மெரிக்க மத்திய உளவுத்துறை (சி.ஐ.ஏ) தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் தலைமையிலான குழுவினர் அண்மையில் மேற்கொண்டிருந்த இலங்கை விஜயம் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன.

இந்த வருகையின்போது உயரிய இரகசிய விஜயத்துக்குரிய இராஜதந்திர மரபுகளை இருதரப்புகளுமே பின்பற்றியிருந்தன.

மறுபுறம் இந்தியா கூட இந்த விஜயத்தை அறிந்திருக்கவில்லை என்பது முக்கியமானதொரு விடயமாகும். 

இந்திய வான்பரப்பில் இரு விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரிய பின்னரே அமெரிக்க மத்திய உளவுத்துறையினரின் விஜயம் குறித்து இந்தியா அறிந்துள்ளதுடன், இவ்விஜயத்தின் இறுதி இலக்கு ‘இலங்கை’ என தெரியவந்த பின்னர் டெல்லி தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க மத்திய உளவுத்துறையின் இலங்கைக்கான திட்டம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டதுடன், அவற்றுக்கு மறுமொழி அளிப்பதில் இரு தரப்பினரும் இன்றளவில் மௌனமாகவே உள்ளனர். 

எவ்வாறாயினும், அமெரிக்க மத்திய உளவுத்துறை தலைவர் உள்ளிட்டவர்களின் இலங்கை விஜயத்தின்போது அரச உயர் மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்புகளில் முக்கிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அவற்றில் பிரதானமானது, அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை ஸ்தாபிப்பதாகும். இந்த அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை அமெரிக்க அரசின் உதவித்திட்டமாக வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டால், அவ்விமான நிலையத்தை பயன்படுத்தி இலங்கைக்குள் வரும் அல்லது வெளிச்செல்லும் எந்தவொரு நபர் குறித்த தகவல்களும் உடனுக்குடன் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனினால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று, மேலும் இரு திட்டங்களுக்கான யோசனைகளையும் அமெரிக்க மத்திய உளவுத்துறையினர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்ற கேபிள் இணைப்புகளுக்கு பதிலாக புதிய இணைப்பு கட்டமைப்பு வழங்க முடியும் எனவும் அமெரிக்க மத்திய உளவுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டமைப்பை வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் அனைத்தையுமே அமெரிக்க உதவித் திட்டங்களாக இலங்கைக்கு வழங்க விரும்புவதாக அமெரிக்க மத்திய உளவுத்துறையின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அமெரிக்க மத்திய உளவுத்துறையின் இந்த திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியில் பல அரசியல் மேடைகளிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அமைச்சரவை பேச்சாளரிடம் கூட இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

ஆனால், எவ்விதமான நேரடி பதில்களையும் அரசாங்கம் வழங்கவில்லை. மறுபுறம், அமெரிக்க மத்திய உளவுத்துறையின் யோசனை திட்டங்கள் தொடர்பில் இந்தியா முழுமையாக அறிந்துள்ள போதிலும், கருத்துக்களை கூறுவதை தவிர்த்துக்கொண்டுள்ளதாக பூகோள பாதுகாப்பு துறைசார் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாதுகாப்பு துறைசார் இராஜதந்திரத்தில் அமெரிக்கா, இலங்கையுடன் நேரடி மூலோபாய தொடர்புகளை வைத்துக்கொள்வதே அமெரிக்க மத்திய உளவுத்துறையினரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இலங்கையுடனான இத்தகைய நேரடி பாதுகாப்பு தொடர்புகளை இந்தியா எந்தளவு அனுமதிக்கும் என்பதில் சந்தேகங்களே உள்ளன.

குறிப்பாக, கடலுக்கு அடியிலான இணைப்புகளை அமெரிக்காவுடன் இணைந்து புதுப்பித்தல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் தகவல்களை அறியும் கட்டமைப்பை உருவாக்குதல் என்பன இந்திய தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையவை ஆகும்.

எனவே, இலங்கை நோக்கிய அமெரிக்காவின் புதிய நகர்வுகளில் இந்தியாவின் கரிசனைகள் அதிகமாக இருக்கும்.

மறுபுறம் அமெரிக்க திட்டங்களில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் தேசிய அரசியலில் மாத்திரமன்றி, பிராந்தியத்திலும் எதிர்வலைகளை உருவாக்கக்கூடும்.

ஏனெனில், அமெரிக்காவின் பாதுகாப்பு நகர்வுகள் இந்து மா சமுத்திரத்தையும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தையும் உள்ளடக்கும் வகையில் இலங்கையிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது.

ஏற்கனவே, குவாட் போன்ற கூட்டணிகளுக்கு தலைமைத்துவம் தாங்கி இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய அமெரிக்காவின் புதிய நகர்வுகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையிலேயே இலங்கையிடம் அமெரிக்கா முக்கிய மூன்று திட்டங்களான தகவல் பரிமாற்ற கட்டமைப்பு, நீர்மூழ்கி தகவல் மையம் மற்றும் புதிய கேபிள் இணைப்பு ஆகிய திட்டங்களை முன்வைத்துள்ளது.

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply

Exit mobile version