யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் காணியொன்றின் வேலிகளை உடைத்து, காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வீடொன்றை இடித்தழித்த பெண் உட்பட இருவர் இன்று (12) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டை இடிக்க பயன்படுத்திய JCB வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள காணியொன்றில் ஆட்களின்றி கிடந்த வீட்டை சுற்றி கம்பித் தூண்கள் நடப்பட்டு, முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன.

அந்த காணிக்குள் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை JCB இயந்திரம் ஒன்றினை வாடகைக்கு எடுத்துச் சென்று, வாகனத்துக்குள் உடனமர்ந்து சாரதியின் உதவியோடு பெண்ணொருவர், வேலிகளை இயந்திரத்தால் அகற்றி, உள்நுழைந்து காணியில் இருந்த வீட்டை இடித்து, தரைமட்டமாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், காணிக்குள் அத்துமீறி நுழைந்த பெண்ணையும், இயந்திர சாரதியையும் கைதுசெய்ததோடு, JBC இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இரு தரப்பினருக்கு இடையிலான காணி பிரச்சினையே இக்குற்றச் செயலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version