மட்டக்களப்பு நகர் பகுதியில் தாயின் 5 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற மகனை நேற்று (ஜன 09) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

குறித்த நபர் மாங்காட்டு பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதோடு, போதை பொருளுக்கு அடிமையானவராவார்.

கடந்த 2 ஆம் திகதி தாயரின் வீட்டிற்குச் சென்று பணம் கேட்ட நிலையில் அவர் பணம் இல்லை என்றதும் தாயாரின் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் குறித்த நபரை நேற்று திங்கட்கிழமை அதிகாலை மாங்காட்டில் வைத்து கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார் என அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version