2022 ஒக்டோபர் மாதம் 8-ம் திகதி இரசியா கிறிமியாவிற்கு அமைத்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இரசியா உக்ரேன் மக்களையும் குடிசார் உட்கட்டுமானங்கள் மீதும் பெருமளவு ஏவுகணைத்தாக்குதல்களை மேற்கொள்கின்றது.

2023 மார்ச் 9-ம் திகதி மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் (hypersonic) 81 ஏவுகணைகளை இரசியா உக்ரேனின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து வீசியது.

அவற்றில் 34 வழிகாட்டல் (cruise) ஏவுகணைக்ளை இடைமறித்து அழித்துவிட்டதாக உக்ரேன் மார்தட்டுகின்றது. இரசியா Kinzhal Hypersonic Missilesகளை இடை மறித்து அழிக்கும் ஆற்றல் உக்ரேனிடம் இல்லை.

அவற்றை இரசியா பெருமளவில் பாவித்தால் அது போரின் உக்கிரத்தை அதிகரிக்கும் என்கின்றார் அமெரிக்காவின் முன்னாள் வான்படைத் தளபதி Colonel Jeff Fisher.

இரசியாவிடம் ஏவுகணைக் கையிருப்பு போதியதா?

இரசியாவிற்கான குறைக்கடத்திகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உதிரிப்பாகங்கள் ஏற்றுமதிமீது மேற்கு நாடுகள் தடை விதித்ததை தொடர்ந்து இரசியாவின் தொழில்நுட்பம் மிக்க படைக்கலன்களை உற்பத்தி செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான இரசியப் படையெடுப்பை நாளை தனக்கும் இது நடக்கலாம் என்ற கரிசனையுடன் இருக்கும் எஸ்த்தோனியா நாட்டின் உளவுத்துறை 2023 ஜனவரியில் இரசியாவிடமுள்ள ஏவுகணைக் கையிருப்பு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில்முடிந்துவிடும் என அறிவித்திருந்தது.

இதை ஏற்க மறுத்த சில படைத்துறை ஆய்வாளர்கள் இரசியாவின் ஏவுகணைக் கையிருப்பு இன்னும் ஓராண்டுக்கு நின்று பிடிக்கலாம் என்றனர்.

2023 மார்ச் மாதம் 9-ம் திகதி இரசியா உக்ரேன் மீது:

1) KH-101/KH-55 வழிகாட்டல் ஏவுகணைகள் இருபத்தியெட்டு

2) கடலில் இருந்து Kalibr ஏவுகணைகள் இருபது

3) KH-22 வழிகாட்டல் ஏவுகணைகள் ஆறு

4) KH-31 கப்பல்களை அழிக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் இரண்டு

5) KH-22 கப்பல்களை அழிக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் ஆறு

6) KH-59 தரையில் இருந்து தரைக்கு வானுக்கு ஏவும் ஏவுகணைகள் ஆறு

ஆகியவை உள்ளிட்ட எண்பத்தியொரு ஏவுகணைகளை வீசியுள்ளது.

உக்ரேனின் தரையில் உள்ள இலக்குகளுக்கு கடல் இலக்குகளுக்கான ஏவுகணிகள் வீசப்பட்டமை இரசியாவிடம் போதிய ஏவுகணைகள் கையில் இருப்பில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

இரசியாவிடம் எந்த அளவு படைக்கலன்களும் சுடுகலன்களும் கையிருப்பில் உள்ளது என்பது பற்றியோ அல்லது அவற்றை உற்பத்தி செய்யும் திறனின் அளவு பற்றியோ இரசியாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

பனிப்போர்க் காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட படைக்கலன்களையும் சுடுகலன்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.

உக்ரேனியப் பாதுகாப்புத்துறையின் கணிப்பின்படி:

1) KH-55 ஏவுகளைகள் உக்ரேன் போரின் முன்னர் 300 இருந்தன அவற்றில் அரைவாசி பாவிக்கப்பட்டு விட்டன.

