பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்பட்ட பிரஸ்மீட்டை முன்வைத்து வலம் வரும் கிசுகிசுதான் இந்த செய்தி.
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு நடந்த கூட்டத்துக்காக இரு அரசியல் கட்சி தலைகள் முட்டி மோதிய விவகாரம் இப்போது அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
சென்னையை தவிர தமிழ்நாட்டின் இதர நகரங்களில் செய்தியாளர்களை தலைவர்கள் சந்தித்தால் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸாக முதலில் வரும். பின்னர்தான் மெல்ல மெல்ல வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகும்.
ஆனால் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அறிவிக்கப்பட்ட பிரஸ் மீட் இதற்கு விதிவிலக்காக இருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான உடனே உள்ளூர் முதல் உலகம் வரையிலான டிவி சேனல்களில் ப்ளாஷ் நியூஸாக ஒளிபரப்பானது.
செய்தியின் தன்மைதான் காரணம் என ஒருபக்கம் சொன்னாலும் உண்மையில் அப்படி செய்திகள் உடனுக்கு உடன் சேர வேண்டும் என்பதற்காக ஸ்கெட்ச் போட்டு பக்கா ஏற்பாடுகள் செய்திருந்ததாம் ஒரு குரூப்.
இப்படி ஒரு அறிவிப்பு வெளியான உடனேயே அதை மறுப்பது போல சில தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுபற்றி தமிழ்த் தேசிய வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, நீங்க பிரபாகரன் நாளைக்கு வருகிறார் என அறிவிக்க சொல்லுங்கள்.. அப்போது கூட யார் இதனை அறிவிப்பது என்கிற ஈகோ அந்த 2 தலைவர்களிடம் வெடிக்கும்.
கடந்த 40 ஆண்டுகளாக இதனைத்தான் பார்க்கிறோம். இந்த இரு பெரியவர்களிடையேயான ஈகோ விவகாரம் எத்தனையோ துரோகங்களையும் செய்திருக்கிறது என அங்கலாய்த்தனர்.
அத்துடன், பிரபாகரன் குறித்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. ஆகையால் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் என சக தலைவருக்கு அழைப்பு போயிருக்கிறது.
அந்த தலைவரோ, அவர் அறிவிப்பதாக இருந்தால் எனக்கு எப்படி முக்கியத்தும் வரும்? நான் என்ன பத்தோடு பதினொன்றா? நான் எவ்வளவு முக்கியமான ஆள் தெரியும்தானே? அதெல்லாம் முடியாது. நான் வரவே மாட்டேன்.. என அடம்பிடித்திருக்கிறார்.
இதனால் பிரபாகரன் குறித்த அறிவிப்பை வெளியிட ஏற்பாடு செய்த குரூப் அந்த தலைவரை மட்டும் கழற்றிவிட்டு லைட்டா ஒரு நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக பக்கத்தில் இருந்த சீனியரை சேர்த்துக் கொண்டதாம்.
இத்தனைக்கும் அந்த சீனியரை ஈழத்து தரப்போ ஒதுக்கி வைத்து பன்னெடுங்காலமாகிவிட்டதாம்.
நாட்டுக்கு திரும்பி வாருங்கள் என ஈழத் தரப்பு சொன்ன போது எனக்கு பிள்ளைகள் வாழ்க்கைதானே முக்கியம் என ஜகா வாங்கினாராம்.
அதனாலேயே அவரை அன்னம் தண்ணி புழங்ககக் கூடாது ரேஞ்சுக்கு ஈழத் தரப்பு ஒதுக்கி வைத்ததாம்.
அந்த நபரை வைத்துக் கொண்டுதான் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என அறிவித்தனராம்.
இந்த விவகாரம் தான் இப்போது அரசியல் வட்டாரங்களில் ரொம்பவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.