இரும்பு மற்றும் புடவை ஏற்றப்பட்டிருந்த இரு லொறிகளில் ஒளிந்திருந்த நிலையில், இலங்கையர்கள் உட்பட 27 பேரை ருமேனிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் ருமேனியாவிலிருந்து சட்டவிரோதமாக ஹங்கேரிக்குள் நுழைய முயன்றனர் என ருமேனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹங்கேரியின் எல்லைக்கு அருகிலுள்ள, ருமேனிய எல்லைச் சோதனைச் சாவடியை கடந்து செல்ல முயன்ற லொறியொன்றை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டபோது, 17 பேர் ஒளிந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
புடவைகள் ஏற்றப்பட்டிருந்த லொறிக்குள் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பகுதியொன்றுக்குள் இவர்கள் ஒளிந்திருந்தனர் எனவும் இவர்கள் பங்களாதேஷ் மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரும்புக் கம்பிகள் ஏற்றப்பட்டிருந்த லொறியொன்றை சோதனையிட்டபோது, அதற்குள் இலங்கை பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 11 பேர் ஒளிந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 21 முதல் 42 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு லொறிகளும் ருமேனியர்களால் செலுத்தப்பட்ட நிலையில் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திவருவதாக ருமேனிய எல்லைப் பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.