உக்ரைனிலிருந்து ரஷ்ய ராணுவம் முழுமையாக வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வெளியானது.
ஆனால் மறுபக்கம் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத வகையில் ஓரே நாளில் 100 ஏவுகணைகளை வீசித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியபோது, ரஷ்யா முதன்முதலில் கைப்பற்றிய பகுதி கெர்சன். இது உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து முற்றிலும் வெளியேறியிருப்பதாக கடந்த புதன்கிழமை ரஷ்யா அறிவித்தது.
இதை உறுதிப்படுத்தும்விதமாக கெர்சன் காவல் நிலையத்திலும் ரஷ்யக்கொடி அகற்றப்பட்டு, உக்ரைன் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது. குறிப்பாக, ரஷ்ய ராணுவத்தின் போர்க் கருவிகளோ, ஆயுதங்களோ அந்தப் பகுதியில் இல்லை என்னும் தகவல் வெளியாகியது.
ரஷ்ய ராணுவத்தின் இந்த அறிவிப்பு, உக்ரைன், அமெரிக்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கியது. குறிப்பாக, உக்ரைன் படைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நுழையவைத்து அவர்களை வீழ்த்தும் திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
ரஷ்ய படைகள்
இருப்பினும், அடுத்த நாள் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவின் படைகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதை உறுதிசெய்தனர். ஆனால், உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாமலேயே இருந்தது.
இந்த நிலையில்தான் கெர்சன் பகுதியில் இருக்கும் பாலத்தில் ரஷ்ய வீரர்கள் ஊடுருவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி குழப்பத்தை ஏற்படுத்தின.
ஆனால் அது போலியானது என்று உக்ரைன் தெரிவித்தது. மேலும், உக்ரைன் வீரர் ஒருவர் பாலத்துக்கு அருகில் நின்று அந்நாட்டு தேசியக்கொடியைப் பற்றியிருக்கும் புகைப்படமும் வெளியாகி ரஷ்யப் படைகள் வெளியேறியதை உறுதிசெய்தது.
ரஷ்யாவின் படைகள் வெளியேறிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டாலும், ரஷ்யாவின் அச்சுறுத்தல் மேலும் இருக்கும் என்று கூறப்பட்டது.
அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து அழைப்புவிடுத்தபோதும் எட்டு மாதங்களாகத் தீவிர யுத்தத்தில் ரஷ்யா ஈடுபட்டுவந்தது. ஆனால், ஒருபக்கம் பின்வாங்குவதாக அறிவித்துவிட்டு நாட்டின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தி
நாட்டின் பிற பகுதிகளான மிகோலைவ், செர்னிவ், சபோரிசியா ஆகிய இடங்களில் ரஷ்யா தாக்குதல் தொடுத்திருக்கிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட செர்னிவ் பகுதியின் மேயர் யாசெஸ்லவ் சாயஸ், `வான்வெளி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார்.
உக்ரைன் – ரஷ்யா போர்
ரஷ்யா தரைவழியில் பின்வாங்கலைச் சந்திக்கும்போது வான்வெளித் தாக்குதலைக் கையில் எடுக்கிறது. கெர்சன் பகுதியிலிருந்து பின்வாங்குவதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியபோதே ரஷ்யாவைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என நேட்டோ எச்சரித்தது. இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் தாக்குதலை நடத்தியிருக்கிறது ரஷ்யா.
ரஷ்யாவின் திட்டம் என்ன?
தற்போது கிழக்கு உக்ரைன் நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறிவருகின்றன. அந்தப் பகுதியில் இரு படைகள் போர்புரியும் காணொளிகள் வெளியாகின.
குறிப்பாக, டான்பஸ் பகுதியைக் கைப்பற்ற கெர்சனில் இருந்த திறமை வாய்ந்த படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் படையால் டோனேஸ்க், பேக்முட், அவ்தீக்கா ஆகிய மூன்று இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. பேக்மூட் பகுதியைக் கைப்பற்றுவதன் வாயிலாக உக்ரைனின் ஆயுதப் பரிமாற்றத்தைத் தடுக்க முடியும். மேலும், ரஷ்யப் படைகளால் க்ராமடார்ஸ்க் மற்றும் ஸ்லோவியன்ஸ்க் பகுதிகளில் ஊடுருவ வாய்ப்பு கிடைக்கும்.
டான்பஸ் பகுதியைப் பொறுத்தவரை ரஷ்யாவின் தாக்குதல் கடுமையாக இருப்பதாகவும், இந்தச் சூழலில் ரஷ்யப் படைகளை முற்றிலுமாகப் பின்வாங்கவைப்பது கடினம் எனவும் உக்ரைன் பிரதமர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார்.
மேலும், “85-க்கும் அதிகமான ஏவுகணைகள் எங்கள் நாட்டில் விழுந்துள்ளன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதியடைந்துள்ளனர்” என்றார்.
கடந்த நாள்களில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்யா, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முழு ஆற்றலுடன் போர்புரியத் தொடங்கியிருக்கிறது. இதைச் சமாளிக்க உக்ரைன் ராணுவம் கடுமையாகப் போராடிவருகிறது.
இதுவரை நடைபெற்ற போரில் அமெரிக்க அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, சுமார் 40,000 உக்ரைனிய குடிமக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
நாட்டின் படைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதே அளவிலான எண்ணிக்கையில் ரஷ்யப் படைகளிலும் இழப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் ரஷ்யா, போரைக் கைவிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்தோனேசியாவில் ஜி20 உச்சி மாநாடு நடக்கிற நேரத்தில் ரஷ்யா இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் தொடர்பாக மாநாட்டில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதுபோல், மாநாட்டில் பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், `ரஷ்யாவின் காண்டுமிராண்டித்தனமான போர் நிறுத்தப்பட வேண்டும்’ என்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், `உக்ரைனில் அமைதியைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை நிலைநிறுத்த ராஜாங்கரீதியிலான திட்டம் தேவைப்படுகிறது. இந்தப் போரால் உலக அளவில் எரிபொருள், உணவு பிரச்னைகள் ஏற்பட்டன. அவற்றை விரைவில் சரிசெய்ய வேண்டும்’ என்றார்.
போரிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்து, மாநாடு தொடங்கும்போதே தன் தீவிர தாக்குதலை ரஷ்யா தொடங்கியிருக்கிறது. மேலும் ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று போலந்து நாட்டில் விழுந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் நேட்டோ அமைப்பும் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது. போலந்தும் தற்போது பாதிக்கப்பட்டிருப்பதால். அந்நாட்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.