தமிழ்நாட்டில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவரும் பத்ம ஸ்ரீ விருது பெறுவதற்கு தேர்வாகியுள்ளதாக முதலில் தெரியவந்த போது அதை அவர்கள் நம்பவில்லை.

இருவரும் கரூர் மாவட்டத்தில் காகிதபுரம் கிராமத்தில் பாம்பு பிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

”இது மாதிரி எல்லாம் எங்களுக்கு யாரும் போன் போட்டதில்லை. தீடீர்னு டிஜிபி ஆபீசில் இருந்து எங்களுக்கு பேசினாங்க. என்னனு தெரியலயேனு பயமா இருந்துச்சு… பத்மஸ்ரீ விருதுனு ஒன்னு இருக்கு, அதுக்கு நாங்க தேர்வாகியிருக்கோம்னு போலீஸ் அதிகாரி ஒருத்தரு சொன்னாரு.. அப்பறம் பத்திரிகைகாரங்க சொன்னாங்க.. எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அப்பிடி ஒரு விருது இருக்குனு எங்களுக்கு இப்போதான் தெரியும்,” என வெகுளியாக பேசுகிறார் மாசி சடையன் (45).

16 வயதில் இருந்து பாம்பு பிடிப்பதில் ஈடுபட்டுள்ள மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் இருவரும் முதலில் அவர்களின் பெற்றோருக்கும், முன்னோர்களுக்கும் நன்றி என்றார்கள். இருளர்களின் தெய்வமான கன்னிமார் சாமியை வணங்கி, தங்களது முன்னோர்களை வணங்கிவிட்டுதான் எல்லா வேலைகளிலும் ஈடுபடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அமெரிக்காவிலும் பாம்பு பிடி சேவை

பாம்பு பிடி வீரர்கள்

பாம்பு பிடிக்க செல்லும்முன், முதலில் இந்த வேண்டுதலை வைத்துவிட்டு தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

”எங்கள் பெற்றோர் வழியில் நாங்கள் பாம்பு பிடிக்கக் கற்றுக் கொண்டோம். அவர்களிடம் இருந்து பெற்ற அறிவும், எங்கள் முன்னோர்கள், எங்கள் குலதெய்வத்தின் அருளால் இதுவரை எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை,” என்கிறார் வடிவேல்.

2017இல்,அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் பெரிய மலைப்பாம்புகளைப் பிடிக்க சென்ற சமயத்திலும், அவர்கள் கன்னிமாரிடம் வேண்டுதலை முதலில் சொல்லிவிட்டு பாம்பு பிடித்ததாகச் சொல்கிறார்கள்.

எப்போதும் அவர்களிடம் ஒரு பச்சிலை பொட்டலத்தை உடன் வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்து பொடி அது.

”பாம்பு எங்களை கடிக்காது என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் செல்வோம். மீறி ஒருசில சமயம் பாம்பு கடித்தால், உடனே இந்த பொடியை எடுத்து வாயில் போட்டுக்கொள்வோம். அது என்ன விதமான பாம்பு என்று எங்களுக்குத் தெரியும் என்பதால், உடனே மருத்துவமனைக்கு எங்களைக் கூட்டிச்சென்றவுடன் பாம்பின் அடையாளத்தைச் சொல்லி முதலுதவி எடுத்துக்கொள்வோம்.

இதுவரை 30ஆண்டுகளில் நாங்கள் இருவரும் மூன்று முறை மட்டும்தான் பாம்புகளால் தீண்டப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளோம்,” என்கிறார் வடிவேல் கோபால்.

இதுவரை பிடித்த பாம்புகளின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்.

அவர்களின் கணக்குப்படி, 50க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளைப் பார்த்துள்ளதாகவும், விஷம் உள்ள பாம்புகள் மற்றும் விஷம் அற்ற பாம்புகள் என இரண்டு வகை பாம்புகள் எதுவும் ஆபத்தானது இல்லை என்றும் கருதுகிறார்கள்.

பாம்புகள் தங்களது இடத்தில் வசிப்பதாகவும், மனிதர்கள் மெல்ல அவர்களின் இடங்களுக்குச் செல்வதால், பாம்புகள் இடம்தேடி வீடுகளுக்கும் வருவதாகச் சொல்கிறார்கள்.

நல்ல பாம்பு, தண்ணி பாம்பு, கட்டுவிரியன், சாரை பாம்பு, கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன், பச்சைப் பாம்பு என பல வகையான பாம்புகளின் பட்டியலை சொல்கிறார் மாசி சடையன்.

இவர் மனைவி சுசீலா பலமுறை இவர் பிடித்த பாம்புகளை லாவகமாக வாங்கி பையில் பாதுகாப்பாக வைத்திருந்து, வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளதை நினைவு கூறுகிறார் மாசி சடையன்.

1970கள் வரை பாம்பு தோல் ஏற்றுமதி என்பது மிகவும் பரவலாக நடைபெற்றுவந்தது. 1972ல் பாம்பு தோல் ஏற்றுமதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதே சமயத்தில்தான் இந்தியாவில் வனப்பகுதிகளில் காப்புக்காடு பகுதிகளை உருவாக்குவது, தேசிய பூங்கா உருவாக்குவது என பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.

