– நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்; IMFதனது கடமையைச் செய்யும் வரை காத்திருப்போம்!
– IMF முன்மொழிவு கிடைத்ததும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அதை அங்கீகரியுங்கள் அல்லது மாற்று வழியை முன்வையுங்கள்
– அரசின் திட்டம் தோல்வியுற்றால், 2022 பெப்ரவரி – மார்ச்சி இருந்த சூழ்நிலையை விட மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படும்
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (07) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் சீர்குலைந்தால் 2022 பெப்ரவரி மாத நிலமையைவிட மிகவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை பின்வருமாறு ;
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் 2022 மார்ச் நடுப்பகுதியில் தீர்மானித்தது. அதன் பிறகு அந்நியச் செலாவணி நெருக்கடி மோசமடைந்தபோது, ஏப்ரல் 2022 நடுப்பகுதியில், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இலங்கை ஒரு வங்குரோத்து பொருளாதாரமாக அன்று தொடக்கம் செயற்பட்டது. அதன் பாதகமான விளைவுகளை நீங்கள் அனைவரும் அனுபவித்திருக்கிறீர்கள்.
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்த நாடு எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, மருந்துகளை வாங்குவதில் உள்ள சிரமங்கள், பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி மற்றும் வறுமை அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை சந்தித்துள்ளது.
இலங்கையில் இவ்வாறான ஒரு அவல நிலை நவீன வரலாற்றில் இருந்ததில்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.
ஜூன் 2022 முதல் நிலவி வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் படிப்படியாக ஓரளவுக்குத் தீர்க்கப்படும் போக்கை காண்பித்தது. உரங்கள் வழங்கியதால், கடந்த வரும் சிறு மற்றும் பெரும் போகங்களில் சிறந்த அறுவடை கிடைத்தது. விவசாய பொருட்களின் ஏற்றுமதியும் வழமை நிலைக்கு திரும்பியது.
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்க்கும் வகையில், ஸ்திரப்படுத்தல் திட்டம் வகுக்கப்பட்டது.
அதற்கு பொருத்தமான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது. அவற்றில் சிலவற்றை இந்த உயரிய சபையில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எரிவாயு மற்றும் பெற்றோல் என்பன வழமை போன்று கிடைப்பதை உறுதி செய்வது, பாடசாலைகள் மற்றும் பரீட்சைகளை உரிய முறையில் நடத்தவது, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது, உரங்கள் வழங்குவது, சமுர்த்தி பயனாளர்களுக்கு மேலதிக நிதி வழங்குவது மற்றும் 2019 இல் அமுல்படுத்தப்பட்ட வரிக் கொள்கை மீள செயற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நேரிட்டது.
2019 இன் பிற்பகுதியில் அவசரகால அமுல்படுத்தப்பட்ட வரிக் குறைப்புகளுக்குப் பிறகு, அரசாங்க வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆகக் குறைந்தது. அதை சீர்செய்ய புதிய வரிக் கொள்கைகளை முன்னெடுக்க நேரிட்டது.
அதேபோல், மத்திய வங்கியின் நிதிக் கொள்கைகளின் கீழ் வட்டி விகிதங்களை உயர்த்த நேரிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துவதே எம்மிடமிருந்த சாதகமான நடவடிக்கையாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் சராசரி பணவீக்கம் 70% வரை உயர்ந்தது. உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தைத் தாண்டியது.
ஆனால் தற்போது பணவீக்க வேகம் 50 வீதம் வரை குறைந்துள்ளது. அத்தோடு உணவுப் பணவீக்கமும் 54 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், பணப் பரிமாற்ற விதிகளை கடுமையாக்கவும், இறக்குமதியை கட்டுப்படுத்தவும் நேரிட்டது.
எங்களால் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாது என அறிவித்தவுடன், வெளிநாடுகளும் நிதி நிறுவனங்களும் இலங்கையுடனான நிதிக் கொடுக்கல் வாங்கல்களைக் கட்டுப்படுத்தின.
உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கூட புதிதாக நிதி வழங்குவதை நிறுத்தின. வெளிநாட்டு உதவியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்த நேரிட்டது. கடன்பத்திரங்களை கூட திறக்க முடியவில்லை.
இலங்கைக்கு கடன் வழங்கக் கூடாது என்ற தர நிலைக்கு, கடன் தர நிர்ணய நிறுவனங்கள் எமது நாட்டைத் தரமிறக்கின.
இந்நிலையில் எமக்கு
ஏற்றுமதி
வெளிநாட்டில் பணிபுரிவதற்கு தொழிலாளர் இடம்பெயர்தல்
சுற்றுலாத் துறை மூலம்
அந்நியச் செலாவணி கிடைத்தன
நாடு மற்றும் சமூகத்தில் நிலவிய சாதகமற்ற சூழ்நிலையினால், 2022 ஆம் ஆண்டு முழுவதும் சுற்றுலாத்துறை வெற்றிபெறவில்லை.
ஆனால் இந்த ஆண்டு நிலைமையில் இருந்து எழுந்து நிற்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.
அந்நியச் செலாவணி அனுப்புவது சாதாரண நிலைமைகளில் இருந்த மட்டத்தை விட 1/3 ஆகக் குறைந்தது.
இது மேலும் அதிகரிக்கும் போக்கை காட்டுகிறது. ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க உதவும் உள்ளீடுகளை இறக்குமதி செய்யப் போதுமான அந்நியச் செலாவணி நம்மிடம் இன்னும் இல்லை.
எமது நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள நெருக்கடி, குறிப்பாக அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து 2021 முதல் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து எச்சரித்தது.
2022 நடுப்பகுதியில் இருந்து IMF உடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தப் பிரதிநிதிகள் இடைக்கிடையே இலங்கைக்கு வந்து, கொடுப்பனவு நிலுவை நெருக்கடி, நிதி நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து எங்களுடன் ஆழமாக கலந்துரையாடினர்.
மேலும், பல தசாப்தங்களாக தாமதமாகி வரும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை தொடர்ந்தும் ஒத்திவைக்க முடியாது என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.
2022 செப்டம்பர் முதலாம் திகதியில் IMF உடன் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை எட்டினோம்.
எவ்வாறாயினும், நாடு கடன் நிலைத்தன்மையை அடையும் வரை இந்த ஒப்பந்தத்தை IMF பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்க முடியாது என்று IMF தெரிவித்துள்ளது.
எனவே, கடனை நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இதற்காக, Lasads மற்றும் Clifford Chance ஆகிய சர்வதேச நிபுணத்துவ நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றோம்.
இது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான பேச்சுவார்த்தைகளாகும். இதன்படி, இலங்கைக்கு கடன் வழங்கிய பரிஸ் கழகத்துடனும், பரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத இந்தியா மற்றும் சீனாவுடனும் நிதியுதவி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டது.
2023 ஜனவரி 16 ஆம் திகதி அந்த உறுதிமொழியை இந்தியா வழங்கியது. சீனா அதை ஜனவரி 18 அன்று வழங்கியது.2023.01.25 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைக்கு நிதி உத்தரவாதத்தை வழங்க பாரிஸ் கிளப் ஒப்புக்கொண்டது.
அதன் பிறகு, மார்ச் 2ஆம் திகதி IMFஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் IMF கடன் உதவித் திட்டம் பற்றி கலந்துரையோடினேன்.
IMF உடனான பேச்சுவார்த்தையின் போது, அதன் உடன்பாட்டைப் பெறுவதற்கு பல பணிகளை முன்கூட்டியே செய்ய வேண்டியிருந்தது. மின்சார விலையை மறுசீரமைத்தல், பெற்றோலிய விலைகளை மறுசீரமைத்தல், மத்திய வங்கியின் சுயாதீனத்தை உறுதி செய்தல், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்துதல், பொது நிறுவனங்களை மறுசீரமைத்தல், சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க பணியாற்றுதல் மற்றும் பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்.
