கச்சத்தீவில் இரும்புத் தகடுகளை தேடிச் சென்றபோது பார்த்து, படம் பிடித்ததாக பங்குத் தந்தை வசந்தன் கூறும் புத்தர் சிலை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சர்ச்சைக்குரிய தீவான கச்சதீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
எனினும், கச்சத் தீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.
புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை கடற்படை நிராகரித்தாலும், கச்சதீவில் புத்தர் சிலை காணப்படும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கும் சிங்கள கடற்படையினரின் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தி புத்தர் சிலைகளை அகற்ற இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என இந்திய பக்தர்கள் மற்றும் இரு நாட்டு பங்குத் தந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“இரும்புத் தகடுகளைத் தேடிச் சென்றபோது கண்ணில் பட்ட புத்தர் சிலைகள்”
இதுகுறித்து நெடுந்தீவு பங்குதந்தை வசந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்திய இலங்கை மக்களின் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக உள்ள புனித அந்தோணியார் கோவில் மட்டுமே கச்சத்தீவில் இருந்து வந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படை வீரர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள கடற்படை தளத்திற்கு எதிரே இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டுள்ளதாக” கூறினார்.
மேலும், “இந்த விகாரை கடந்த 3 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டதாக இருக்கலாம். இந்த ஆண்டு வருடாந்திர திருவிழா முடிந்த மறு நாள் நெடுந்தீவில் இருந்து திருவிழாவிற்காக எடுத்து வந்த இரும்புத் தகடுகள் சிலவற்றைக் காணவில்லை.
அதைத் தேடிச் சென்றபோது விகாரை இருப்பதை முதலில் நான் பார்த்து எனது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டேன்.
கச்சத்தீவில் அரச மரம் இல்லாத நிலையில் இலங்கையில் இருந்து அரச மரக் கன்றுகள் கொண்டுவரப்பட்டு கச்சத்தீவில் வைத்து அரச மரத்தை வளர்த்து, அதற்குப் பிறகு தற்போது அங்கு 3 அடி உயரத்தில் சிலையுடன் கூடிய விகாரை மற்றும் 5 அடி உயரத்துடன் விகாரை என இரண்டு விகாரை கட்டப்பட்டுள்ளது,” என்று கூறினார் வசந்தன்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாக்கு வரும் பங்குத் தந்தைகள் மற்றும் பக்தர்கள் யாரும் புத்தர் சிலையைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பனை ஓலைகளால் நான்கு புறமும் உயரமாக தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளதாக வசந்தன் கூறுகிறார்.
இந்த ஆண்டு திருவிழாவிற்குச் சென்ற இந்திய இலங்கை பங்குத் தந்தைகள் அந்தப் பகுதிக்குச் செல்ல இலங்கை கடற்படை வீரர்கள் அனுமதி மறுத்ததால் பங்குத் தந்தைகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் விசாரித்தபோது அங்கு புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.
“கச்சத்தீவில் நிறுவப்பட்டுள்ள புத்த விகாரையால் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு அனைத்து மதத்தினரும் தங்களின் சுவாமி சிலைகளை வைத்து வழிபடத் தொடங்கினால் கச்சத்தீவில் எதிர்வரும் காலங்களில் மத மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பங்குத் தந்தை வசந்தன்
தற்போது அமைந்துள்ள புத்தர் சிலையால் காலம் காலமாக இரு நாட்டு பக்தர்களும் வழிபடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் வரலாறு மறைக்கப்பட்டு, மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
கச்சத்தீவில் அமைந்துள்ள புத்த விகாரை யாரும் பார்க்காத அளவு உயரமான தட்டிகளைக் கொண்டு மறைத்து வைத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
இலங்கை கடற்படை உடனடியாக உண்மையை மக்கள் மத்தியில் தெரிவிக்கவேண்டும்,” என்று வசந்தன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அதோடு, “புத்த விகாரை அமைத்திருப்பது கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பக்தர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக புத்த சிலைகள் கச்சத்தீவில் இருந்து அகற்றவேண்டும்,” என்று பங்குத் தந்தை வசந்தன் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்
கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
”கச்சத்தீவில் இவ்வளவு காலமாக அந்தோனியார் ஆலயம் மாத்திரம் காணப்பட்டது. தற்போது அங்கு மிகப் பெரியதொரு புத்தர் சிலை எப்படி வந்தது என்பது தான் கேள்வியாக இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்
இன்று இலங்கையில் உள்ளவர்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கின்றவர்களுக்கும், கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்று தெரியும். மீனவர்கள் அங்கு சென்று வருவது, வழிபடுவது வழமையான விடயம்.
ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவான பௌத்த அடையாளங்களை நிறுவி வருகின்றது படைத்தரப்பு. கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை கடற்படை நிறுவியுள்ளது.
கச்சதீவையும் விட்டு வைக்காத ஒரு நிலையாக இருக்கின்றமையை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஆனால், கேட்டால் சொல்வார்கள், கடற்படை வழிபடுவதற்காக அங்கு சிலை வைக்கப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து பதில் வரும். இதை உடனடியாக அகற்ற வேண்டும்,” என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் பிபிசி தமிழ் குழு
இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் வருடாந்திர திருவிழா மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு செய்தி சேகரிப்பதற்காக பிபிசி தமிழ் குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் கச்சத்தீவு சென்றிருந்தது.
