முதல் நாள் கனவில் தன் மீது பாம்பு ஏறிச் செல்வதைப் போலவும், இரண்டாம் நாளில் தன்னை நோக்கி படம் எடுப்பதைப் போன்றும், மூன்றாம் நாளில் தன்னுடைய காலைச் சுற்றி இருப்பதை போலவும் கனவு கண்டார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராமையா (55) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவரின் கனவில் பாம்பு தோன்றியிருக்கிறது.
முதல் நாள் கனவில் தன் மீது பாம்பு ஏறிச் செல்வதைப் போலவும், இரண்டாம் நாளில் தன்னை நோக்கி படம் எடுப்பதைப் போன்றும், மூன்றாம் நாளில் தன்னுடைய காலைச் சுற்றி இருப்பதை போலவும் கனவு கண்டார்.
இதனால் அச்சமடைந்த ராமையா, தன்னுடைய மனைவியிடமும், உறவினர்களிடமும் இது குறித்து கூறியிருக்கிறார்.
தன்னுடைய கனவில் பாம்பைக் கண்டது குறித்து உள்ளூர் ஜோதிடர் ஒருவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த ஜோதிடர், “தொடர்ந்து பாம்பு கனவில் வருவது கெட்ட சகுனம். இதற்கு நாகசாந்தி பரிகாரம் செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும்” என்றார்.
இதையடுத்து ராமையாவை பக்கத்து ஊரில் உள்ள பூசாரியிடம் நாக சாந்தி பரிகார பூஜை செய்து வருமாறு கூறி அனுப்பியிருக்கிறார்.
அதன்படி பூசாரியிடம் சென்ற ராமையா, தன்னுடைய கனவில் பாம்பு தொடர்ந்து வருவதால் பரிகார பூஜை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
கடைசியாக மூன்றாவது நாளில் தன்னுடைய காலை பாம்பு சுற்றியதையும், அந்த பாம்பு கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்று சந்தேகிப்பதாகவும் பூசாரியிடம் ராமையா கூறினார்.
இதையடுத்து பூசாரி ஒரு வினோதமான பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அவர் ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட விதவிதமான விஷப்பாம்புகளை வைத்து பூஜை செய்பவர் என்பதால், ராமையாவின் கனவில் வந்த கண்ணாடி விரியன் பாம்பை வைத்து பரிகாரம் செய்வதாகக் கூறி அந்த பாம்பை கையில் எடுத்தார்.
டாக்டர் செந்தில்குமரன்
அந்த பாம்பை தன்னுடைய கையில் வைத்துக் கொள்வதாகவும், தன்னையும், பாம்பையும் சேர்த்து 3 முறை சுற்றி வருமாறும், ஒருமுறை சுற்றியதும் பாம்புக்கு முன் நாக்கை குவித்து ஊதுமாறு பூசாரி கூறியிருக்கிறார்.
அதேபோல முதல் 2 முறையும் சுற்றிய ராமையா, 3-வது முறை சுற்றி வந்து பாம்புக்கு முன் நாக்கை வெளியே நீட்டி ஊதியபோது, நாக்கின் மேல் பொட்டென ஒரே போடாக போட்டது
அந்த பாம்பு. ராமையாவின் நாக்கை பாம்பு தீண்டியதால் செய்வதறியாது திகைத்து நின்றார். உடனடியாக பூசாரி தன் கையில் வைத்திருந்த கத்தியால் ராமையாவின் நாக்கை அறுத்தார்.
கிட்டத்தட்ட நாக்கில் 3ல் 2 பாகம் வெட்டுப்பட்டு தொங்கிய நிலையில் ரத்தம் குபுகுபுவென கொட்டத் தொடங்கியது. இதையடுத்து, ராமையா மயங்கமடைந்தார்.
அவரை ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.
இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் நம்மிடம் பேசியதாவது, “ஜோதிடத்தை நம்பி பரிகாரம் செய்வதாகக் கூறி ராமையாவுக்கு பாம்புக்கடியை பரிசாக அளித்திருக்கிறார்கள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த அவருக்கு உடனடியாக விஷமுறிவு மருந்து அளித்து அறுவை சிகிச்சை செய்தோம்.
அவருக்கு மூக்கு வழியே சுவாசம் அளித்து, தொடர்ந்து 3 நாள்களாக தீவிர சிகிச்சை அளித்ததன் பலனாக அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தற்போது, அவரால் பேச முடிகிறது.
மக்கள், இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் செயல்களை செய்யும் ஜோதிடர்களிடமும், பூசாரிகளிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாம்புகள், பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நானும், லண்டன் ரெடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரியும் இணைந்து சுவிட்சர்லாந்தில் இருந்து வெளிவரும் டாக்சின்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில் இது குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி கூறும்போது, “உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை மரணிக்கின்றனர் என்பது எங்களது ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருக்கிறது.
கண்ணாடி விரியன்
இதனிடையே பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?.. என்னென்ன வகையான விஷப்பாம்புகள் உள்ளன? என்பது குறித்து கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பாம்புகள் குறித்த மூட நம்பிக்கையை சமூகத்தில் இருந்து களைய வேண்டும். இது போன்ற மூட நம்பிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் தற்போது டாக்சின்ஸ் ஆராய்ச்சி இதழில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்திருக்கிறோம்.” என்றார்.