லண்டன்: பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கின் குடும்பம் இந்திய கலாசாரத்தை மறக்காமல் செய்துள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

பிரிட்டன் இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. கொரோனாவுக்கு பின்பு, அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது.

அதில் பிரிட்டன் பொருளாதாரம் இன்னுமே மோசமாக உள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் 6ஆம் இடத்தில் இருந்த பிரிட்டன், இப்போது 7ஆவது இடத்திற்குச் சரிந்து உள்ளது.

பிரிட்டன்
இதன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர்கள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதாரத்தைக் காக்க லிஸ் டிரஸ் எடுத்த முடிவு அவருக்கு எதிராக அமைந்துவிட்டது.

இதனால், பிரிட்டன் பொருளாதாரம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அவர் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்று வெறும் 45 நாட்களில் பதவி விலகும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு அடுத்ததாகப் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவிக்கு வந்தார்.

ரிஷி சுனக்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல்முறையாகும். மேலும், இந்து ஒருவர் பிரிட்டன் பிரதமராவதும் இதுவே முதல்முறை. பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளைய வயது பிரதமராகும் இவர் தான்.

இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட ரிஷி சுனக், அந்நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் ரிஷி சுனக்கும் சரி, அவரது குடும்பத்தினரும் சரி இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டே வருகின்றனர்.

ரிஷி சுனக்
மகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதற்கிடையே இப்போது, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷ்கா சுனக் லண்டனில் இந்திய நடனங்களில் ஒன்றான குச்சிப்புடி ஆடினார்.

நேற்று வெள்ளிக்கிழமை லண்டனில் நடந்த சர்வதேச குச்சிப்புடி நடன விழா 2022இல் அவர் நடனமாடினார் . 9 வயதான அனுஷ்கா சுனக்கின் நடனம் காண்போரைக் கவர்ந்தது.

குச்சிப்படி
இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. 4 முதல் 85 வரையிலான 100 கலைஞர்கள் இதில் கலக்கலாக நடனமாடினார்கள்.

இசைக் கலைஞர்கள், 65 வயதைக் கடந்த வயதான நடனக் கலைஞர்கள் கற்றல் குறைபாடுகள் கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் அனுஷ்கா சுனக்கின் நடனத்தைப் பலரும் பாராட்டினர்.

பிரதமர் வரவில்லை

அனுஷ்கா சுனக் நடனத்தை அவரது தாயார் அக்ஷதா மூர்த்தி நேரில் பார்த்து ரசித்தார். அக்ஷதா மூர்த்தி இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவர்.

மேலும், இந்த நிகழ்வில் ரிஷி சுனக்கின் பெற்றோரும் கலந்து கொண்டார். இருப்பினும், ரிஷி சுனக் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், வேலைப்பளு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

எளிமை
பிரதமராகப் பதவியேற்றது முதலே ரிஷி சுனக் தொடர்ச்சியாகப் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார். பொதுவாகப் பிரிட்டன் பிரதமர்கள் அனைவரும் டவுனிங் தெருவில் உள்ள புகழ்பெற்ற 10ஆம் எண் வீட்டில் தான் தங்குவார்கள்.

ஆனால், அந்த வீட்டில் தங்காமல் ரிஷி சுனக்கும் அவரது குடும்பத்தினரும் அருகே உள்ள சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் இப்போது வசித்து வருகின்றனர். இதையும் கூட ரிஷி சுனக்கின் எளிமை என்று பலரும் பாராட்டினர்

இந்து

ரிஷி சுனக் தான் இந்து என்பதில் எப்போதும் பெருமை கொள்வதாகவே தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த முறை தேர்தலுக்கு முன்பு, பொது இடத்தில் பசு பூஜை செய்தவர் ரிஷி சுனக். மேலும், அங்குள்ள இஸ்கான் இந்து கோயிலுக்கும் செல்வதை எப்போதும் வாடிக்கையாக வைத்துள்ளார் ரிஷி சுனக்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் இஸ்கான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற வீடியோவும் கூட இணையத்தில் வெளியாகி இருந்தது.

விசா நடைமுறை
விசா நடைமுறை இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மறுபுறம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாக இறங்கி உள்ளார்.

தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டம் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தான் என்பதை உணர்ந்த அவர், உலகின் டாப் ஏஐ வல்லுநர்களைப் பிரிட்டனை நோக்கி இழுக்க புதிய விசா முறையை அறிவித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version