இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற டொலர் நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல மூலங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. முக்கியமாக, டொலர் உள்வருகையை அதிகரித்துக்கொள்வது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், டொலர்களை உள்ளீர்த்துக்கொள்வதற்கான மூலங்களில் மிகப் பிரதானமாக இருப்பது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி 2023ஆம் ஆண்டுக்காக முன்வைத்த வரவு – செலவுத் திட்டத்தில் கூட ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதை திசைதிருப்பும் முகமாக கொண்ட ஒரு கட்டமைப்பை முன்மொழிந்திருந்தார்.
இலங்கையை பொறுத்தவரையில் வருடாந்தம் ஏற்றுமதி வருமானத்தில் இருந்து 12 பில்லியன் டொலர்கள் பெறப்படுகின்றன. ஆனால், அதுவே இறக்குமதி செலவாக 21 பில்லியன் டொலர் அல்லது 22 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் 8 முதல் 10 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி – இறக்குமதி இடைவெளி மறை பெறுமானத்தில் காணப்படுகிறது. அதனை நிவர்த்தி செய்துகொள்வது மிகக் கடினமாக இருக்கின்றது.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி என்பவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மிகப்பெரிய ஒரு நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருக்கின்றது.
அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவது என்ன?
தற்போது இலங்கை செய்யும் ஏற்றுமதியின் கட்டமைப்பு மற்றும் எந்தெந்த நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதிகள் செய்யப்படுகின்றன என்பது தொடர்பாக ஆராய வேண்டியிருக்கிறது.
இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய துறையாக ஆடைத்துறையே காணப்படுகிறது. வருடமொன்றுக்கு ஆடைத்துறையினால் கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர்கள் பெறப்படுகின்றன.
2020ஆம் ஆண்டு புடவை ஏற்றுமதியினால் இலங்கை 5.42 பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்றுக்கொண்டது. அந்த வகையில் ஆடை துறையானது மிக முக்கியமானதொரு ஏற்றுமதித் துறையாக நீடிக்கிறது.
இலங்கை ஆடைத்துறையில் 10 இலட்சம் பேர் தொழில் புரிகின்றனர். அந்த பத்து இலட்சம் பேரையும் 10 இலட்சம் குடும்பங்களாகவே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது.
அப்படி பார்க்கும்போது கிட்டத்தட்ட 50 இலட்சம் பேர் இந்த புடவை கைத்தொழில் துறையில் தங்கிவாழ்கின்றனர்.
அதுமட்டுமன்றி, இலங்கை வருடாந்தம் பெற்றுக்கொள்ளுகிற 12 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தில் ஆடைத் துறையானது 44 வீத பங்களிப்பை செய்கின்றது. 2025ஆம் ஆண்டில் 8 பில்லியன் டொலர்களை ஆடைத்துறையில் வருமானமாக பெற்றுக்கொள்வதே இலங்கையின் இலக்காக காணப்படுகின்றது.
இரண்டாவதாக இலங்கையின் ஏற்றுமதியில் மிக முக்கியமானதாக இலங்கை தேயிலை காணப்படுகிறது. இலங்கை தேயிலையானது உலகளவில் மிகப் பிரபலம் வாய்ந்த ஒரு பொருளாக காணப்படுகிறது.
இலங்கையை பொறுத்தவரையில் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
உலகத்திலேயே மூன்றாவது மிகப் பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக இலங்கை இருக்கின்றது.
கடந்த 2021ஆம் ஆண்டில் 1.32 பில்லியன் டொலர்களை தேயிலை ஏற்றுமதி ஊடாக இலங்கை பெற்றுக்கொண்டது. இதனை 2 பில்லியன் அல்லது 3 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும்.
அண்மைக் காலத்தில் இரசாயன உர பிரச்சினை காரணமாக தேயிலை உற்பத்தி குறைவடைந்தது.
அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தேயிலைத்துறை ஊடாக மிகப்பெரிய வருமானத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
அடுத்ததாக, மிக முக்கியமான ஏற்றுமதியாக ரப்பர் மற்றும் ரப்பர் சார்ந்த உற்பத்திப் பொருள் காணப்படுகிறது. இதனூடாக வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் 900 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொண்டது.
இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் ரப்பர் செய்கை முன்னெடுக்கப்படுகின்றது.
2024ஆம் ஆண்டளவில் இந்த ரப்பர் மூலமான வருமானத்தை 4 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே இலங்கையின் நோக்கமாக காணப்படுகிறது.
எனவே, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். அடுத்து மிக முக்கியமான துறையாக தெங்கு ஏற்றுமதியும் இலங்கையில் ஓர் ஏற்றுமதி வருமான மூலமாக காணப்படுகிறது.
தெங்கு உற்பத்திப் பொருள் ஏற்றுமதி ஊடாக 2021ஆம் ஆண்டில் 831 மில்லியன் டொலர்கள் வருமானமாக பெறப்பட்டன.
இதனை ஒரு பில்லியனை தாண்டி அதிகரிக்கவேண்டும். அது மட்டுமன்றி, விவசாய பொருட்கள், உணவுப் பொருள்கள், மாணிக்கக்கல் ஏற்றுமதிகளும் காணப்படுகின்றன. அவற்றை மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி, இலங்கையை பொறுத்தவரையில் ஏற்றுமதியில் உலகளாவிய பெறுமதிச் சங்கிலி என்றொரு திட்டத்துக்கு செல்ல வேண்டும்.
