ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மூன்று நிமிட நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

பிரிட்டனில் ஒரு சிறு குழு மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

ஏழு மணி நேரத்திற்குள், ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியில் மூன்று நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று நீரிழிவு அறக்கட்டளை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தம் 32 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ‘ஆக்டிவிடி ஸ்நாக்’ எந்த செலவும் இல்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டனைச்சேர்ந்த நீரிழிவு அமைப்பு கூறுகிறது.

பிரிட்டனில் சுமார் நான்கு லட்சம் பேர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கும் போது அது இன்சுலினை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் உடலானது வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறது.

இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் பற்றாக்குறையால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் இந்த நிலையைத் தவிர்க்க சீரான இடைவெளியில் செயற்கை இன்சுலின் எடுக்க வேண்டிவருகிறது.

 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலம் அதிகமாக இருந்தால் நோயாளிக்கு பல கடுமையான நோய்கள் ஏற்படலாம். இதில் சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இழப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவை அடங்கும்.

டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தினசரி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது ஒரு சோர்வான பணியாக உள்ளது என்று பிரிட்டன் நீரிழிவு ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன் கூறுகிறார்.

” நமது பழக்க வழக்கங்களில் செய்யப்படும் சில எளிமையான மாற்றங்கள் கொடுக்கும் விளைவுகள் நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கிறது.

நடந்துகொண்டே தொலைபேசியில் பேசுவது, குறிப்பிட்ட இடைவெளியில் உங்கள் இருக்கையை விட்டு எழுந்திருந்து நடக்க நினைவூட்டலை அமைத்துக்கொள்வது போன்றவை ரத்த சர்க்கரையை குறைப்பதில் நல்ல பலனை அளிக்கிறது,” என்றார் அவர்.

“அதன் நீண்ட கால விளைவுகளைப் புரிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சி நடத்துவதில் நாங்கள் உற்சாகமாக உள்ளோம்.”என்று அவர் குறிப்பிட்டார்.

சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவரும், இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளருமான டாக்டர். மேத்யூ காம்ப்பெல், இந்த சிறிய செயலின் விளைவு தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகக்கூறுகிறார்.

‘ஆக்டிவிட்டி ஸ்நாக்’ என்பது டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

அதன்பிறகு அவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யலாம். மற்றவர்களுக்கு, ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இது எளிய வழியாகும்.

இந்த ஆரம்ப கட்ட சோதனையில் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 32 பேர் இரண்டு நாட்களுக்கு, ஏழு மணி நேரம் வரை உட்கார்ந்து, அரை மணி நேர இடைவெளியில் நடைபயிற்சி செய்தனர்.


சர்க்கரை நோய், உடல்நலம்

ஒரு அமர்வில், வழக்கமான இடைவெளியில் நடைப்பயிற்சி செய்தனர். இரண்டாவது அமர்வில் அவர்கள் தொடர்ந்து அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொரு அமர்வின் தொடக்கத்திலிருந்து 48 மணிநேரங்களுக்கு அவர்களின் ரத்த சர்க்கரை அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இதன் போது அனைவரும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டனர். இன்சுலின் அளவையும் மாற்றவில்லை.

48 மணி நேரம் நீடித்த இந்த ஆய்வில், தொடர்ந்து உட்காரும் போது சர்க்கரை அளவு ஒரு லிட்டருக்கு 8.2 எம்எம்ஒஎல்(Millimoles/litre)ஆக இருந்தது. சீரான இடைவெளியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்தது (லிட்டருக்கு 6.9 எம்எம்ஒஎல்).

இந்த அணுகுமுறையின் நீண்ட காலப்பலன்கள புரிந்துகொள்வதற்கு மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக டாக்டர் கேம்ப்பெல் கூறுகிறார்.

“உண்மை என்னவென்றால், மக்கள் மேலும் நடப்பதை ஊக்குவிக்கும் இந்த எளிய வழி, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயனளிக்கும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோய் என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நம் உடலால் உறிஞ்ச முடியாமல் போகும் போது நீரிழிவு நோய் உண்டாக்குகிறது.

நாம் எதையாவது சாப்பிட்டால் நம் உடல் கார்போஹைட்ரேட்டுகளை உடைத்து அவற்றை குளுக்கோஸாக மாற்றுகிறது.

இதற்குப் பிறகு பேன்க்ரியாஸில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இது நமது உடலின் செல்களுக்கு குளுக்கோஸை உறிஞ்சுமாறு அறிவுறுத்துகிறது.

இதனால் நமது உடலில் ஆற்றல் உருவாக்குகிறது.

ஆனால் இன்சுலின் ஓட்டம் நின்றுவிட்டால், நம் உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

சர்க்கரை நோயின் வகைகள்

நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன. ஆனால் வகை 1, வகை 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு ஆகியவை மிகவும் பொதுவானவை.

வகை 1 நீரிழிவு நோயில் கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. இதன் காரணமாக, நமது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இது ஏன் நடக்கிறது என்பதை இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இது பரம்பரை மற்றும் வைரஸ் தொற்றுடன் இணைந்து பார்க்கப்படுகிறது.

டயாபட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் பத்து சதவிகிதம் பேர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டைப் 2 நீரிழிவு நோயில் இன்சுலின், தேவைக்கேற்ப கணையத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை அல்லது ஹார்மோன் சரியாக வேலை செய்வதில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version