தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 2021 தேர்தலில் வென்று முதல் முறையாகப் போட்டியிட்டு வென்றார்.

இத்துடன் தமிழ்நாடு அமைச்சரவையின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது .

இத்துறை இதுவரை அமைச்சர் சி. வீ. மெய்யநாதனிடம் இருந்தது. அவரிடம் இப்போது காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மட்டுமே உள்ளது.

”எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்,” என்று பதவியேற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின் 2021இல் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றபின் செய்யப்படும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இது. தமிழ்நாடு அமைச்சர்களின் சிலரின் துறைகளும் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version