அனலைதீவில் தங்கியிருந்த கனேடியர் ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

க னடாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் அனலைதீவுக்கு வந்து அங்கிருக்கும் தமது பூர்வீக வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த நால்வர் கொண்ட கும்பல் வாளால் குடும்பத் தலைவரை வெட்டிக் காயப்படுத்தியதுடன் குடும்பத்தவர்களை மிரட்டியுள்ளது.

பின்னர் வீட்டிலிருந்த 2 ஆயிரம் கனேடிய டொலர் மற்றும் ஆயிரம் அமெரிக்க டொலர், 2 கனேடிய கடவுச்சீட்டுகள் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

முகங்களை கறுப்புத்துணியால் மூடிய வாறு நான்கு பேர் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கொள்ளை நடந்த போது கனடாவில் இருந்து வந்த தம்பதியரும் அயலவர்கள் இருவரும்    அங்கிருந்துள்ளனர்.

கனேடியத் தம்பதியர் நாடு திரும்பத் தயாராகப் பொதி செய்து வைத்திருந்த பொருட்களையெல்லாம் கிளறித் தேடி அதிலிருந்த பொறுமதியான பொருட்கள் எல்லாவற்றையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்காகிக் காயமடைந்தவர் அதிகாலையில் படகு மூலம் ஊர்காவற்றுறைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 2 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

இக் கொள்ளை தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version