பேனா விற்கும் சிறுமியிடம் இருந்து அனைத்து பேனாக்களையும் பெண் ஒருவர் வாங்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது.

மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு.

அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் பேனா விற்கும் சிறுமியை பெண் ஒருவர் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை நஹிரா ஜியாயே என்னும் பெண் வழக்கறிஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் தனது பெயர் ஜைனாப் என்கிறார் அந்த சிறுமி. காரில் இருந்த பெண் சிறுமியிடம் பேனாவின் விலையைக் கேட்கிறார். சிறுமி 20 சென்ட் என்று கூறுகிறார். எல்லா பேனாக்களையும் தான் வாங்கிக்கொள்ளவா? என அந்த பெண் கேட்கிறார்.

அதனை கேட்டு சிறுமி ஆச்சர்யமடைந்து சரி என்கிறார். பின்னர் அந்தப் பெண் சிறுமிக்கு பணத்தைக் கொடுக்கிறார்.

அப்போது “நீங்கள் எனக்கு அதிக பணம் கொடுத்துவிட்டீர்கள்,” என்று அந்த சிறுமி சொல்கிறார்.

அதன்பின் அந்தப் பெண் சிறுமியிடம் இன்னும் இரண்டு கரன்சி நோட்டுகளைக் கொடுக்கிறார். இதனால் சிறுமி புன்னகை செய்கிறார்.

வீட்டுக்கு சென்று அம்மாவிடம் பணத்தை கொடுக்கும்படி அந்த பெண் சொல்ல, சிறுமி அங்கிருந்து மகிழ்ச்சியாக துள்ளிக்குதித்து ஓடுகிறார். இந்த வீடியோவை இதுவரையில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்.

இந்த வீடியோ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் எடுக்கப்பட்டதாக பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த பதிவில்,” வீடியோவை பார்க்கும்போதே எனது கண்கள் கலங்கிவிட்டன” என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.

மற்றொருவர்,”அந்த இடத்திலிருந்து சிறுமி செல்லும் விதமே அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

சிறுமியின் குடும்பம் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என மற்றொருவர் கமெண்ட் செய்திருக்கிறார். இப்படி நெகிழ்ச்சியுடன் நெட்டிசன்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version