உலகில் மிகவும் தாக்கம் விளைவிக்க கூடிய அரசியல் மாற்றங்களில் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு என்ற குறிப்பிடக்கூடிய நேட்டோவுக்கும்  துருக்கிய அரசியல் நகர்வுகளுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கக்கூடிய இழுபறி நிலைமையானது மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது.

துருக்கியில் கடந்த வாரம் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சுமார் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பலியானதான செய்திகள் வெளிவந்திருந்த போதிலும் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை நேட்டோ அணியில் சேர்த்து கொள்வதற்கு துருக்கி மிகவும் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

தற்பொழுது முப்பது அங்கத்துவ நாடுகளை கொண்ட நேட்டோக் கூட்டில் மேலும் இரு நாடுகளை தன்னுடன் இணைத்து கொள்ளும் வகையில் இராஜதந்திர நகர்வுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

சர்வதேச அரசியலில் அமெரிக்க மேலாண்மைக்கு வலுச்சேர்க்கும் வகையில், மேலைத்தேய தாராள பொருளாதாரவாத சித்தாந்தக் கருத்துக்களை முன்நிறுத்தி நேட்டோ கிழக்கு நோக்கி காலடியெடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக தனது கூட்டில் புதிய அங்கத்துவர்களை அவ்வப்போது இணைத்துக்கொண்டு நகர்வுகளை வெற்றிகரமாக முன்னகர்த்திச் செல்கின்றது.

நேட்டோவின் இச்செயற்பாடானது, சர்வதேச பூகோள அரசியலில் ஐரோப்பிய, ஆசியக் கண்டங்களை உள்ளடக்கியதான  பெரும்நிலப்பரப்பை கொண்ட நாடான ரஷ்யாவைச் சவாலுக்கு உட்படுத்தும் நிலையை தற்போது தோற்றுவிப்பதாக அவதானிகள் சுட்டிக்காயுள்ளனர்.

இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த வருடம் தொடங்கிய உக்ரேன் மீதான படையெடுப்பும் கூட நேட்டோவின் முன்னேற்றத்தை எதிர்கொள்வதை மையப்படுத்தியதாகும்.

ஆனால் தாராளவாத பொருளாதார நாடுகள் நேட்டோவில் இணைவது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பது, அந்ததந்த நாடுகளின் முற்றுமுழுதான சுயாதீன உரிமை என்றே கூறிவருகின்றன.

இந்த வரிசையில் உக்ரேனிய படையெடுப்பின் பின்பான அரசியல் நகர்வுகளில் மேலை நாடுகள் சுவீடன், பின்லாந்து ஆகியவற்றை நேட்டோவில் இணைத்துக் கொள்ளும் வகையில் அவ்விரு நாடுகளிடமும் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

ஆனால் சுவீடன், பின்லாந்து ஆகியனவற்றை இணைத்துக் கொள்வதாயின் ஏற்கனவே அங்கத்துவம் பெற்ற நாடுகளின் சம்மதம் பெற்று கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையில் நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி இதற்கு சம்மதம் தெரிவிப்பதற்கு தொடர்ச்சியாக மறுப்பினை வெளியிட்டு வருகின்றது.

துருக்கி 1952ஆம் ஆண்டே நேட்டோவில் இணைந்து கொண்டதொரு நாடாகும். அன்றைய காலத்தில் சோவியத் கூட்டு நாடுகளின் அமைப்பாக கருதப்பட்ட ‘வோசோ’ அணி நாடுகளுக்கு எதிரான மேலைத்தேய தாராள வாதத்தின் சார்பாக நின்று துருக்கி மிகமுக்கியமாக மத்திய தரைக் கடற்பகுதி ஊடாக கிழக்கே  காணப்படும் தரைப் பகுதியை தனது நகர்வுக்கான தளமாகக் கொண்டு செயற்பட்டது.

அதேவேளை எண்பதுகளில் துருக்கியில் குர்திஸ்தான் போராட்டம் மிக வலுவாக இருந்தது. சோவியத் ஆதரவுடன் பி.கே.கே. எனப்படும்  குர்தீஸ் தொழிலாளர் கட்சியானது, துருக்கியில் தமது தாய் நிலத்திற்காக போராடியது.

ஆனால் பிற்காலத்தில் பி.கே.க பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்டு, சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்டது.

சோவியத் வீழ்ச்சிக்கு பின்பு ஏற்பட்ட ‘ஒற்றை மைய’ உலக ஒழுங்கில் மத்தியகிழக்கு அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

பல்வேறு இடங்களில் மேலைத்தேய நாடுகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பலதடவைகளில் விரிசல்கள் ஏற்பட்டன.

மிகமுக்கியமாக 2014ஆம் ஆண்டு பதவிக்கு வந்த தற்போதைய துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனின் காலத்தில் 2016 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்கான முயற்சியும் இடம்பெற்றது.

இந்த இராணுவ புரட்சியை ஏற்படுத்தி செயற்படுத்தவதற்கு வித்திட்டவர் அமெரிக்காவிலிருந்தே செயற்பட்டார் என்று துருக்கி தனது புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.

