மும்பை: மகாராஷ்டிராவில் அந்த விஷயத்திற்காக வயாகரா எடுத்துக் கொண்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். மாறி வரும் வாழக்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் நமக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

முன்பு அரிதாக ஏற்பட்ட பாதிப்புகளும் இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

அதேபோல எதாவது சிறு பாதிப்பு ஏற்பட்டாலே கூட மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போக்கும் அதிகரித்துள்ளது. எப்போதும் மருத்துவர்களின் பரிந்துரைப்படியே மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்..

மருந்துகள்

மருத்துவர்கள் பரிந்துரைக்காத மருந்துகள், அதிகமான டோஸ் மருந்துகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே வல்லுநர்களின் அறிவுரை.

இருப்பினும், இதை பெரும்பாலும் யாருமே முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. எதாவது சிறு பிரச்சினை என்றாலும் தானாக மாத்திரை எடுத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

இதனால் மிக மோசமான பாதிப்புகளும் கூட ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்தே வருகின்றனர். அப்படிப் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொண்ட மருந்தால் 41 வயதான நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

அரிதான நிகழ்வாக 41 வயது நபர் ஒருவர், மது அருந்திக் கொண்டே இரண்டு வயாக்ரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

மாத்திரை எடுத்துக் கொண்ட சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்துள்ளது.

அந்த நபர் தனது பெண் தோழியை ஹோட்டலில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அந்த நபர் வயாகரா என்று அழைக்கப்படும் சில்டெனாபில் 50mg மாத்திரைகள் இரண்டை சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் மதுவையும் அருந்திக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது

அந்த நபருக்கு இதற்கு முன்பு எந்தவொரு இணை நோய்களும் இல்லை.. அதேபோல அவருக்கு எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை.

மறுநாள் காலையில், 41 வயதான அவருக்கு திடீரென சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், வாந்தியும் எடுத்துள்ளார்.

இதையடுத்து அவரது பெண் தோழி உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.. இருப்பினும், அதைக் கேட்காத அந்த நபர், ஏற்கனவே இதற்கு முன்பும் வயாகரா எடுத்துக் கொண்ட போது இதுபோன்ற அறிகுறிகள் இருந்ததாகவும் இது பெரிய விஷயம் இல்லை என்றும் கூறிவிட்டார்.

பரிதாபமாக உயிரிழப்பு

ஆனால், இதுவே அவருக்கு எமனாக மாறும் என்பதை அவர் துளியும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கொஞ்ச நேரத்தில் உடல் சரியாகிவிடும் என்றே அவர் நினைத்துள்ளார். இருப்பினும், அதற்கு மாறாக அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துள்ளது.

இதையடுத்து அவரை அருகே இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

என்ன காரணம்

மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறையும் போது, ​​​​செரிப்ரோவாஸ்குலர் ரத்தக்கசிவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “எந்தவொரு இணை நோயும் இல்லாத 41 வயது ஆண் ஒருவர் தனது பெண் தோழியுடன் ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.

அவர் இரவில் மதுவுடன் 2 மாத்திரைகள் சில்டெனாபில் (தலா 50 மிகி) எடுத்துக் கொண்டுள்ளார்.

மறுநாள் காலையில் அவருக்கு எதிர்பாராத உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்” என்று கூறினர்.

உறைந்த ரத்தம்

இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 300 கிராம் எடையுள்ள ரத்தம் உறைந்திருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

மது மற்றும் மருந்துகளின் கலவையும், ஏற்கனவே இருந்த உயர் ரத்த அழுத்தமும் அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ ஆலோசனையின்றி வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே உதாரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version