“அதிகாரப்பகிர்வு குறித்துப் பேச்சு முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், சாதனையாக அமையும். தோல்வியில் முடிந்தால், அவர் தன்னிடம் பாராளுமன்றப் பலம் இல்லை என்று, தப்பித்துக் கொள்ளவும் முடியும்”

“தற்போதைய தருணத்தில், தமிழ்க் கட்சிகளுடன் மாத்திரமன்றி அனைத்துக் கட்சிகளுடனும் பேசி, ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலம், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தலாம் என் று எதிர்பார்க்கிறார் ரணில்”

“துருக்கியை ஐரோப்பாவின் நோயாளி என்று குறிப்பிடுவது போல, தெற்காசியாவின் நோயாளியாக இலங்கையை குறிப்பிடுகின்ற நிலையை மாற்றுவதற்கு சர்வதேச ஆதரவு அவசியம்”

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அதிகாரப்பகிர்வு குறித்துப் பேச்சு நடத்துவதற்கு எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதிக்குள் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு,செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஏற்கனவே, ஜனாதிபதி, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று முதலில் கூறியிருந்தார். பின்னர் அவர், அடுத்த சுதந்திர தினத்துக்குள் அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளுடன் அவர் எந்தப் பேச்சுக்களையும் நடத்தவுமில்லை,அதற்கான அழைப்பையும் விடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி எவ்வாறு அடுத்த சுதந்திர தினத்துக்குள் அரசியல் தீர்வை வழங்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தமிழ்க் கட்சிகள் ஒன்றாக வந்தால் பேச்சு நடத்த தயார் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், வரவு,செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் அவர், டிசம்பர் 12ஆம் திகதிக்குள் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசுவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும் சந்திப்பை நடத்துவதாக அறிவித்திருப்பதுடன், எதிர்க்கட்சிகளின் இணக்கப்பாட்டையும் பெற்றிருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர போன்றவர்கள் அதேசபையில் அதிகாரப் பகிர்வை அனுமதிக்க முடியாது என்றும், அது ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், சமஷ்டி அரசியலமைப்புகளுக்கு மாத்திரமே அதிகாரப்பகிர்வு பொருத்தமானது என்றும் கூறியுள்ளனர்.

அதிகாரப்பகிர்வுக்கு இணங்குகிறீர்களா என்று சபையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை பார்த்து லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பிய போது, சிரித்துக் கொண்டே பதிலளிக்காமல் நழுவியிருந்தார் .

சரத்வீரசேகர போல அதிகாரப் பகிர்வுக்கு வெளிப்படையான எதிர்ப்பை வழங்குபவர்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அவ்வாறானவர்கள்.

தினேஷ் குணவர்த்தனவைப் போல, நழுவிக் கொள்பவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்.

அதேவேளை, அதிகாரப் பகிர்வுக்கு இணங்குகிறீர்களா என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பார்த்து கேள்வி எழுப்பிய போது முதலில் அவரும் தலையாட்டி விட்டு நழுவப் பார்த்திருந்தார். தலையாட்டினால் போதாது, உறுதியாக கூறுங்கள் என்று கேட்ட பின்னர் தான் இணக்குவதாக கூறியிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுக்களுக்கு அழைக்கும் போதே பல்வேறு விதமான குரல்கள், சமிக்ஞைகளும் வெளிப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான, கலப்பு எதிர்வினைகளைத் தாண்டி அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுக்களை முன்னெடுப்பது தொடக்கம், அத்தகையதொரு முடிவை எடுத்து அதனை நடைமுறைப்படுத்துவது வரை சவால்களும், நெருக்கடிகளும் நிறைந்த ஒரு முயற்சியாகவே இருக்கும்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதிகள் கூட, அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் வெற்றி பெறவில்லை அல்லது அவ்வாறான முயற்சிகளில் இறங்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் ஒற்றை உறுப்பினர் மட்டும் தான் உள்ளார். அவர் இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், சாதனையாக அமையும்.

தோல்வியில் முடிந்தாலும் அவர் தன்னிடம் பாராளுமன்றப் பலம் இல்லை என்று, தப்பித்துக் கொள்ள முடியும். அவருக்கு இப்போது நெருக்கடிகள் அதிகம். பொருளாதார நெருக்கடிகள் உள்ளன. சர்வதேச அழுத்தங்கள் இருக்கின்றன. உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் உள்ளன.

இப்படிப் பலவிதமான சிக்கல்களையும் அவர் தாண்ட வேண்டிய நிலையில் இருக்கிறார். இத்தகைய தருணத்தில், தமிழ்க் கட்சிகளுடன் மாத்திரமன்றி அனைத்துக் கட்சிகளுடனும் பேசி, ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலம், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தலாம் என்று எதிர்பார்க்கிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முக்கியமானது முதன்மையானது என்பதை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதனை அவர் முன்னரும் பலமுறை கூறியிருக்கிறார்.

நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராகவும், பல முறை பிரதமராகவும், இப்போது ஜனாதிபதியாகவும் இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடு ஏன் இந்தப் பின்னடைவு நிலையில் இருக்கிறது என்பது நன்றாகவே தெரியும்.

அண்மையில் அவர் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, வியட்நாம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

“1991இல் தான் கைத்தொழில் அமைச்சராக இருந்த போது, வியட்நாமின் கைத்தொழில் அமைச்சர் இலங்கை வந்து இங்குள்ள திறந்த பொருளாதார முறைமை மற்றும் கைத்தொழில் மூலோபாயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன் பின்னர், 1995இல் இலங்கையிடம் 2.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இருந்த போது, வியட்நாமிடம், 1.3 பில்லியன் டொலர்களே இருந்தது.

ஆனால் 2001இல் இலங்கையிடம் 3.1 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இருந்த நிலையில், வியட்நாமிடம், 109.4 பில்லியன் டொலர்கள் இருந்தது.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

வியட்நாமின் அந்த வளர்ச்சிக்கு பொருளாதார மறுசீரமைப்புகள் மாத்திரம் காரணம் என்றால், இலங்கையினால் ஏன் அந்த வளர்ச்சியைப் பெற முடியாமல் போனது,?

அதற்கு ஒரே காரணம் இலங்கை தனது வளங்களையும், பொருளாதார பலத்தையும் போருக்காக வீணடித்தது தான்.

தமிழர்களுக்கு எதிராக தொடரப்பட்ட போரும், தீர்க்கப்படாமல் நீடித்திருக்கும் இனப்பிரச்சினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பாதித்து வருகிறது.

இனப்பிரச்சினையும், போரும் இல்லாமல் இருந்திருந்தால், நாடு பெரு வளர்ச்சியைக் கண்டிருக்கும் என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியாத விடயமல்ல.

அவர் இப்போது பொருளாதாரத்தை நிமிர்த்த முனைகிறார். அதற்கு அவருக்கு உலக நாடுகளின் ஆதரவும், புலம்பெயர் சமூகங்களின் ஒத்துழைப்பும் தேவை.

இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு ஒன்றை எட்டினால் அந்த ஆதரவு அவருக்கும் அரசாங்கத்துக்கும் கிடைக்கும். அதைவிட சீனா விவகாரத்தினால் இந்தியாவிடம் இருந்து சற்று விலகி நிற்கும் கட்டத்தில் இலங்கை உள்ளது.

இந்த இடைவெளியை நிரப்புவதற்கும், அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுக்கள் உதவும். அண்மையில் இந்தியா அதிகாரப் பகிர்வை தீவிரமாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

13ஆவது திருத்தத்தை இந்தியா தீர்வாக முன்வைத்தாலும் அதற்கு அப்பாற்பட்ட ஒரு அதிகாரப்பகிர்வுக்கும் இந்தியா சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர் தரப்பு 13ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தை கோரினாலும், அதனை நிரந்தர அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

அவர்கள் சமஷ்டி முறையிலான- மீளப் பெற முடியாத அதிகாரங்களைக் கொண்ட ஒரு அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையை எதிர்பார்க்கின்றனர்.

அதனையே இப்போது தமிழர் தரப்பு ஒன்றாக வலியுறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற தரப்புகளும் கூட, தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வலியுறுத்துகின்றன.

துருக்கியை ஐரோப்பாவின் நோயாளி என்று குறிப்பிடுவது போல, தெற்காசியாவின் நோயாளியாக இலங்கையை குறிப்பிடுகின்ற நிலையை மாற்றுவதற்கு சர்வதேச ஆதரவு அவசியம்.

அதற்கான சூழலை அரசியல் தீர்வு மூலமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். இதனை ரணில் விக்கிரமசிங்க புரிந்து கொண்டிருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துகின்ற பலம் அவரது கையில் இல்லை.

அதற்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணங்க வேண்டும். இதுவரை காலமும் இலங்கை இனவாதச் செயற்பாடுகளால் தான் பின்னடைவுகளைக் கண்டது. மோசமான சீரழிவுக்குள் சிக்கியது.

அந்த நிலையை ஒரேயடியாக மாற்றுகின்ற வாய்ப்பு ஒன்றைப் பயன்படுத்திக் கொள்வதும், நழுவ விடுவதும் சிங்கள அரசியல் தலைமைகளின் கைகளிலேயே உள்ளது.

-கபில்-

 

Share.
Leave A Reply

Exit mobile version