நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்துவந்த மூன்றாம் சார்லஸின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா, வரும் மே 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அந்த நாட்டின் புதிய மன்னராக அரியணை ஏறினார் மூன்றாம் சார்லஸ். புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு எதிராகவும், மன்னராட்சிக்கு எதிராகவும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்துவந்த மூன்றாம் சார்லஸின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா, வரும் மே 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு போராட்டக்களத்திலுள்ள இங்கிலாந்து மக்களை மேலும் கொதிப்படைய வைத்திருக்கிறது.
ராணி எலிசபெத்- மன்னர் சார்லஸ்
புதிய மன்னர் சார்லஸ்; வெடித்த போராட்டம்:
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகள் கோலோச்சிய இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்திலுள்ள அரண்மனையில் காலமானார்.
ராணியின் மறைவைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
அப்போதே சார்லஸ் மன்னராவதற்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. குறிப்பாக, மகாராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், `சார்லஸ்தான் புதிய மன்னர்’ என்று அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, `யார் அவரைத் தேர்வுசெய்தது?’ என்று சத்தமாக ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதையடுத்து அவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். அந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில், இங்கிலாந்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார் மூன்றாம் சார்லஸ்.
ஆனால் அவர் பொறுப்பேற்ற அடுத்த நாளே `Not My King’ (அவர் எங்கள் மன்னர் அல்ல) என்ற பதாகைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.
`இத்தனை ஆண்டுகள் கழித்தும், இந்த நூற்றாண்டிலும்கூட மன்னராட்சியா?’ என வெகுண்டெழுந்து முடியாட்சிக்கு எதிராக இங்கிலாந்து மக்கள் எழுப்பிய #NotMyKing என்ற கோஷம் வீதிகளையும், ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களையும் தீயாக ஆக்கிரமித்தன.
தொடர்ந்து, மூன்றாம் சார்லஸ் செல்லும் இடங்களிளெல்லாம் எதிர்ப்பு பதாகைகளே காண்பிக்கப்பட்டன. சார்லஸ், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்மீது முட்டைகள் வீசப்பட்டன.
இப்படி எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களையெல்லாம் இங்கிலாந்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்தது.
அதிகாரபூர்வ முடிசூட்டுவிழா; அரண்மனை அறிவிப்பு:
மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டாலும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்துவந்தது.
இந்த நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது.
இந்த முடிசூட்டு விழா இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியிலுள்ள அப்பே தேவாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
சார்லஸின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பர்யமாக பயன்படுத்திவந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த முடிசூட்டு விழாவின்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பர்ய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த அரியணையில் அமர்வார்.
அதைத் தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார்.
அதன் பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் மூன்றாம் சார்லஸுக்குச் சூட்டப்படும். தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்துகொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார்.
அந்த தினமே, மன்னர் சார்லஸின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.
கோலாகலக் கொண்டாட்டம்; உலகத் தலைவர்களுக்கு அழைப்பு:
மன்னர் மூன்றாம் சார்லளின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க அவரின் மகன் இளவரசர் வில்லியம், இளவரசரின் மனைவி கேட், மற்றோர் இளவரசர் ஹாரி-மேகன் மார்கலே தம்பதியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, கோலாகலமாக நடைபெறவிருக்கும் இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்க உலகம் முழுவதுமுள்ள சுமார் 2,000 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்குப் பெருமை, கௌரவம் சேர்க்கும்விதமாக மே 8-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.
ஒருபக்கம் கோலாகலமாக மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு அரண்மனை தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், முடியாட்சிக்கு எதிராக மக்களும் போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.