“அரசாங்கம் இதுவரை தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களைத் தொடங்கவும் இல்லை, பேச்சுக்களுக்கான அழைப்பை விடுக்கவுமில்லை”
“சமஷ்டிப் பேச்சுக்கான கூட்டத்தைக் கூட்ட முன்னர் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சம்பந்தன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.
அதனை அவர் செய்யவில்லை. கூட்டத்துக்கான அழைப்பை முறைப்படி அவரே விடுத்திருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. எல்லாம் சுமந்திரன் மயம் என் று அனுமதித்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது”
அடுத்த சுதந்திர தினத்துக்குள், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை ஒன்று கூட்டிப் பேசுகின்ற முயற்சி தோல்வியைத் தழுவியிருக்கிறது.
இனப்பிரச்சினைக்கு மிக குறுகிய காலத்துக்குள் தீர்வு காணப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்ற போதும், இதுவரை அதற்கான எந்த முயற்சிகளும் தொடங்கப்படவில்லை.
அரசாங்கம் இதுவரை தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களைத் தொடங்கவும் இல்லை, பேச்சுக்களுக்கான அழைப்பை விடுக்கவுமில்லை.
அதற்குள்ளாகவே, ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சை நம்பி, அரசியல் தீர்வு சமஷ்டி முறையின் அடிப்படையிலானதாகவே இருக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.
இரா.சம்பந்தனின் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
ஆனால், அந்தக் கூட்டத்துக்கு மாவை சேனாதிராசாவைத் தவிர, வேறெந்தக் கட்சியின் தலைவரும் செல்லவில்லை.
இதனால் சம்பந்தன், மாவை சேனாதிரா ஜா, சுமந்திரன் ஆகிய மூவரும் மட்டும் ஒன்று கூடிப் பேசி விட்டுப் போயிருக்கின்றனர்.
ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, இன்னொரு நாளில் கூட்டத்தை ஒழுங்கு செய்யுமாறு மாவை சேனாதிராஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் சம்பந்தன்.
சமஷ்டி இலட்சியத்துடன், ஒன்றுபட்டுச் செயற்பட விரும்புகின்ற கட்சிகள் தங்களுடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பதெனவும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள, மூத்த தலைவர் இரா.சம்பந்தன். அண்மையில் அவருக்கு ஜனநாயகத்துக்கான தங்க விருதும் வழங்கப்பட்டது.
உடல் நிலையைக் கருதி பாராளுமன்றத்துக்கு 3 மாத விடுப்பைப் பெற்றிருக்கும் அவர், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னர், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்.
ஆனால் அவரது அந்த முயற்சிக்கு வரவேற்புக் கிடைக்காமல் போனது ஆச்சரியமல்ல. ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் பெரிய இடைவெளியை நம்பிக்கையீனத்தை தோற்றுவித்து விட்டது.
இதற்கு கணிசமான பொறுப்பை ஏற்க வேண்டியவர் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன். தலைமைத்துவத்தில் இருந்த அவர், அனைவரையும் ஒன்றிணைத்துப் பயணிக்கத் தவறியிருந்தார்.
சுமந்திரனை மட்டும் அரவணைத்துக் கொண்டு அரசியல் செய்வதற்கு எடுத்த முடிவு, இன்று அவரை ஒரு பெறுமதியற்ற தலைவராக மாற்றியிருக்கிறது.
இங்கு வேடிக்கை என்னவென்றால், அவர் கூட்டிய கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் பங்காளிகளாக உள்ள செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்கள் கூட செல்லவில்லை என்பது தான்.
தமிழகத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் நிலைக்கு வந்து விட்டார் இரா.சம்பந்தன். பத்தாண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் பலம் வாய்ந்த ஒரு சக்தியாக இருந்தது தே.மு.தி.க. அப்போது, ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்றிருந்தார்.
இப்போது அவரது உடல் நலமும் குன்றி விட்டது. கட்சியும் தேய்ந்து விட்டது. விஜயகாந்தின் சார்பில் அரசியலை முன்னெடுத்த அவரது மனைவி பிரேமலதாவே, இந்த நிலைக்குக் காரணம்.