அப்போது கச்சத்தீவில் உள்ள இலங்கை கடற்படை முகாமிற்கு எதிரே பனை மரங்களுக்கு மத்தியில் பனை ஓலைகளால் நான்கு புறமும் தடுப்பு வைத்து வேலி அமைத்து மறைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே சில கடற்படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
செய்தியாளர்கள், பங்குத் தந்தைகள், திருவிழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் என யாரையும் அதன் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. அதற்குள் என்ன இருந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு உள்ளேதான் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை இருப்பதாக நெடுந்தீவு பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான பௌத்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணம் – வெடியரசன் கோட்டையில் தமிழர் பண்பாட்டு, மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வரும் விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
நீண்டதோர் யுத்தத்தின் நேரடி விளைவுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டெழ முடியாது தவிக்கும் தமிழ் மக்களது இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் அடியோடு அழிக்கப்பட்டு அல்லது அந்த அடையாளங்களின் முக்கியத்துவமும் தொன்மமும் வலிந்து மறைக்கப்பட்டு அத்தகைய தொல்லிடங்களில் சிங்கள பௌத்த அடையாளங்களான விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் துறவி மடங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிக முனைப்போடு செயலுருப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று என நீளும் இந்த ஆக்கிரமிப்புப் பட்டியல் தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை தனது ஆக்கிரமிப்பின் கால்களை ஆழப் பதித்துள்ளமை, இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் இயல்பு வாழ்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பௌத்தம் என்பது ஒரு மத அடையாளமே அன்றி சிங்கள இனத்துக்கான அடையாளம் அல்ல என்பதை அடியோடு மறுத்து தமிழினத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலையை நிகழ்த்துவதென்பது, இந்த நாட்டின் ஆட்சியாளருடைய தாராளவாதம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.
தெரியவந்தது எப்படி?
“புத்தர் சிலையை அகற்றாவிட்டால் பிரச்னை உருவாகும்”
இதுகுறித்து கச்சத்தீவு வருடாந்திர திருவிழா குழு பொறுப்பாளர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் காலங்காலமாக கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் இரு நாட்டு பக்தர்களும் இரு நாட்டு அரசும் பாரம்பரிய முறைப்படி மத நல்லிணக்க திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
கச்சத்தீவில் இன்று புத்தர் சிலை நிறுவி வழிபடத் தொடங்கினால் நாளை இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பல மதத்தினரும் அவர்களுக்குப் பிரியமான தெய்வங்களின் சிலைகளை வைத்து வழிபடும் சூழ்நிலை ஏற்படும் எனவே அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்,” என்று கூறினார்.
மேற்கொண்டு பேசிய ஜேசுராஜா, “கச்சத்தீவில் புத்தர் சிலை வைப்பதற்கு தமிழக பாரம்பரிய மீனவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்.
உடனடியாக புத்தர் சிலையை அகற்ற இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
இல்லையெனில் இதனால் மிகப்பெரிய பிரச்னை உருவாகக்கூடும். எனவே மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுடன் பேசி புத்தர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
கச்சதீவில் எந்தவொரு புத்தர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.
கச்சதீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் தொலைபேசியூடாக வினவியபோது அவர் இதைக் குறிப்பிட்டார்.
”கச்சதீவில் நானும் இருந்தேன். அந்த இடத்தில் ஊடகவியலாளர்களும் இருந்தார்கள். அவ்வாறு சிலை வைக்கப்பட்டிருந்தாலும், அங்கு சென்றவர்கள் அதைப் பார்வையிட்டிருப்பார்கள் அல்லவா?
திருவிழாவின்போது, தீவு முழுவதும் அந்த சந்தர்ப்பத்தில் சுமார் 6000 பேர் வரை இருந்தார்கள். அருட்தந்தையர்களும் சென்றார்கள். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால், அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும் அல்லவா?
புத்தர் சிலையை மறைத்து வைக்க முடியாது. அவ்வாறு புத்தர் சிலை அங்கிருந்தால் நிச்சயமாக அவதானித்திருக்க வேண்டும். படமொன்றையாவது அப்போது எடுத்திருக்க முடியும் அல்லவா?
அவ்வாறு ஒன்று இல்லை. நானும் தீவு முழுவதும் சென்றேன். நான் அவ்வாறானதொன்றை அவதானிக்கவில்லை,” என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத் தந்தை தேவ சகாயம், “திருவிழாவில் இலங்கை, இந்திய தமிழ் பக்தர்கள் மட்டுமில்லாமல் இலங்கையில் உள்ள சிங்கள பக்தர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வரும் நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டு சிறு ஆலயம் அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி பக்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது இந்திய, இலங்கை மக்களிடையே உள்ள சமூகமான உறவைப் பாதிக்கும்,” என்று கூறினார்.
ஆகையால் தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து இலங்கை அரசிடம் பேசி உடனடியாக அந்த புத்த விகாரையை அகற்றவேண்டும் என வேர்க்கோடு பங்குத் தந்தை தேவ சகாயம் இரு நாட்டு அரசுக்கும் கோரிக்கை வைத்தார்.