2) Kinzhal Ballistic ஏவுகணைகள் 42 இருந்தன. அவற்றில் 16 பாவிக்கப்பட்டு விட்டன. மேலும் 16 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

3) கடலில் இருந்து கடலுக்கு ஏவப்படக்கூடிய Onyx ஏவுகணைகளையும் இரசியா உக்ரேனின் தரையில் உள்ள இலக்குகள் மீது ஏவப்பட்டுள்ளன.

4) KH-22, KH-32 ஆகிய ஏவுகணைகள் உக்ரேனுக்கு எதிராக இரசியா போர் ஆரம்பிக்க முன்னர் 370 இருந்தன. அவற்றில் 250 பாவிக்கப் பட்டு விட்டன. KH-35 ஏவுகணைகள் போருக்கு முன்னர் 500 கையிருப்பில் இரசியாவிடம் இருந்தன. போரின் போது மேலும் 360 உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றில் 504 பாவிக்கப்பட்டுவிட்டன.

2022இன் பிற்பகுதியில் உக்ரேனின் பாதுகாப்புத்துறையின் மேற்படி கணிப்புக்கள வெளிவிடப்பட்டன.

பின்னர் பல ஏவுகணைளை இரசியா பவித்துள்ளது. மேலும் ஏவுகணைகளை இரசியா உற்பத்தி செய்திருக்கலாம். உக்ரேனின் கணிப்புக்கள் முழுமையாக நம்பக் கூடியவை அல்ல.

உக்ரேனிய உளவுத்துறையின் கணிப்பீட்டின் படி ஒவ்வொரு தாக்குதலிலும் இரசியா 80 ஏவுகணைகளை வீசுகின்றன.

அவை பலதரப்பட்ட ஏவுகணைகளின் கலவையாக உள்ளன. இரசியாவால் ஒரு மாதத்திற்கு 50 வழிகாட்டல் ஏவுகணைகளை (Cruise Missiles) உற்பத்தி செய்ய முடியும். இரசியாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் உற்பத்தி குறைக்கடத்தி தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

2022 டிசம்பரில் இரசியா தொடர்ச்சியாகப் பாவிக்கக் கூடிய Kalibrஏவுகணைகள் உள்ளன என அறிவித்தது.

இரசியா ஈரானிடமிருந்தும் ஏவுகணைகளை வாங்குகின்றது.

அமெரிக்காவின் லேசர் படைக்கலன்கள்

ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை இரசியாவும் சீனாவும் உற்பத்தி செய்யத் தொடங்கியதில் இருந்து அவற்றை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்க தொழில்நுட்பம் வளர்ச்சி நிலையில் உள்ளது என்று சொல்லப்படுகின்ற வேளையில் சிலர் ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை எதிர்க்கக் கூடிய நிலையில் அமெரிக்கா இருக்கின்றது என்கின்றனர்.

அமெரிக்காவின் ஒலிமீவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை எதிர்க்கும் படைக்கலன்கள் லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் அசையும் இலக்குகளை அழிக்கக் கூடியவை.

லேசர் கதிர்கள் ஒளியின் வேகத்தில் பாய்வதால் ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இலகுவில் அழிக்கும் என்கின்றனர்.

அதை அமெரிக்கா உக்ரேன் போர்க்களத்தில் இரகசியமாக தேர்வுக்காக பயன் படுத்துமா?

 

இரசியாவிடமுள்ள ஏவுகணைகளில் பயங்கரமானவை Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளாகும்.

இவை ஒலியின் வேகத்திலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. உக்ரேன் போரின் ஆரம்பத்தின் போது உக்ரேனின் மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கீழ் படைக்கலக் களஞ்சியம் ஒன்றின் மீது Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை இரசியா வீசியிருந்தது.

ஆனால் அதிக அளவிலான அதாவது ஆறு Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் மார்ச் 9-ம் திகதி பாவிக்கப்பட்டுள்ளன.

உக்ரேன் புதிய வகைப் படைக்கலன்களை பெற்றுக் கொண்டு மார்ச் மாத இறுதியில் இரசியப் படையினர் மீது கடும் தாக்குதல்களைச் செய்யும் திட்டத்துடன் இருக்கின்றது.

