”கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும் தமிழர் தரப்பினால் முழு நம்பிக்கையோடு பேச்சுக்குச் செல்ல முடியாது. ஆனாலும், பேச்சுக்களைத் தவிர்க்க முடியாது என்பதால், அவர்கள் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்”

”காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்புகளை நிறுத்தி, கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவித்தல் ஆகிய மூன்றுமே பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக கடப்பாரேயானால், அடுத்த கட்டப் பேச்சுக்கள், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வை நோக்கி நகரும்”

பெப்ரவரி 4ஆம் திகதி நடக்கவுள்ள 75ஆவது சுதந்திர தின விழா, நாட்டுக்கு மாத்திரமன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முக்கியமானது.

ஏனென்றால் அவர் முதல்முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றப் போகிறார். கிட்டத்த அரை நூற்றாண்டு காலம் அரசியலில் ஈடுபட்டு விட்ட அவருக்கு கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு இது.

இந்த நிகழ்வில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான- இன நல்லிணக்கம் தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக கூறப்படுகிறது.

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தீர்வை வழங்குவதாக அவர் ஏற்கனவே காலக்கெடு முன்வைத்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுக்கு வலை விரிக்கிறார், அவரது பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவதானமாக இருங்கள் என்று தமிழ்த் தேசியக் அரசியல் பரப்பில் உள்ள பலரும் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் கிட்டத்தட்ட 50 நாட்கள் காலக்கெடுவுடன் பேச்சுக் களத்தில் இறங்கியிருக்கிறார்.

முக்கால் நூற்றாண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைக்கு இன்னும் 50 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படுவது என்பது நடக்கக் கூடிய காரியமா என்ற கேள்வி வருவது இயல்பு.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியையும், ஏனைய சர்வதேச உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்கும், தமிழர் தரப்புடன் ஒரு இணக்கப்பாடு முக்கியம்.

சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கும் அது அவசியம். பெப்ரவரியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் அதையடுத்து நடத்தப்படும் தேர்தல்களிலும் வெற்றி பெறுவதும் முக்கியம். அரசியல் எதிரிகளை முடக்கிப் போடுகின்ற அவசியமும் அவருக்கு இருக்கிறது.

இவ்வாறாக பல்வேறு காரணங்களுக்காக, இனப்பிரச்சினைக்கான பேச்சுக்களை முன்னெடுப்பது அல்லது தீர்வு ஒன்றை எட்டுவது ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.

பேச்சுக்களை முன்னெடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழர் தரப்பு தீர்வு பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடனேயே சென்றிருக்கிறது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தமுறை தீர்வுக்கான நம்பிக்கைகள் குறைவாகவே இருக்கிறது. காரணம் ரணில் விக்கிரமசிங்க ஒன்றும் பலமான தலைவரோ, பாராளுமன்றத்தில் பலம்கொண்டவரோ அல்ல.

அவர் தங்கியிருக்கின்ற பொது ஜன பெரமுன ஒன்றும் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண வேண்டும் என்ற அர்ப்பணிப்புக் கொண்டதும் அல்ல.  தமிழர்களை கருவறுப்பதில் அதன் தலைவர்கள் காட்டிய ஈடுபாடு என்றும் மறக்கத்தக்கது அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவும் கூட கடந்த காலங்களில்  தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதில் குறியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடன் பேசிக் கொண்டே, அவர்களை சர்வதேச வலைப்பின்னலுக்குள் சிக்க வைத்தவர்.

இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும் தமிழர் தரப்பினால் முழு நம்பிக்கையோடு பேச்சுக்குச் செல்ல முடியாது.  ஆனாலும், பேச்சுக்களைத் தவிர்க்க முடியாது என்பதால், இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

முதல்கட்டப் பேச்சுக்களில் தமிழர் தரப்பு முன்வைத்த முக்கியமான மூன்று பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது பேச்சுக்களை வலுப்படுத்துவதற்கான- நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்புகளை நிறுத்தி, கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவித்தல் ஆகிய மூன்றுமே அந்த பிரச்சினைகள்.

இதனை ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக கடப்பாரேயானால், அடுத்த கட்டப் பேச்சுக்கள், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வை நோக்கி நகரும். அரசியல் தீர்வு எது, அதிகாரப் பகிர்வு எது என்பதில் குழப்பங்கள் நிறைய உள்ளன.

புதிதாக தீர்வை தேட வேண்டாம் என்பதில், தமிழர் தரப்பும், ரணில் தரப்பும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.

ஏனென்றால் கடந்தகால பேச்சு முயற்சிகளில் எட்டப்பட்ட இணக்கம் அல்லது முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஆவணங்களின் வடிவில் உள்ளன. அவற்றில் சிறந்தவற்றை எடுத்து புதிய அரசியலமைப்பை உருவாக்கலாம் என்பது பொதுப்படையான யோசனையாக உள்ளது.

