அசாம் மாநிலத்தில் மணமகன் மது அருந்தியதாக மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதோடு அவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியை சேர்ந்தவர் பிரசென்ஜித் ஹலோய்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து இரு தரப்பினர் வீட்டிலும் கல்யாண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

தடுமாறிய மாப்பிள்ளை

அப்போது, மாப்பிள்ளையை மணமேடையில் அமர வைத்து சடங்குகளை உறவினர்கள் நடத்தியுள்ளனர். திருமண கோலத்தில் அமர்ந்திருந்த மணமகன் தள்ளாடியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த பெண் வீட்டார் அவரிடம் பேச்சு கொடுக்க, அப்போது அவர் மது அருந்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் அதனை மறுத்திருக்கின்றனர்.

வாக்குவாதம்

இதனால் இருவீட்டார் இடையே வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. அப்போது, மணமகன் உறவினர்கள் சிலரும் மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே இதுகுறித்து அறிந்த மணமகள் திருமணத்தை நிறுத்துவதாக சொல்லியிருக்கிறார்.

இதனால் அதிர்ந்துபோன உறவினர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், இதற்கிடையே வாக்குவாதமும் கைமீறி சென்றிருக்கிறது.

புகார்

இதனை தொடர்ந்து மணப்பெண் அருகில் உள்ள காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சமரசம் செய்த நிலையில் மணமகன் வீட்டினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கின்றனர். திருமணத்தில் மணமகன் மது அருந்தியதால் மணமகளே திருமணத்தை நிறுத்திய சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version