பெற்றோலிய மற்றும் மின்சாரத் துறைகளில் போட்டித்தன்மையை விரிவுபடுத்துதல் போன்ற பல விடயங்களை முன்கூட்டியே செய்ய வேண்டியிருந்தது.
இலங்கை முன்கூட்டியே செய்திருக்க வேண்டிய அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
மேலும், இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நான் அறிவேன். அதற்காக அரசாங்கம் என்ற வகையில் மன்னிப்புக் கோருகிறோம்.
நேற்றிரவு சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உத்தரவாதக் கடிதத்தைப் பெற்றோம். அதன்படி அன்றிரவே நானும் மத்திய வங்கி ஆளுநரும் இணக்கப்பாட்டுக் கடிதத்தில் கையொப்பமிட்டு சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்தோம்.
இப்போது நமது கடமைகள் நிறைவடைந்துவிட்டன. இந்த மாத இறுதிக்குள், நான்காவது வாரமளவில் , IMF தனது கடமையைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதன்பிறகு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து முதலாம் கட்ட நிதி கிடைக்கும்.
IMF உடனான இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் செய்து கொண்டதைப் போலல்லாமல், இந்த முறை உடன்பட்ட விடயங்களை தவறாமல் செய்யப்பட வேண்டும்.
இல்லையேல் IMF இலங்கையுடன் இணைந்து செயல்படாது. அந்த சூழ்நிலையில், பலதரப்பு மற்றும் இருதரப்பு நிதி நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட முடியாது.
அதன்படி, வெளிநாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் தடைபடும். ஒரு விடயத்தை நாம் வலியுறுத்த வேண்டும்.
தற்போது நாம் வெளிநாட்டு கடனை செலுத்தவில்லை. (பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் செலுத்தப்படுகிறது) IMF உடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் முறிந்தால், வெளிநாடுகள் மற்றும் தனியார் வங்கிகளில் (SB) வாங்கிய கடனை செலுத்த நேரிடும்.
2029 வரை வருடாந்தம் சுமார் 6 முதல் 7 வரையான பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள் செலுத்தப்பட வேண்டும்.
இந்தக் கடனை அடைக்க நம்மிடம் அந்நியச் செலாவணி இல்லை. எனவே, IMF தலையிட்டு வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் நிலைத்தன்மை உரையாடலைத் தொடர வேண்டும்.
இன்று அதற்கு தற்போது மாற்று வழி இல்லை. எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம், நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான விசேட முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பல கடினமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தோம். பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இன்னல்கள் ஏற்படும். இத்தகைய கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த 7-8 மாதங்களாக செலவழித்து, அதை ஒரு சாதகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
இதிலிருந்து முன்னேற பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. இதை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு செல்வாக்குச் செலுத்தும் குழுக்கள், அரசியல் கட்சிகள், தொண்டர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்றவை இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
வரிச்சுமை அதிகமாக உள்ளதாக தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த நிலைமை ஒரு குறுகிய காலத்திற்கு பராமரிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில், இந்தத் திட்டம் சீர்குலைந்தால், 2022 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருந்த நிலையை விட மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படலாம்.
அப்போது சம்பளம், ஓய்வூதியம், வேலை என்பன பறிபோகும் தொழிற்சாலைகள் மூடப்படும், பாடசாலைகள் தினமும் மூடப்படும் என்று பலரும் நினைத்தார்கள்.
அவற்றை நாம் ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால், சமூகத்தில் செல்வாக்கு மிக்க குழுக்கள் நாம் முன்வைத்த வேலைத்திட்டத்தை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாசமாக்கினால், அதிலிருந்து உருவாகும் சமூக மாற்றம், மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இது நம் சமூகத்தில் முன்னெப்போதும் இல்லாத சோகமான காலத்திற்கு வழிவகுக்கும்.
பேச்சு சுதந்திரத்தை, கருத்துக்களை வெளியிடும் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனை அமைதியாக செய்யுங்கள்.
கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இந்தப் போராட்டத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அதற்கு எதிராக இந்த அரசாங்கம் கடுமையாகச் செயல்படும் என்று கூற விரும்புகிறேன்.