சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முயற்சித்த 38 இலங்கையர்கள், விமானம் ஊடாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

பின்னர் டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம் – பத்தலகுண்டு தீவில் இருந்து 3 டிங்கி படகுகளை பயன்படுத்தி 64 பேருடன் பிரித்தானியாவிற்கு சொந்தமான Diego Garcia தீவிற்குள் நுழைய முயன்றுள்ளனர்.

டிசம்பர் 30 ஆம் திகதி அவர்கள் பிரித்தானிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த இலங்கையர்கள் பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ளதுடன், அங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரீ யூனியன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களில் 38 பேர் தற்போது இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்களில் இரண்டு பெண்களும் 18 வயதிற்கும் குறைந்த இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹாவை சேர்ந்தவர்களாவர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி மற்றும் கண்டியை சேர்ந்த கடத்தல்காரர்களால் நபர் ஒருவரின் பயணத்திற்கு 04 இலட்சம் ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபா வரை அறவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version