மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் இறந்ததாகப் பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐந்து பெண் குழந்தைகளை வைத்திருக்கும் அந்தப் பெண்ணின் இறப்புக்கு காரணம் என்ன?

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 31 வயது பெண்மணியான நாகலட்சுமி என்பவர், புதன்கிழமை திருமங்கலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் தம்மை அவமானப்படுத்தியதாலேயே தான் இப்படிச் செய்து கொள்வதாக கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருக்கிறார் என்று வழக்கில் கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை தேடிவருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் சுமார் 23 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மையிட்டான்பட்டி என்ற கிராமம்.

அந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி நாகலட்சுமி. இந்தத் தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நீண்ட நாட்களாக 100 நாள் பணித் திட்டத்தில் வேலை பார்த்துவந்ததால், அந்தத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக ஒன்றரை ஆண்டுகளாக நாகலட்சுமி பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்றபோது அவரைத் தடுத்த மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோர் நாகலட்சுமி அந்தப் பணிக்கு நியமிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இது தொடர்பான சண்டையில், இவர்கள் மூவரும் நாகலட்சுமியை அடிக்க கையை ஓங்கியதாக நாகலட்சுமி எழுதிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாகலட்சுமி கள்ளிக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து காவல்துறையினர் மையிட்டான் பட்டிக்கு வந்து விசாரித்துச் சென்றுள்ளனர்.

இதற்குப் பிறகும் வீரகுமார், பாலமுருகன், முத்து ஆகியோர் அவருக்கு வேலை வழங்க மறுத்துவிட்டனர்.

பிறகு மீண்டும் நாகலட்சுமி காவல்துறையை அணுகியிருக்கிறார். அப்போது காவல்துறை சரியானவகையில் பதிலளிக்கவில்லை என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மையிட்டான்பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறினார்.

அந்தப் பேருந்து சிவரக்கோட்டை அருகில் சென்றுகொண்டிருந்தபோது நாகலட்சுமி தன்னுடன் இருந்த இரண்டு குழந்தைகளை அருகில் பயணம் செய்த சக பயணிகளிடம் கொடுத்துவிட்டு திடீரென பேருந்தில் இருந்து குதித்தார்.

நாகலட்சுமி பலத்த காயமடைந்த நிலையில், பேருந்து நிறுத்தப்பட்டு, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கள்ளிக்குடி காவல்துறையினர் அவரை அவசர மருத்துவ வாகனம் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை

நாகலட்சுமி கொண்டுவந்திருந்த கைப்பையைச் சோதித்தபோது, அதில் கடிதம் ஒன்று இருந்தது. ” மையிட்டான் பட்டி கிராமத்தில் 100 நாள் பணித்திட்டப் பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் அய்யா என்னை நியமித்தார்.

ஆனால், அந்த வேலையை எனக்குக் கொடுக்க மாட்டேன் என்று அந்த ஊர் மெம்பர் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து என்னை மிகவும் தவறாகப் பேசி என் மனது வருந்தும்வரை என்னைக் கேட்டார்கள்.

நான் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் என்னை திட்டி தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுத்திவிட்டார்கள்.

எனக்கு ஐந்து பெண் குழந்தை. அதனால் வேலை கேட்டது தவறா? கிளர்க், வீரகுமார், பாலமுருகன் என்னை வேலையைவிட்டு விலகச் சொன்னார்கள். அப்படியென்றால் மையிட்டான்பட்டியில் கிளர்க், மெம்பர் வீரகுமாரை வேலையைவிட்டு எடுக்க வேண்டும்.

என் தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணம் அவர்கள்: மையிட்டான்பட்டி கிளர்க் முத்து, வீரகுமார், பாலமுருகன். என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதை செய்தித்தாளில் போடவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குடும்பத்தினர் கூறுவது என்ன?

இந்த சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய நாகலட்சுமியின் கணவர், “ஒன்றரை வருடமாக என் மனைவி இந்த வேலையைப் பார்த்து வருகிறார்.

ஆனால், சமீபமாக வீரகுமாரும் துணைத் தலைவர் நாகரத்தினத்தின் கணவர் பாலமுருகன், எழுத்தர் முத்து ஆகியோர் அவரை வேலை பார்க்கவிடவில்லை.

அவர்கள் இப்படி தகராறு செய்வதால், இந்த வேலை நமக்கு வேண்டாம், கடன் வாங்கி உணவகம் நடத்தலாம் என்று சொல்லி, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். இருந்தாலும் ஒன்றரை வருடமாக பார்த்துவரும் வேலையை ஏன் விடவேண்டும் என்று கூறி அவள் தொடர்ந்து முயன்றாள்.

இவர்கள் மூவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் செய்யும் முறைகேடுகளுக்கு நாகலட்சுமி ஒத்துழைக்காததால்தான் அவளை இந்த வேலையை அவர்கள் செய்யவிடவில்லை. இப்போதுவரை அவர்களைக் கைதுசெய்யவும் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவரும் கூடுதல் ஆட்சியர் சரவணனிடம் இது குறித்து கேட்க முயன்றபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.

குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரகுமார், பாலமுருகன், முத்து ஆகிய மூவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். காவல்துறையினர் அவர்களைத் தேடிவருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version