அதற்கு முன்னதாக, 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கமும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும் அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் முக்கிய இடத்தை வகிக்கும்.

இல்லாத ஒன்றுக்காக பேசுவதற்கு முன்னர், இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தமிழர் தரப்பு மாத்திரமன்றி மலையகத் தமிழர் தரப்பும் உறுதியாக இருக்கின்றன.

13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கத்தை எதிர்பார்க்கும் போது வடக்கு, கிழக்கு இணைப்பை தமிழர் தரப்பு வலியுறுத்தினாலும், முஸ்லிம்கள் தரப்பு அதற்கு சிவப்புக் கொடி காண்பித்திருக்கிறது.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் தங்களின் அரசியல் நலன்கள் பாதிக்கப்படும் என்பது அவர்களின் நிலைப்பாடு. அதனால் அவர்கள் அதனை எதிர்க்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில், வடக்கு, கிழக்கு இணைப்பை விரும்பாத சிங்களத் தரப்புகள், முஸ்லிம்களை தூண்டி விட்டே தங்களின் காரியத்தை சாதிக்க முனையக் கூடும்.

நிலையான அரசியல் தீர்வு என்று வரும் போது, மீளப்பெற முடியாத அதிகாரங்களுடன் கூடிய சமஷ்டி முறையிலான தீர்வை வலியுறுத்துகிறது தமிழர் தரப்பு. ஆனால், சிங்கள அரசியல் தரப்புகள் அதற்கு ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அதனை கடுமையான எதிர்க்கின்றனர்.

சர்வகட்சி கூட்டத்துக்கு சில நாட்கள் முன்னதாக நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றிய சஜித் பிரேமதாச ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

பேச்சுவார்த்தை, தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியதும், சிங்கள அரசியல் தலைவர்கள் எப்போதும் ஒற்றையாட்சியை வலியுறுத்துவது வழமை.

தமிழர் தரப்பு சமஷ்டியை வலியுறுத்திய போது, அதனை கலாநிதி ஜெகான் பெரேரா போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

சஜித் பிரேமதாச ஒற்றையாட்சியை முன்வைத்திருக்கின்ற நிலையில், அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சஜித் மட்டுமல்ல, ராஜபக் ஷவினரும் கூட ஒற்றையாட்சியைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

‘13 பிளஸ்’ என்பது ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்று அடித்துக் கூறியிருக்கிறார் பஷில் ராஜபக்ஷ. அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் முடிவுகளுக்கு தாங்கள் பொறுப்பில்லை என்றும், பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருக்கிறார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக மஹிந்த தரப்பு ஒருபோதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதில்லை.

காலத்தைக் கடத்தி பிரதான விடயங்களில் இருந்து நழுவி வந்திருக்கிறது. எந்தவொரு கட்டத்திலும் தமிழர் பிரச்சினைக்கு இது தான் தீர்வு என்று ராஜபக்ஷவினர் எவரும் கூறியதும் இல்லை.

அதுபோலவே, ராஜபக்ஷவினரின் முன்னாள் கூட்டாளிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களும், ஒற்றையாட்சிக்கு வெளியே தீர்வு ஒன்றை வழங்குவதற்கு இணங்கப் போவதும் இல்லை.

அவர்கள் இந்த சர்வகட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கின்ற அதேவேளை, அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தனை நியமிப்பதற்கு தடையாக உள்ளனர்.

சமஷ்டி தீர்வை அடைவதற்காக அரசியலமைப்பு பேரவையை அவர் பயன்படுத்தி விடக் கூடும் என்று உதய கம்மன்பில கூறியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு சிங்கள, முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தமிழர் கூட உள்வாங்கப்படாத நிலையில், சித்தார்த்தன் அரசியலமைப்பு பேரவைக்குள் வருவதை தடுக்கின்ற விமல்- கம்மன்பில அணி, இதனை இனவாதம் இல்லை என்றும் கூறுகிறது.

அடுத்து, அரசியல் கைதிகள் விவகாரம் குறித்துப் பேசப்பட்ட தருணத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதை போன்று இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் என்று சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகள் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்கள். ஆனால் குற்றச்சாட்டுக்குள்ளாகிய இராணுவத்தினர் இன்னமும் பொறுப்புக்கூறவில்லை. குற்றங்களை ஒப்புக் கொள்ளவில்லை.

அதற்குள்ளாக அவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிக்கிறார்.

தமிழர்களுக்கு நியாயமான தீர்வை வழங்காமல், அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், தங்களின் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு, சிங்களத் தலைமைகள் இப்போதே முயற்சிக்கத் தொடங்கி விட்டன.

இவ்வாறான நிலையில், இன்னும் 50 நாட்களுக்குள் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு அரசியல் தீர்வை எட்டப் போகிறார்? பொறுத்திருந்து பார்க்கலாம், நீண்டகாலம் இல்லையே.

Share.
Leave A Reply

Exit mobile version