முக்கிய அம்சங்கள்

• பதிண்டா ராணுவ நிலையம் இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெடிமருந்து கிடங்குகளில் ஒன்றாகும்.

• இந்த ராணுவ நிலையம் குடியிருப்பு பகுதியில் இருந்து விலகி உள்ளது.
இங்கு புதன்கிழமை அதிகாலையில் துப்பாக்கி சூடு நடந்தது.

• துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, இது ஒரு பயங்கரவாத சம்பவம் அல்ல.
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

• இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நிலையத்தில் இருந்து ஒரு இன்சாஸ் துப்பாக்கி காணாமல் போனது. நீண்ட தேடுதலுக்கு பிறகு அது புதன்கிழமை மாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ நிலையத்தில் புதன்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள், சாகர் பன்னே, ஆர். கமலேஷ், ஜே. யோகேஷ் குமார், சந்தோஷ் எம். நாகரால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து அவர்கள் விரிவாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

நடந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ராணுவ நிலையத்தில் இருந்து காணாமல் போன துப்பாக்கி குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் ‘பயங்கரவாத தாக்குதல்’ அல்ல என்று பஞ்சாப் காவல்துறை பிபிசியிடம் கூறியுள்ளது. இதேவேளை நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் என குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக மாநில காவல்துறையும் அதனுடன் இணைந்து விசாரணைக்கு ஒத்துழைப்போம் என ராணுவமும் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சரிடம் விளக்கம்

இந்த நிலையில், இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து விளக்கம் அளித்ததாக செய்தி முகமையான ஏஎன்ஐ கூறியுள்ளது.

ராணுவ நிலையத்தில் துப்பாக்கி சூடு
என்ன சொல்கிறது இந்திய ராணுவம்?

ஜெய்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கட்டளைப்பிரிவு வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில், “இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில், துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயம் அடைந்த பீரங்கி பிரிவைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உயிரிழந்தார்கள். வேறு வீரர்களுக்கோ சொத்துகளுக்கோ பாதிப்பில்லை,” என்று கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக சம்பவ பகுதி சீலிடப்பட்டுள்ளது.

“சம்பவத்தின் அனைத்து அம்சங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன இன்சாஸ் துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்கள் சம்பவத்துக்கும் இன்றைய துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது,” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலையில் காணாமல் போன அந்த துப்பாக்கியும் அதன் தோட்டா பேழையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ பகுதியில் தடயவியல் நிபுணர்கள் குழு மாதிரிகளை சேகரித்தனர்.

காவல்துறை என்ன சொல்கிறது?

பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரவாத சம்பவம் அல்ல என்று பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

பதிண்டா காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குராணா, பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ராவிடம் பேசுகையில், “இது தீவிரவாத தாக்குதல் அல்ல. சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது இன்னும் தெரியவில்லை” என்கிறார்.

அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் கூடுதல் எஸ்.பி குராணா தெரிவித்தார்.

பஞ்சாப் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் எஸ்.பி.எஸ். பர்மர், “இது தீவிரவாத தாக்குதல் அல்ல. இந்த தாக்குதல் வெளியில் இருந்து நடக்கவில்லை. ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version