அதனால் வனப்பகுதிகளிலிருந்து இருளர் பழங்குடிகள் மெல்ல வெளியேறவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. 1986ல் புகழ்பெற்ற ஊர்வனவியல் ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேகர் இருளர் மக்களுக்காக இருளர்களின் கூட்டுறவு பண்ணை ஒன்றைத் தொடங்கினார்.

இந்திய அளவில் பாம்புக் கடிகளால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க இந்த பண்ணையில் பாம்பு விஷத்தை எடுத்துப் பதப்படுத்தி, மருந்து தயாரிக்க அனுப்பும் வேலைகள் தொடங்கப்பட்டன.

இந்த பண்ணை வந்த காரணத்தால், இருளர்கள் பலர், வனத்துறையுடன் இணைந்து பணியாற்றவும் தொடங்கினர். பல ஊர்களிலும் பாம்பு பிடிப்பதற்கு இருளர்களைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது. தற்போது இருளர் பாம்பு பண்ணையில் உரிமம் பெற்ற பாம்பு பிடி வீரர்கள் உள்ளனர்.

2016ல் தாய்லாந்து மற்றும் 2017ல் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று பாம்பு பிடித்த அனுபவம் பற்றிக் கேட்டபோது, ரோமுலஸ் விட்டேக்கர் உதவியால் வெளிநாடுகளில் பாம்பு பிடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்கிறார் மாசி சடையன்.

தாய்லாந்தில் பிடித்த ராஜ நாகங்கள்

”எங்கள் திறமையை நம்பி எங்களைக் கூட்டிச் சென்றார்கள். 27 பாம்புகளை பிடித்தோம். நாங்கள் பிடித்த பாம்புகள் ஒவ்வொன்றும் 50கிலோவுக்கு மேற்பட்ட பாம்புகளாக இருந்தன. பல நாட்கள் இரவு தூங்கவில்லை.

ரோமுலஸ் விட்டேக்கர் மற்றும் பல வெள்ளைக்காரர்கள் எங்களுக்கு நன்றி சொன்னார்கள். நாங்கள் எங்கள் குலதெய்வத்திற்கும், முன்னோருக்கும் நன்றி சொன்னோம்,” என்கிறார் மாசி சடையன்.

தாய்லாந்து அனுபவம் பற்றிக் கேட்டபோது, வடிவேல் கோபாலுக்கு ஆர்வம் அதிகமானது. முதலில் தாய்லாந்தில் இரண்டு பெரிய ராஜநாக பாம்புகளை பிடித்த விதத்தை நேரில் பார்த்தவர்கள் தங்களுடன் படம் எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார்.

”வெளிநாடாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும், எங்களுக்கு பாம்பு ஒரு தெய்வம். அதை சிரமப்படுத்தாமல் லாவகமாகப் பிடிப்பதற்கு எங்களுக்குத் தெரியும், அது ஒரு கலை என்கிறார்கள்.

எங்களுக்கு அது குலவழக்கத்தில் வந்தது என்பதால் நாங்கள் பாம்புகளைப் பற்றிய அனுபவ அறிவோடு வேலை செய்யமுடிகிறது.

ஒவ்வொரு பாம்பும் அதன் குணம், பிடிக்கும் நேரம் என பலவற்றை வைத்துத்தான் எப்படிப் பிடிப்பது என்று முடிவு செய்யமுடியும்,”என்கிறார் வடிவேல் கோபால்.

இருளர் பாம்பு பண்ணை தொடங்கப்படுவதற்கு முன்பு வீடுகளில் பாம்புகள் வைத்திருந்ததை பற்றிப் பேசிய பாம்பு பண்ணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், இருளர் கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என எல்லோரும் பாம்பு பிடிப்பதை சிறுவயதிலிருந்து கற்றுக்கொள்வது மரபு என்கிறார்.

அவர்கள் தங்களது பிள்ளைகளுடன் பாம்பு பிடிக்கச் செல்வதால், அவர்கள் அப்போதிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். மாசி சடையன், வடிவேல் கோபாலும் அவ்வாறுதான் கற்றுக்கொண்டனர்.

தங்களது கூட்டத்தில் பல இளைஞர்கள் பாம்பு பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் பாம்புகளின் எண்ணிக்கைதான் குறைந்துகொண்டே வருவதாக கார்த்திக் வருத்தத்துடன் பேசினார்.

சிறுவயதில் தங்களது வீடுகளில் பானையில் பாம்புகள் வைத்திருப்பார்கள் என்றும் விஷமில்லாத பாம்புகள் சிலவற்றை எடுத்து குழந்தைகள் விளையாடுவார்கள் என்றும் சொல்கிறார்.

”தற்போது இருளர் கூட்டுறவு பண்ணையில் 350 பேர் லைசென்ஸ் பெற்ற பாம்பு பிடி வீரர்கள் இருக்கிறோம். பெண்களும் இருக்கிறார்கள்.

பாம்பு பிடிப்பது எங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இவர்களுக்கு விருது கிடைத்துள்ளதால், எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை. பாம்பு பிடிப்பவர்கள் என்ற அடையாளத்தை இனி பெருமையுடன் நாங்கள் சொல்வோம்,”என்கிறார் கார்த்திக்.

மாசி சடையன், மனைவி சுசீலா மற்றும் அவரது மூன்று குழந்தைகள், வடிவேல் கோபால் அவரது மனைவி புஷ்பா மற்றும் ஒரு மகன் என அனைவரும் விருது வாங்க டெல்லிக்குச் செல்லும் தருணத்தை எதிர்பார்த்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version