இந்தக் காலப்பகுதியிலிருந்து துருக்கியின் நகர்வுகள் நேட்டோவுக்குச் சாதகமானதாக இருக்கவில்லை என்பது அவதானிகளின் பார்வையாகும்.

அதுமட்டுமன்றி, உக்ரேன், ரஷ்ய போர்ச்சூழல் ஆரம்பித்ததன் பின்னர் துருக்கியின் நகர்வுகள் ரஷ்யாவைச் சார்ந்ததாக இருக்கின்றன என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியானது, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை செலுத்தி உள்ளிட்ட  உபகரணங்களையும் ஏவுகனைகளையும் கொள்வனவு செய்துகொண்டுள்ளது.

அதுமட்டுமன்றி, குறித்த ஆயுதக் கொள்வனவுக்குப் பின்னர் துருக்கிக்கும், ரஷ்யாவுக்குமான இருதரப்பு உறவுகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

மேலை நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகின்ற போதிலும் துருக்கி ரஷ்யாவுடன் உறவுகளைக் கொண்டிருப்பதால்  குறிப்பாக அமெரிக்காவின் கடும் கோபத்துக்கும், கண்காணிக்கும் அது உள்ளாகியுள்ளது.

இருந்தபோதிலும் துருக்கியின் பூகோள முக்கியத்துவத்தின் காரணமாக நேட்டோ கூட்டமைப்பிலிருந்து துருக்கியை வெளியேற்ற முடியாத நிலைமை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை உக்ரேனிய போர்காலத்திலும் நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியானது, ரஷ்ய ஆதரவுப்போக்கையே கொண்டிருப்பதை நேட்டோவின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் குறைகூறி வருகின்றன.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் வட,கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதன் காரணமாக  சுவீடன் நேட்டோவில் இணையும் நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், துருக்கி அதனை எதிர்ப்பதற்கான முக்கிய காரணம் சுவீடன் நாட்டில் தஞ்சமடைந்துள்ள பி.கே.கே. போராளிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் வாழ்விட வசதிகளைச் செய்து கொடுத்திருப்பதுடன் சுவீடன் அரசியலில் குர்தீஸ் மக்கள் செல்வாக்குச் செலுத்தம் நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

ஜனநாயக நாடுகள் ஒருகூட்டாகச் செயற்படும் பொழுது அவையொருபோதும் எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டவையாக இருக்க முடியாது.

எந்த அங்கத்துவ நாடுகளும் சக அங்கத்துவ நாடுகளின் பிராந்திய நலன்களில் சவால் விடுக்கக் கூடிய அரசு அல்லாத அலகுகளுடன் தொடர்புகளை வைத்திருத்தலாகாது.  இது நேட்டோ நாடுகள் தம்மத்தியில் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதொரு விடயமாகும்.

அதனடிப்படையில், எதிரான செயற்பாடுகளைக் கொண்ட நாடு நேட்டோ அணியில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று துருக்கி கூறி வருகிறது.

அத்துடன், பி.கே.கே.வை ஒரு பயங்கரவாத அமைப்பாக துருக்கி அறிவித்துள்ளது. அதன் செயற்பாடுகளையும் துருக்கி முழுமையாக எதிர்க்கின்றது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் கூட பி.கே.கே. அமைப்பை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்துள்ளன.

இருந்த போதிலும் மேலை நாடுகள் தமது நலன்களுக்கு ஏற்ற வகையில் செயற்படுவதை ஏற்றுகொள்ள முடியாது என்பது துருக்கியின் விவாதமாகும் .

மேலைத்தேய நாடுகள் மீது ரஷ்யா தனது ஏவுகனை தாக்கதல்களை நடாத்துமானால் ரஷ்யாவிடம் வாங்கிய ஏவுகனைகளை கொண்டே துருக்கியால்  பதில் தாக்குதல்களை நடாத்த முடியாது.

அத்துடன் ஜனநாயக நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளில் துருக்கி இறங்கியுள்ளமைக்கு ஆதாரங்களும் உள்ளன.

இதற்கு எதிராக நேட்டோ அணி தனது அமைப்பில் தொல்லை தரும் அங்கத்தவரை வெளியேற்றும் புதிய சட்டங்களை இயற்றி அதன் மூலம் துருக்கியை நேட்டோவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இங்கே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவெனில் குர்தீஸ் இனம்போன்ற ஒருநாடற்ற சமுதாயம் புலம்பெயர்ந்த தேசத்து அரசியலில் ஆழ ஊடுருவி விட்டது.

அதன் காரணமாக குர்தீஸ் இனம் தாயகத்தின் மீது ஆக்கிரமிப்புச்செய்து வரும் அரசை சர்வதேச அரங்கில்  முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பொன்றிருந்து இடமாற்றம் செய்யகூடிய  விவாதங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு  பலம்கொண்டுள்ளது.

குர்தீஸ் இனத்தின் இந்தப் பலமான நிலை உரிமைகளுக்காக போராடும் ஏனைய இனங்களுக்கும் மிகச்சிறந்த உதாரணமாகின்றது. படிப்பினையாகின்றது.

-லோகன் பரமசாமி-

Share.
Leave A Reply

Exit mobile version