கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார்.
கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார்.
1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும்.
கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 1970 என மூன்று முறை பிரேசில் அணி உலகக் கோப்பையை வென்றபோதும் அவர் அணியில் இருந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்று 2000-ஆவது ஆண்டில் பெலேயை ஃபிஃபா தேர்வு செய்தது.
2020-ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய ஒரு வாக்கெடுப்பில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, மாரடோனா ஆகியோரைவிட உலகின் மிகச் சிறந்த வீரர் என்று பெலே தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சில காலமாக சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
2021-ஆம் ஆண்டு அவருக்கு மலக்குடலில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. எனினும் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த நவம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“உத்வேகத்தாலும் அன்பாலும் நினைவுகூரப்படும் பெலே, இன்று அமைதியாக மரணமடைந்தார். அன்பும் அன்பு, அன்பு, அன்பு, என்றென்றும்.” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
“எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர் என்பதைவிட பெலே சிறப்பானவர்” என்று பிரேசில் கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
“எங்கள் கால்பந்து மன்னர் வெற்றி பெற்ற பிரேசிலின் மிகச்சிறந்த தலைவராக இருந்தார். கடினமான தருணங்களிலும் அவர் அஞ்சவில்லை. தன் தந்தைக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தார். அதை மூன்று முறை பரிசளித்தார்.”
“எங்கள் மன்னர் எங்களுக்கு ஒரு புதிய பிரேசிலைக் கொடுத்தார், அவருடைய பாரம்பரியத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நன்றி, பெலே.”
பெலேவின் இறுதிச் சடங்கு விவரங்களை அவரது முன்னாள் கிளப்பான சான்டோஸ் வெளியிட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து கிளப்பின் மைதானத்துக்கு கொண்டு செல்லப்படும், அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைதானத்தின் மையத்தில் வைக்கப்படும்.
செவ்வாயன்று, சாவ் பாலோவில் உள்ள சாண்டோஸ் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்படும்.