ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன?

ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் அருகே நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற 20 வயது பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

விசாரணை முடிவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ் (31), பிரகாஷ் (31) ஆகிய 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்கப்பட்ட போது, நடந்த சம்பவம் குறித்து அவர் விவரித்தார்.

“இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகராஜ், பிரகாஷ் ஆகிய இருவருமே காவல்துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பின்னர், பெண்ணை கடத்துவதற்கு அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை மீட்கச் சென்றோம்.

பாலசெட்டிசத்திரம் கிராமத்திற்கு அருகே உள்ள யூகலிப்டஸ் காட்டில் இரு சக்கர வாகனத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி காவல்துறையினரை அவர்கள் அங்கு அழைத்துச் சென்றனர்,” என்று சுதாகர் கூறினார்.

 

“இருசக்கர வாகனத்தை மீட்கச் சென்ற இடத்தில், வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீதுள்ள உறையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை நாகராஜ் திடீரென எடுத்து சுடத் தொடங்கினார்.

நாகராஜ் சுமார் 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதால் எழுந்த பதற்றமான சூழலில் மற்றொரு கைதி பிரகாஷ் தப்பி ஓடிவிட்டார்.

முதலில் மேல்நோக்கி சுட்ட நாகராஜ் பின்னர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதால் வேறு வழியின்றி காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட வேண்டியதாயிற்று,” என்றார் சுதாகர்.

“காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் நாகராஜின் காலில் குண்டு பாய்ந்தது. அதேநேரத்தில், காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பி ஓடிய பிரகாஷ் கீழே தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரையுமே காவல்துறையினர் மீண்டும் கைது செய்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,” என்றும் சுதாகர் தெரிவித்தார்.

காயமடைந்த இருவருமே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்குடன், காவல்துறை பிடியில் இருந்து தப்ப முயற்சித்தது, ஆயுதங்களை பயன்படுத்தியது, காவல்துறையினரை மிரட்டியது என்பன உள்ளிட்ட மேலும் பல பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version