கால்பந்து உலகக் கிண்ண வெற்றி அணிவகுப்பில் 40 லட்சம் ரசிகர்கள் திரண்டதால் திட்டங்கள் மாற்றப்பட்டு ஆர்ஜென்டீனா வீரர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4 – 2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3 – 3 என சமநிலையில் இருந்தன.

1978, 1986 க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3 வது உலகக் கிண்ணம் இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கிண்ணத்தை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962 க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கிண்ணத்தை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது.

இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கிண்ண போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2 வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

உலகக் கிண்ண வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டீனா நாட்டில் நேற்று பொது விடுமுறை அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் பியூனஸ் ஏர்ஸின் விமான நிலையத்துக்கு வீரர்கள் வந்தார்கள். அதிகாலை 3 மணி என்கிறபோதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீரர்களைப் பாராட்டும் பதாகைகள், கொடிகளுடன் விமான நிலையத்தின் அருகே காத்திருந்து வரவேற்றார்கள்.

செவ்வாய் அன்று பியூன்ஸ் ஏர்ஸ் நகரம் முழுக்கக் கால்பந்து ரசிகர்களால் நிரம்பியிருந்தது. பிரதான சாலைகள் அணிவகுப்புக்காக மூடப்பட்டிருந்தன. மெஸ்ஸி, மரடோனாவின் பதாகைகளுடன் எங்குப் பார்த்தாலும் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்தார்கள் ரசிகர்கள். பல இடங்களில் வாத்தியக் கருவிகளுடன் ஆடல், பாடல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் பொருளாதாரம் தற்போது ஆரோக்கியமாக இல்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மக்களின் துயரங்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது உலகக் கோப்பை வெற்றி.

36 வருடங்கள் கழித்து உலகக் கிண்ணத்தை வென்றுள்ளதால் இந்தத் தருணத்தைத் தவற விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள் ஆர்ஜென்டீனா கால்பந்து ரசிகர்கள். பொது விடுமுறை என்பதால் வீட்டுக்குள் இருந்து பொழுதைக் கழிக்காமல் வீரர்களை உற்சாகப்படுத்த தெருக்களில் திரண்டார்கள்.

முதலில் மேல்பகுதியில் திறந்த பேருந்தில் வீரர்கள் அழைத்து வரப்பட்டார்கள். சாலைகளில் நின்றுகொண்டு தங்களுக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்த ரசிகர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தார்கள் வீரர்கள்.

உலகக் கிண்ணத்தை ரசிகர்களிடம் காண்பித்துப் பெருமிதம் அடைந்தார்கள். பேருந்தில் ஊர்ந்து சென்று நினைவுச் சின்னத்தின் அருகே திரண்டிருக்கும் ரசிகர்களுடன் இணைந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுவது தான் முதல் திட்டமாக இருந்தது.

ஆனால் ரசிகர்களின் எல்லை மீறிய அன்பினால் சிக்கல் ஏற்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பேருந்தைச் சுற்றியும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பேருந்தை முன்னே நகர்த்திச் செல்ல முடியவில்லை.

பாலத்தின் கீழே பேருந்து சென்றபோது, பாலத்தின் மேலே நின்றிருந்த ரசிகர்கள், பேருந்தின் மீது குதிக்கவும் முயன்றார்கள்.

40 லட்சம் ரசிகர்களும் ஒரே சமயத்தில் மெஸ்ஸி மற்றும் இதர வீரர்கள் மீது அன்பைப் பொழிந்ததால் ஒரு கட்டத்தில் காவல்துறையால் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போனது.

அசம்பாவிதத்தைத் தடுக்கும் பொருட்டு மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து மெஸ்ஸி உள்பட அனைத்து வீரர்களும் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பிறகு வான் வழியாக ரசிகர்களின் அன்பையும் ஆரவாரத்தையும் ஏற்றுக்கொண்டார்கள் வீரர்கள்.

பியூனஸ் ஏர்ஸில் வீரர்களை வரவேற்பதற்காக ஆர்ஜென்டீனா ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்ட காணொளிகள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version