போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு சகோதரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழிலுள்ள தனியார் வங்கியொன்றில் வர்த்தகரான உயிரிழந்த தமது தந்தையினால் 100 கோடி ரூபாய் பணமும் அதிகளவான நகைகளும் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை சட்டரீதியில் மீளப்பெறவேண்டும் என்றும் கூறி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரை பல தடவைகளில் நோர்வே பிரஜையிடமிருந்து 12 கோடி ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

23 வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணத்தின் ஒருபகுதி இன்னொரு நபரின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் தெரியவந்துள்ளது.

இலங்கையரான நோர்வே பிரஜை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் யாழ். நீதிபதிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் முத்திரைகள் மற்றும் கையொப்பங்கள் அடங்கிய போலி ஆவணங்கள், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

17ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவரையும் 18ஆம் திகதியன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை டிசெம்பர் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version