அதை முன் கூட்டியே முறிக்கும் நோக்கத்துடன் மார்ச் 9-ம் திகதித் தாக்குதல் அமைந்துள்ளது.

Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் மிகவும் வேகமாகச் செல்வதாலும் தனது பறப்புப் பாதையை மாற்றிக் கொண்டு செல்லக் கூடியவை என்பதாலும் அவற்றை இடைமறித்து தாக்கி அழிக்க முடியாது.

இடைமறிப்பு தாக்குதலை முறியடிக்க பெருமளவு ஏவுகணைகளை வீச வேண்டும் அல்லது ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை வீச வேண்டும்.

அமெரிக்காவின் Newsweek சஞ்சிகை அமெரிக்காவின் Patriot ஏவுகணை எதிர்ப்பு முறைமை உக்ரேனுக்கு துரிதமாகப் போய்ச் சேர்ந்தால் Kinzhal மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகளை முறியடிக்கலாம் என உக்ரேன் படையினர் சொன்னதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் Patriot ஏவுகணை எதிர்ப்பு முறைமை சவுதியாவில் இருந்தும் யேமனில் செயற்படும் போராளிக் குழுக்கள் சவுதி மீது வீசிய சாதாரண ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை.

கலினின்கிராட்டில் Kinzhal வைத்து மிரட்டும் இரசியா

Kinzhal ஏவுகணைகள் 1250 மைல்கள் தூரம்வரை பாயக் கூடியவை. தாங்கிச் செல்லக் Kinzhal ஏவுகணைகள் பலவற்றை இரசியா Mig-31 போர்விமானங்களில் பொருத்தி தனக்கு சொந்தமான கலிலின்கிராட் நிலப்பரப்பில் நிறுத்தி வைத்துள்ளது.

போலாந்திற்கும் எஸ்தோனியாவிற்கும் இடையில் உள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இருந்து Mig-31 போர்விமானங்களால் ஐரோப்பாவின் எப்பகுதியையும் அணுக்குண்டுகளால் Kinzhal மூலம் தாக்க முடியும்.

உக்ரேன் போரில் நேட்டோப்படைகள் நேரடியாகத் தலையிட்டால் ஐரோப்பாமீது அணுக்குண்டுகளை வீசுவேன் என்ற மிரட்டலுடன் விளடிமீர் புட்டீன் உக்ரேன் மீதான தாக்குதலை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார்.

KINZHALஇன் குறைபாடுகள்

Kinzhal ஏவுகணைகள் வீசப்பட முன்னர் அது தாக்க வேண்டிய இலக்கின் ஆயங்கள் (coordinates) பற்றிய தகவல் அதில் பதிவேற்றப்படும்.

அது பாய்ந்து கொண்டிருக்கையில் ஏற்படும் இடையீடுகளால் அதன் பாய்ச்சல் பாதையில் ஏற்படும் சிறு மாற்றம் அதை அதன் இலக்கில் இருந்து பெருமளவு தூரத்தில் விழச்செய்யும்.

அதனால் Kinzhal ஏவுகணைகளால் துல்லியமாகத் தாக்க முடியாமல் போய்விடும். செய்மதிகள் மூலம் அவை அவதானிக்கப்படலாம்.

Kinzhal ஏவுகணைகள் உக்ரேனில் பெரும் சொத்தழிவை ஏற்படுத்தலாம் ஆனால் உக்ரேன் படையினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த முடியாது.

விளடிமீர் புட்டீன் உக்ரேன் போரை படையினரும் படைக்கலங்களையும் மோதவிடும் போராக நடத்தாமல் உக்ரேனிய அப்பாவிகளின் வாழ்வாதாரங்களை அழிக்கும் போராக நடத்துகின்றார்.

இரசியாவின் ஏவுகணைத் தட்டுப்பாடு இரசிய சீன உறவை நெருக்கமாக்கலாம். இரசியாவை சீனாவின் பக்கத்துணை (Side kick) ஆக்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version