கார் மோதியதில் மரணமடைந்தார்.

இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில், பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை எப்போதும் போல வாக்கிங் சென்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆர்.என். குல்கர்னி மீது வேகமாக வந்தக் கார் மோதி தூக்கி வீசப்படும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது.

ஆர்.என். குல்கர்னி

அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில், மைசூரு மாநகராட்சி விதிகளை மீறி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டதாக அண்டை வீட்டாரிடம் கேள்வி எழுப்பியதால் குல்கர்னி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆர்.என். குல்கர்னியின் மருமகன் சஞ்சயா அங்காடி,” எனது மாமனார் ஆர்.என்.குல்கர்னி-யின் பக்கத்து வீட்டுக்காரரான மாதப்பா கட்டடம் கட்டிவந்தார். சட்ட விதிகளை மீறி கட்டுமானத்தை தொடங்கினார்.

இதை எச்சரித்தும் அவர் கேட்காததால், எனது மாமனார் மாநகராட்சியில் புகார் அளித்து, உயர் நீதிமன்றத்தில் கட்டுமானப் பணிக்கு தடையும் வாங்கினார்.

இதற்கு முன் பலமுறை அவரின் மீது கொலை முயற்சி நடந்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி,” ஐபிசி பிரிவுகள் 302 மற்றும் 34-ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.

இந்த வழக்கில் சந்தேகப்படும்படியாக மாதப்பா மற்றும் அவரின் மகன்களை சஞ்சயா அங்காடி குறிப்பிட்டுள்ளதால், மூவரையும் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளோம்.

இது ஒரு கொலை வழக்கு. இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள சரியான காரணத்தை நிறுவ பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version