இலங்கையானது மிகப்பெரிய உற்பத்தித் துறைகளில் அதன் உதிரிப் பாகங்களை இலங்கையில் உற்பத்தி செய்யும் ஒரு கட்டத்துக்கு செல்வது முக்கியமாகும். அதனூடாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
கடந்த 30 வருடகாலத்தில் கிழக்காசிய நாடுகளில் இந்த உலகளாவிய பெறுமதிச் சங்கிலி உற்பத்தி ஊடாகவே மிகப்பெரிய ஏற்றுமதி வருமானம் பெறும் நாடுகளாக உருவெடுத்தன. எனவே, அது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
1995ஆம் ஆண்டு இலங்கை ஏற்றுமதி வருமானமாக 3.5 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டது. கிழக்காசிய நாடான வியட்நாமும் ஏற்றுமதி வருமானமாக 1995ஆம் ஆண்டு 3.5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டது.
2023ஆம் ஆண்டில் இலங்கை 12 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெறுகின்றது. அதேநேரம் வியட்நாம் 300 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்து பயணிப்பது முக்கியமாகும்.
எந்த நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது?
உலகில் எந்த நாடுகளுக்கு அதிகமாக இலங்கை ஏற்றுமதி செய்கிறது என்பதும் இங்கு முக்கியமாகும். அதிலும், இலங்கையானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.
இலங்கை வருடாந்தம் பெறுகின்ற 12 பில்லியன் ஏற்றுமதி வருமானத்தில் அமெரிக்காவுக்கு மட்டும் 3 பில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 3 பில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
பிரித்தானியாவுக்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர்கள் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
ஆனால், இறக்குமதியை பொறுத்தவரையில் சீனாவிடம் 4.8 பில்லியன் டொலர்களுக்கும், இந்தியாவிடம் 4.6 பில்லியன் டொலர்களுக்கும் இறக்குமதி செய்யப்படுகின்றது.
ஆனால், அதிகளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கே இலங்கை ஏற்றுமதி செய்கின்றது.
அப்படி பார்க்கும்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் தங்கியிருக்கின்றது.
அதில் மிக முக்கியமாக இலங்கை தேயிலை மற்றும் புடவை கைத்தொழில் உற்பத்திகள், ரப்பர் உற்பத்திகள் அடங்கியிருக்கின்றன.
அதேவேளை இலங்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இல்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கின்றது.
இந்தியா, பாகிஸ்தானுடன் இலங்கைக்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காணப்படுகிறது. தற்போது சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படுவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
நீண்டகால தீர்வு என்ன?
தற்போது இலங்கை ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கு நீண்டகால திட்டங்களை வகுத்து செயற்படுவது அவசியமாகும்.
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டில் இலங்கையானது அடுத்த 10 வருட காலப்பகுதியில் ஏற்றுமதி வருமானத்தை 15 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
அதற்காக பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய முயற்சிப்பது அவசியமாகும்.
அதனூடாக இறக்குமதித் தீர்வையின்றி இலங்கை பொருட்களை ஏற்றுமதி செய்துகொள்ள முடியும். இந்தியாவுடனான ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பரந்துபட்ட ரீதியில் அந்த வர்த்தகம் இடம்பெற வேண்டும். உதாரணமாக இந்தியாவுடன் இணைந்து உலகளாவிய பெறுமதிச் சங்கிலி உற்பத்திக்குள் இலங்கை பிரவேசிக்கலாம்.
ஒரு பொருளை இந்தியா உற்பத்தி செய்கிறது என்றால் அதன் உதிரிப்பாகங்கள் சிலவற்றை இலங்கை உற்பத்தி செய்து வழங்க முடியும். இதன் ஊடாக இலங்கை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க முடியும்.
அதன்படி தற்போதைய நெருக்கடியில் மிக தீர்க்கமானதாக இலங்கையின் ஏற்றுமதி வருமானக் குறைவே காணப்படுகிறது.
அதனால் ஏற்றுமதி வருமானத்தின் மூலக்கூறுகள் பரிசீலனை செய்யப்பட்டு, அவற்றுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும்.
பட்ஜட்டில் கூறப்பட்டுள்ளதை போன்று இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கிட்டத்தட்ட 15 பில்லியன் டொலர்களை நெருங்கவேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும்.
எனவே, ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக, தேயிலைத்துறை ஊடாக கிடைக்கும் வருமானம் 2 பில்லியன் டொலர்களை தாண்டுவது அவசியமாக உள்ளது.
ஆடைத்துறையில் 5 பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. அதனை 8 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கான திட்டங்கள் அவசியமாகும்.
இங்கு ஊக்குவிப்புக்களும் வலுப்படுத்தல் நகர்வுகளும் இன்றியமையாததாகின்றன. ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை மேற்கொள்பவர்களுக்கு வரி சலுகைகளை வழங்குவதுடன் மூலதன உதவிகளை செய்யலாம்.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் ஊடாக மட்டுமே அதனை அதிகரிக்க முடியும்.
அதனால் அது தொடர்பில் நீண்டகால திட்டங்கள் அவசியமாகின்றன. எப்படியும் தற்போதைய நிலையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்றவற்றிடமே தங்கியிருக்கின்றன.
(ரொபட் அன்டனி)