உலகையே அதிரச் செய்த போதைப்பொருள் சாம்ராஜ்ய தலைவன் எல் சாப்போவின் மகனை மெக்சிகோ ராணுவம் கைது செய்துள்ளது.
விமானப்படையுடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையால் குலியாகன் நகரமே போர்க்களமாக மாறிப் போனது.
துப்பாக்கிச் சண்டையில் 29 பேர் கொல்லப்பட்டனர். விமானங்கள் தாக்குதலுக்கு இலக்கானதால் அங்குள்ள விமான நிலையத்தையே மூடும் நிலை ஏற்பட்டது.
ஹூவாகின் எல் சாப்போ குஸ்மேன்… போதைப்பொருள் கடத்தல் உலகில் பெருவாரியாக அறியப்பட்ட பெயர்.
மெக்சிகோவில் “சினலோவா கார்ட்டல்” என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தையே அவர் நடத்தி வந்தார்.
2019-ம் ஆண்டு பிடிபட்ட அவர், போதைப்பொருள் கடத்தல், பண மோசடி ஆகிய குற்றங்களுக்காக அமெரிக்கச் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
எல் சாப்போ பிடிபட்ட பிறகு, சினலோவா கார்ட்டலின் ஒரு பகுதி, அவரது மகன் ஒவிடியோ குஸ்மேன்-லோபெஸ் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளது.
“தி மவுஸ்” என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட குஸ்மேன் லோபஸ், தந்தையைப் பின்பற்றி போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப் போனார்.
இதையடுத்து, இரு நாடுகளும் குஸ்மேன் லோபஸூக்கு குறி வைக்க, திரைப்பட நாயகர்களை மிஞ்சும் வகையில் தொடர்ந்து அவர் தப்பி வந்தார்.
அமெரிக்கா உதவியுடன், 6 மாதங்களுக்கும் மேலாக அவரது நடமாட்டங்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த மெக்சிகோ ராணுவம், குஸ்மேன் லோபஸைப் பிடிக்க தேதி குறித்தது.
அதன்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை குலியாகன் நகரில் பதுங்கியிருந்த ஒவிடியோ குஸ்மேன்-லோபெஸைப் பிடிக்க மெக்சிகோ ராணுவம் களத்தில் இறங்கியது.
உளவுத் தகவல் அடிப்படையில், குஸ்மேன்-லோபெஸை விரைந்து பிடிக்க ராணுவம் துரிதமாக செயல்பட்டது.
லோபெஸை ராணுவம் நெருங்குவதை அறிந்ததும் கொதித்தெழுந்த அவரது கூட்டாளிகள் ஆங்காங்கே தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். அதிநவீன துப்பாக்கிகளுடன் ராணுவத்தினரை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ராணுவத்தினரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகளை போட்டனர். சாலைகளில் சென்ற வாகனங்களை சரமாரியாக தீக்கிரையாக்கினர். கடைகள், வர்த்தக நிறுவனங்களை சூறையாடி வன்முறையிலும் இறங்கினர்.
குலியாகன் நகரில் பல இடங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை மூண்டது.
அங்குள்ள விமான நிலையமும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
அங்கே புறப்படத் தயாராக இருந்த பயணிகள் விமானம் ஒன்றின் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
விமானத்திற்குள் இருந்த பயணிகளும், ஊழியர்களும் இருக்கைகளுக்கு கீழே பதுங்கிக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திரைப்படங்களை மிஞ்சும் வகையில், குலியாகன் நகரில் ஆங்காங்கே போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் குஸ்மேன்-லோபெஸையும் மெக்சிகோ ராணுவம் நெருங்கிவிட்டது.
பலத்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு குஸ்மேன்-லோபெஸைப் பிடித்த மெக்சிகோ ராணுவம், ஹெலிகாப்டரில் அவனை உடனே தலைநகர் மெக்சிகோவுக்குக் கொண்டு சென்றுவிட்டது.
குஸ்மேன்-லோபெஸைப் பிடிக்கும் வேட்டையிலும், அதன் பிறகு நீடித்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சண்டையிலும் 10 ராணுவத்தினரும், 19 போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். 35 ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவத்தினர் முன்கூட்டியே, தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டதால் இந்த வேட்டையில் அப்பாவி பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று மெக்சிகோ அதிபர் ஆந்த்ரேஸ் லோபெஸ் ஒப்ரதோர் தெரிவித்துள்ளார்.
குஸ்மேன்-லோபெஸை பிடிக்கும் வேட்டையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ராணுவத்திற்கும் இடையே வெடித்த மோதலால் குலியாகன் நகரமே போர்க்களமாக காட்சியளிக்கிறது.
அங்கு நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க கூடுதலாக ஆயிரம் துருப்புகளை மெக்சிகோ அரசு அனுப்பி வைத்துள்ளது.
குஸ்மேன்-லோபெஸ் கூட்டாளிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக குலியாகன் நகரை உள்ளடக்கிய சினலோவா மாகாணத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைமையை மெக்சிகோ அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
2019-ம் ஆண்டு ஒவிடியோ குஸ்மேன்-லோபெஸை மெக்சிகோ ராணுவம் கைது செய்த போதிலும், அவனது கூட்டாளிகள் வன்முறையில் இறங்கப் போவதாக விடுத்த மிரட்டலுக்குப் பணிந்து, பின்னர் விடுவித்துவிட்டது நினைவுகூரத்தக்கது.
குஸ்மேன் லோபெஸ் மட்டுமின்றி, அவனது 3 சகோதரர்களுடம் கூட தந்தை எல் சாப்போவின் சினலோவா கார்ட்டெலின் முக்கிய கமாண்டர்களாக திகழ்ந்துள்ளனர்.
குஸ்மேன் லோபெஸூம், அவனது சகோதரன் ஹூவாகினும் மட்டும், மெக்சிகோவின் சினலோவா மாகாணத்தில் 11 மெத்தம்பெட்டமைன் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் 2,200 கி.கி. அளவுக்கு போதைப்பொருளை தயாரித்து வந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குஸ்மேன் லோபெஸ் தற்போது பிடிபட்டுவிட்ட நிலையில், போதைப்பொருள் கடத்தலை தொடரும் அவனது சகோதரர்களுக்கும் மெக்சிகோ அரசு வலைவிரித்துள்ளது.
ராணுவ வேட்டையில் பிடிபட்டுள்ள ஒவிடியோ குஸ்மேன்-லோபெஸ், மெக்சிகோ நகரில் ஏற்கனவே சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயாராக வைக்கப்பட்டிருந்த சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மெக்சிகோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.