Site icon ilakkiyainfo

இதுதான் காரணம்.. அரசியல் கட்சி ஆரம்பிக்காதது ஏன்? நீண்ட நாட்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதாக கூறி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென்று தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வகையில் புதிய கட்சி துவங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

ஆனால் திடீரென்று அவர் அரசியல் கட்சி துவங்குவதை கைவிட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன.

இந்நிலையில் தான் அரசியல் கட்சி துவங்காததற்கான முக்கிய காரணத்தை நடிகர் ரஜினிகாந்தே வெளிப்படையாக பேசியுள்ளார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையின் 25வது ஆண்டு விழாவில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்காதது ஏன்? என்பது பற்றியும், அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

 

நான் அரசியலுக்கு வர முடிவு செய்திருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக கொரோனா பரவியது. கொரோனா 2வது அலை வந்தது.

ஆனால் நான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டேன். இதில் இருந்து பின்னால் போகமுடியாது. இதுபற்றி நான் டாக்டர்களிடம் கூறினேன்.

அப்போது டாக்டர்கள், டாக்டர் என்ற முறையில் என்னிடம் சில விஷயங்களை தெரிவித்தனர். கொரோனா 2வது அலை துவங்கி விட்டது.

இந்த வேளையில் மக்களை சந்திப்பது, பிரசாரம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய கூடாது. ஜெர்மனி, இங்கிலாந்தில் 2வது அலை வந்ததை குறிப்பிட்டு இதை தெரிவித்தனர்.

மேலும் ஒருவேளை மக்களை சந்திப்பது, பிரசாரம் செய்வது என இருந்தால் 10 அடி தூர இடைவெளி விட்டு தான் செல்ல வேண்டும் என கூறினார்கள்.

அனைத்து இடங்களிலும் மாஸ்க் போட்டு தான் போக வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தனர்.

ஆனால் நான் வேனில் ஏறினாலே மாஸ்க் எடுக்கும்படி தான் முதலில் கூறுவார்கள். கூட்டத்தை விட்டு 10 அடி தூரத்தில் நிற்க வேண்டும் என்பதற்கு சான்ஸே கிடையாது.

இப்படியான சூழலில் நான் என்ன செய்ய முடியும்?. இதை எப்படி வெளியே நான் சொல்ல. சொன்னாலும் கூட அரசியலுக்கு வருவதில் பயந்துவிட்டார்கள் என்பார்கள் என்றேன்.

அப்போது டாக்டர் என்னிடம் எந்த மீடியாவாக இருந்தாலும், ரசிகர்களாக இருந்தாலும் என்னை கூப்பிடுங்கள் அவர்களிடம் உங்கள் உடல் நலம் குறித்து நான் வந்து கூறுகிறேன். இதனை கூறுவதில் பயம் ஒன்று வேண்டாம்.

உடல் நலம் மிகவும் முக்கியம். நாம் ஒன்றும் பொய்சொல்லவில்லை என கூறினார். இதையடுத்து தான் நான் ஓபனாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறினேன்” என்றார்.

 

 

Exit mobile version