விஜயகாந்த் மீது மதிப்பு வைத்திருந்தாலும், அவரது மனைவியால் வழிநடத்தப்படும் அரசியலை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை.
அதுபோலத் தான், இரா.சம்பந்தனின் நிலையும் வந்திருக்கிறது. அவர் மீது மதிப்பு வைத்திருந்தாலும், அவர் இப்போது எடுக்கின்ற முடிவுகள் அவருடையது தானா என்ற கேள்வி உள்ளது.
தலைவர்கள் அதிகாரத்தில் உள்ள போது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறும் போது, இக்கட்டான நேரத்தில் அவர்களுடன் கூட யாரும் இருக்காத நிலை ஏற்படுகிறது. இரா.சம்பந்தனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளதென்றால் அதற்கு அவரே காரணம்.
ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்கு அழைக்கிறாரா- தீர்வை வழங்குவார என்பதையெல்லாம் ஒதுக்கி விட்டு, முக்கியமானதொரு தருணத்தில், ஆராய அழைப்பு விடுக்கப்பட்டும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட கூட்டத்தில் பங்கேற்காமல் போனது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம்.
ஏனையவர்களை விட்டு விட்டாலும், சித்தார்த்தனும், செல்வம் அடைக்கலநாதனும், அன்று காலை இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசாவுடன் இணைந்து, ஐ.நா பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
முக்கியமானதொரு விடயம் பேசுகின்ற போது, அதற்கு காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்றில்லை. அர்ப்பணிப்புள்ள அரசியல் தலைவர்களுக்கு நேர காலம் இருக்கவும் கூடாது.
ஆனாலும், அவர்கள் கூட்டத்தை தவிர்த்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், அழைப்பு விடுக்கப்பட்ட முறை. இந்த கூட்டத்தைக் கூட்ட முன்னர் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் இரா.சம்பந்தன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை.
கூட்டத்துக்கான அழைப்பை முறைப்படி அவரே விடுத்திருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை.
எல்லாம் சுமந்திரன் மயம் என்ற நிலையை இரா.சம்பந்தன் அனுமதித்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது.
அண்மையில் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான போது அதனை இரா.சம்பந்தன் நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஆனால், அது சுத்தப் பொய் என்றும், தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதாகவும் வவுனியாவில் நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விநோ நோகராதலிங்கம் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.
முன்னதாக, சுமந்திரனின் முடிவுகளுக்கு கட்டுப்படமாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றியிருந்தார்.
அதுபோல, அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த பல வாக்கெடுப்புகளில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒரே முடிவுக்கு கட்டுப்பட்டு செயற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைமையின் முடிவுகளுக்கு பங்காளிகளும், உறுப்பினர்களும் கட்டுப்பட வேண்டியது முக்கியம்.
ஆனால், சுமந்திரனின் முடிவுகளே சம்பந்தனின் முடிவு என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டதால், அந்த கடிவாளம் கழன்று போய் விட்டது.
சம்பந்தன் முதுமைக்காலத்தில் இழுத்துப் பிடித்து ஒட்டுப் போட முயன்றாலும் ஒரு வலுவான அரசியல் கூட்டை ஏற்படுத்த முடியாமல் உள்ளது என்பதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
பங்காளிக் கட்சிகளுடனான அரசியலே இந்தளவுக்குப் பிசுபிசுத்துப் போயிருக்கும் நிலையில், ஏற்கனவே பங்காளிகளாக இருந்து விலகிச் சென்றவர்கள் சம்பந்தனின் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
மொத்தத்தில் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எதனை விரும்பினவோ அதனை நிறைவேற்றி முடித்திருக்கின்றன தமிழ்த் தேசியக் கட்சிகள். ஒன்றுபட்டு நிற்க முடியாத இந்த நிலைக்கு சம்பந்தனும், சுமந்திரனும் முக்கிய காரணிகள். ஏனையவர்களுக்கு அதில் பொறுப்பில்லை என்று கூற முடியாது.
காலத்துக்கு காலம் விடப்பட்ட தவறுகள் திருத்தப்படாமல் போனதால் தான் இந்த நிலை. தனது கடைசிக் காலத்தில் இரா.சம்பந்தன் இந்த நிலையை மாற்றுவதற்கு முயற்சித்தாலும் அது கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.