அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் ஆசிரியை ஒருவரை துப்பாக்கியால் சுட்ட ஆறு வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நியூபோர்ட் நியூஸ் நகரில் உள்ள ரிச்னெக் தொடக்கப் பள்ளியில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியிலிருந்து சிறிது நேரம் கழித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்த நகரின் தலைமை போலீஸ் அதிகாரி ஸ்டீவ் ட்ரூ தெரிவித்தார்.
குழந்தை கைக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் “தற்செயலாக நடந்த துப்பாக்கிச் சூடு” இல்லை என்றார் ஸ்டீவ் ட்ரூ.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவிலான காயங்களுடன் இருக்கும் ஆசிரியையின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கு வயது 30 இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், மருத்துவர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்தச் சம்பவம் ஒன்றாம் வகுப்பு (ஆறு முதல் ஏழு வயது வரை) வகுப்பறையில் ஆசிரியைக்கும் சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு நடந்துள்ளது.
ஆனால், ஸ்டீவ் ட்ரூ இந்தத் துப்பாக்கிச் சூடு ஒரு தனிப்பட்ட சம்பவம் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், அதிகாரிகள் “பள்ளியில் இப்படி யாரும் துப்பாக்கியைக் கொண்டு சென்று சுடுவதைப் போன்ற சூழல் அங்கு இல்லை,” என்று வலியுறுத்தினர்.
சுமார் 550 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இரும்பைக் கண்டறியும் வசதிகள் இருந்தபோதும், மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனை சீரற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒவ்வொரு குழந்தையும் முழுமையாகப் பரிசோதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் பெயரைக் கூறுவதற்கு மறுத்த போலீசார், சிறுவன் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகக் கூறினர்.
பள்ளி மாவட்டத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் பார்க்கர், “இந்தச் சம்பவம் நடப்பதற்குக் காரணமாக இருந்த எந்தவொரு நிகழ்வையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்கள்.
இது பயங்கரமானது. இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடக்கக்கூடாது. இதுபோன்ற எதுவும் மீண்டும் நடக்காது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்,” என்றார்.
திங்கட்கிழமை பள்ளி மூடப்படும் என்று கூறியவர், அதிர்ச்சிகரமான இந்த நிகழ்வை எதிர்கொள்வதற்கும் சமாளிக்கவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேயர் ஃபிலிப் ஜோன்ஸ், மூன்று நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். அவர், “நியூபோர்ட் நியூஸ் நகரத்திற்கு இதுவோர் இருண்ட நாள்” எனக் கூறினார்.
இதிலிருந்து நாம் பாடம் கற்று, வலுவாக மீண்டு வரப் போகிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
விர்ஜீனியா ஆளுநர் க்ளென் யங்கின் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவி வழங்குவதாகக் கூறினார். மேலும், அவரது நிர்வாகம், “அதனால் முடிந்த அனைத்து வகையிலும் உதவத் தயாராக உள்ளது” என்றார்.
“நான் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மேலும், அனைத்து மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகத்தின் தொடர்ச்சியான பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்,” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நியூபோர்ட் நியூஸ், சுமார் 180,000 மக்கள் வசிக்கும் நகரம். மாநில தலைநகர் ரிச்மண்டுக்கு தெற்கே சுமார் 112 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.